Site icon இன்மதி

ஆசிரியர்களைப் பழிவாங்க பயன்படுகிறதா பாலியல் வன்கொடுமை புகார்கள்?

Read in : English

பாலியல் வன்கொடுமை, பாலியல் கொலை, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர், ஆசிரியர், தந்தை என அடுத்தடுத்து அதிர வைக்கும் புகார்களும், சம்பவங்களும் பெண் குழந்தைகள் மீதான பாதுகாப்பை தமிழகத்தில் கேள்வி குறியாக்கியுள்ளன. ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்ளும் மாணவியின் மரணமும், மாணவர்கள் கிண்டல் செய்ததால் கடிதம் எழுதி வைத்து விட்டு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் கடந்த மாதத்தில் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நவம்பர் மாதம் கரூர் வெண்ணைமலை பகுதியில், பாலியல் தொல்லைக்கு ஆளாகி உயிரிழக்கும் கடைசி பெண் நானாக மட்டுமே இருக்க வேண்டுமென கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். மாணவி இறந்த ஓரிரு நாட்களில் அதே பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். மாணவர்கள் தன்னை தவறாக நினைப்பதாகவும், பாலியல் புகாரில் சிக்குவேன் என கிண்டலடிப்பதாகவும் அந்த ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். பள்ளி மட்டுமின்றி கல்லூரிகளிலும் பேராசிரியர்கள் மாணவிகளின் அங்கங்களை தொட்டும், தவறான கண்ணோட்டத்திலும் பேசுவதாக புகார் அளிக்கப்பட்டு போராட்டங்கள் வெடித்தன.

பாலியல் புகார் என்னும் ஆயுதத்தை மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக பிரயோகிக்கும் போக்கு உள்ளதா?பாலியல் புகாரின் உண்மை தன்மை என்ன? தங்களுக்கு பிடிக்காத ஒரு ஆசிரியரை மற்ற ஆசிரியர்கள் பழிவாங்க பாலியல் புகார்களை பயன்படுத்துகிறீர்களா?

பள்ளிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் நாளுக்கு நாள் வைக்கப்படும் பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் இந்த காலகட்டடத்தில் எல்லா புகார்களிலும் முகாந்திரம் உள்ளதா? பாலியல் புகார் என்னும் ஆயுதத்தை மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக பிரயோகிக்கும் போக்கு உள்ளதா?பாலியல் புகாரின் உண்மை தன்மை என்ன? தங்களுக்கு பிடிக்காத ஒரு ஆசிரியரை மற்ற ஆசிரியர்கள் பழிவாங்க பாலியல் புகார்களை பயன்படுத்துகிறீர்களா? மாணவிகளின் பாதுகாப்பை பள்ளிகள் எவ்வாறு உறுதிப்படுத்தும் என்ற கேள்விகள் எழுகின்றன.

இதை பற்றி கருத்து தெரிவிக்கும் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் அண்ணாமலை. “ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களில் சில சம்பவங்கள் உண்மையாகவும், சில சம்பவங்கள் பழிவாங்கும் நோக்கத்துடனும் உள்ளன. ஒருசில மாணவிகள் தவறான ஆசிரியர்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சில இடத்தில் பெற்றோரே பிள்ளைகளை தயார் செய்து ஆசிரியர் மீது பொய் புகார் கூற, சொல்லி பள்ளிக்கு அனுப்பி வைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. அதேபோன்று, ஆசிரியர்களும் காழ்ப்புணர்ச்சியால் தங்களுடன் பணிபுரியும் சக ஆசிரியர் மீது தவறான புகாரை முன் வைக்கின்றனர். இதெல்லாம் அனைத்து பள்ளிகளிலும் நடப்பதில்லை. விசாரணையின் அடிப்படையில் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே இது போன்ற தவறுகள் நடப்பது தெரிய வந்தது.

மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டால் தயங்காமல் புகார் அளிக்கலாம். அளிக்க வேண்டும். மாணவர்களை பெற்ற பிள்ளைகளாக ஆசிரியர்கள் பார்க்க தொடங்கினால் தவறுக்கு இடமிருக்காது. ஆனால், சில இடங்களில் அப்படி நடப்பதில்லை

உண்மையில் தவறிழைத்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டால் தயங்காமல் புகார் அளிக்கலாம். அளிக்க வேண்டும். மாணவர்களை பெற்ற பிள்ளைகளாக ஆசிரியர்கள் பார்க்க தொடங்கினால் தவறுக்கு இடமிருக்காது. ஆனால், சில இடங்களில் அப்படி நடப்பதில்லை, என்கிறார். ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முறையான பயிற்சி இல்லாமல் பட்டம் வாங்கி பணிக்கு வரும் சமீபத்திய போக்கும் இதற்க்கு ஒரு காரணம் என்கிறார் அண்ணாமலை.

கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சி பள்ளி மூலம் வெளியேறிய ஆசிரியர்களுக்கு பணி குறித்த முழுமையான புரிதல் இல்லை. 2012ம் ஆண்டிற்கு பிறகு முறையான பணி ஆணை வழங்காததால், கல்லூரியில் பயிற்சி முடிக்கும் ஆசிரியர்கள் பணிக்கு வருகின்றனர். அவர்களுக்கான மனப்பக்குவமோ , சரியான புரிதலோ இல்லாத நிலையில், சிலர் தங்களது உடல், நடை, பாவனையில் ஆசிரியர்களாக நடந்து கொள்வதில்லை. அதற்கேற்றார் போல் ஆசிரியர், மாணவர்கள் இடையே ஏற்பட்ட தலைமுறை இடைவெளியும் ஏற்பட்டும் இருதரப்பு புரிதலையும் ஒரு கோட்டில் அனுமதிப்பதில்லை. முன்பெல்லாம் ஆசிரியரின் அனுபவம் மாணவர்களை நேர்வழியில் செல்ல வழிநடத்தியது. இப்பொழுது அனுபவமில்லாத ஆசிரியர்கள், மாணவர்களை மதிப்பெண்ணிற்கு மட்டுமே தயார் படுத்தும் ஒரு பயிற்சியாளராக வலம் வருகின்றனர். தனது பணியின் புனிதத்தை தவறு நடந்த இடத்தில் இருந்த ஆசிரியர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை, என்கிறார்.

அதற்காக தான் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதை சிலர் கடைப்பிடித்து மாணவர்களை தனது பிள்ளைகளாக பார்க்கின்றனர். சிலர் தடம் மாறுகின்றனர். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றே, ஆசிரியர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு பெற்றோர் எடுத்து கூற வேண்டும். இப்பொழுதுள்ள மாணவர்கள் ஆசானாக ஆசிரியரை பார்க்கும் பார்வை குறைந்துவிட்டது. அதட்டிய ஆசிரியரை மாணவன் கன்னத்தில் அறையும் காலத்தில் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். அறிவை புகட்டும் ஆசிரியரை தாய், தந்தைக்கு அடுத்த இடத்தில் பார்க்க வேண்டுமென பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. பெற்றோர் தெரியபடுத்துவதும் இல்லை, என்று தனது வருத்தத்தை தெரிவிக்கிறார்.

பண்பாட்டை எடுத்து கூறுவதாலும், மாணவர் என்றால் எப்படி இருக்க வேண்டும், ஆசிரியரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற பயிற்சிகளை அளிப்பதாலும், தவறுகளை கட்டுக்குள் கொண்டு வரலாம். ஏனென்றால், கடந்த 10 ஆண்டுகளில் காணப்படும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், நாம் நமது பண்பாட்டை இழந்து வருகிறோம். 100% குழந்தைகள் தவறான பாதைக்கு செல்ல செல்போன்களே முக்கிய காரணமாக உள்ளது. பெற்றோரும் பிள்ளைகள் மீதும், அவர்களின் நடவடிக்கை மீதும் கவனம் செலுத்துவதுடன், அவர்கள் கூற வருவதை கேட்க வேண்டும், என தனது கருத்தை முடித்துக் கொண்டார்.

குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க பெற்றோரிடத்திலும், பள்ளியிலும் மாற்றம் வர வேண்டும் என்கிறார் மன நல மருத்துவர் சுஜாதா.
ஆசிரியர் பணி என்பது அர்ப்பணிப்பானது. அந்த பணியின் மீதான புரிதல் இன்மையே தவறு செய்ய தூண்டுகிறது. அந்த காலத்தில் இருந்து நமது சமூகம் ஆண், பெண் பாகுபாட்டை அதிகளவில் வெளிப்படுத்தி விட்டது. ஆண்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனப்போக்கு இன்னும் பலரிடம் இருந்து வருகிறது. நான் ஒரு ஆண், தவறு செய்தால் என்ன ஆகிவிடும் என்ற மனநிலை தான் தவறு செய்யும் போது ஆணிற்கு மேலோங்கி விடுகிறது. அதுவும் குழந்தையிடம் தவறு செய்யும் போது அதனால் என்ன செய்து விட முடியும் என்ற அலட்சிய போக்கும் காரணம்.

ஆண்கள் தவறு இழைப்பதற்கு முதன்மை காரணம் குடும்பம். பெற்றோர் தான் குழந்தைகளுக்கு முதல் உதாரணம். அம்மாவை மரியாதையின்றியும், தாழ்த்தியும் அப்பா நடந்து கொண்டால் அதை பார்த்து வளரும் ஆண் குழந்தையின் மனதில் அதே எண்ணம் தான் மேலோங்கி காணப்படும். அம்மாவிடமோ, மனைவியிடமோ, மகளிடமோ தந்தை கன்னியத்துடன் நடந்து கொண்டால் அதை பார்த்து வளரும் ஆண் குழந்தையும் நல்ல மனிதனாக சமூகத்தில் பிரதிபலிப்பான். ஆண் குழந்தைகளை பெற்றோர் கவனமுடன் கையாள வேண்டும். சோஷியல் மீடியா வளர்ச்சி குழந்தைகளை குடும்ப சூழலில் இருந்து பிரித்து விடுகிறது. அனைவரும் செல்போனிற்கு அடிமையாகும் சூழலால், பெற்றோர் அதட்டினால் பிள்ளைகள் கேட்கும் காலம் மாறி, பெற்றோரை பிள்ளைகள் அதட்டும் காலத்தில் பயணிக்கிறோம்.

பிள்ளைகளுக்கு நல்லது, கெட்டது சொல்லி தருவதுடன், அந்தந்த வயதில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சரியான முடிவை எடுக்க கற்று கொடுக்க வேண்டும். இதில் பெற்றோரை போல் ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு. ஏனெனில் பெரும்பாலான நேரங்கள் பள்ளியில் செலவிடப்படுகின்றன. மதிப்பெண்களை மட்டுமே குறியாக வைத்து மாணவர்களை பந்தய குதிரையாக நடத்தும் மனபோக்கு மாற வேண்டும். மதிப்பெண்ணை மட்டும் எடுக்க வைக்கும் பயிற்சியாளராக ஆசிரியர்கள் செயல்படுவதை தவிர்த்து வாழ்க்கையையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதற்காக கல்விதுறையில் தான் மாற்றம் வர வேண்டும். பெண்களின் உடையையோ, உடலையோ விமர்சிப்பதை விட்டு விட்டு ஒரு ஆண் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டுமோ அப்படி வளர்க்க வேண்டும். பெண் பிள்ளைகளும் வரம்பு மீறி செயல்படுவதை தடுக்க வேண்டும். இவை இரண்டும் முதலில் பெற்றோரிடமும், அடுத்ததாக ஆசிரியர்களிடமும் தான் உள்ளது, என்கிறார் சுஜாதா.

Share the Article

Read in : English

Exit mobile version