Site icon இன்மதி

இராஜராஜ சோழனின் ஈழ காசுகளை கண்டெடுத்த பள்ளி மாணவி; பழங்கால பொருட்களை கண்டறிய உதவிய பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் பயிற்சி 

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கண்டுபிடித்த ஈழ காசுக்கள் 

Read in : English

கடந்த திமுக அரசு 2009ம் ஆண்டு பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் (Heritage Club) ஆரம்பிக்க ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதனை பின்பற்றி பள்ளிகளில் இந்த மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த மன்றங்களின் நோக்கம் வரலாறு, தொல்லியல் மற்றும் பாரம்பரியம் குறித்த அறிவை மாணவர்களிடம் பள்ளிப்பருவத்தில் வளர்த்தெடுப்பது. ஆட்சி மாற்றத்தின் பின்பு இந்த மன்றங்கள் தங்கள் பொலிவை இழந்தன. ஆனால் ராமநாதபுரம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளித்து வருகிறது.

இதனால் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகளை விடுமுறை நாட்களில் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் பள்ளி வளாகத்தில் சீனப்பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்தனர். இந்நிலையில் இப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் திருப்புல்லாணியைச் சேர்ந்த கு.முனீஸ்வரி என்ற மாணவி முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகளை கோரைக்குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்துள்ளார். “என்னுடைய தந்தை இந்த காசுகளை கட்டிட வேலை செய்யும் இடத்தில் இருந்து கொண்டுவந்தார். இவற்றை பார்த்தவுடன் ஈழ காசுகள் என்று தெரிந்து விட்டது. எனவே இவற்றை பள்ளிக்கு கொண்டு வந்தேன்,” என்கிறார் மாணவி.

போர் மூலம் இலங்கையை முதலாம் ராஜராஜ சோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுபற்றி இப்பள்ளி ஆசிரியரும் தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலருமான வே.ராஜகுரு கூறியதாவது, வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மன்னர்கள் தங்களின் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளார்கள். அவ்வாறு போர் மூலம் இலங்கையை முதலாம் ராஜராஜ சோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு ஈழக்கருங்காசு எனப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்றும் செம்பால் ஆன ஈழக்கருங்காசுகள் ஆகும்.

தொல்லியல் அறிஞரான  சாந்தலிங்கம் இந்த ஈழக்காசு பற்றி கூறும்போது இக்காசுகளின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் இருக்கும். இக்காசில் உள்ள மனிதன் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை ஒத்திருக்கிறான். ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமன்குண்டு, அழகன்குளம் உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் அதிகம் கிடைத்துள்ளன. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பின் காரணமாக இந்த காசுகள் இங்கே கிடைக்கின்றன, என்கிறார்.

நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலையுடன் பள்ளி மாணவிகள்

திருவாடானை அருகில் சம்மந்தவயல் என்ற ஊரில் கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலையுடன் பள்ளி மாணவிகள்

ராஜகுரு அவர்கள் தங்கள் மாணவர்கள் இந்த ஈழ காசுகளை 2016ம் ஆண்டும் கண்டெடுத்திருக்கிறார்கள் என்கிறார். இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை  சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது. ஏற்கனவே இப்பள்ளி மாணவர்கள் பஞ்சந்தாங்கி, தாதனேந்தலில் சோழர்களின் ஈழக்காசுகள், பால்கரையில் டச்சுக்காரர்களின் துட்டு, திருப்புல்லாணியில் கச்சி வழங்கும் பெருமாள் எனும் பாண்டியர் காசு, ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த காசுகளையும் கண்டெடுத்துள்ளனர் என்கிறார்.

வாய்மொழி வரலாறு, கிராம வழிபாட்டு முறைகள், நாட்டார் வழக்காறுகள் ஆகியவை பற்றி எளிதில் தகவல்களை திரட்டி, ஆய்வு செய்து, ஆவணப்படுத்தமுடியும் என்பதை பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் வரலாற்றைத் தெரிந்தவர்கள் யாராவது ஒருவர் தொடர்ந்து மற்றவர்களிடம் காலம் காலமாய் அதை கடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். வாய்மொழி வரலாறு, கிராம வழிபாட்டு முறைகள், நாட்டார் வழக்காறுகள் ஆகியவை பற்றி எளிதில் தகவல்களை திரட்டி, ஆய்வு செய்து, ஆவணப்படுத்தமுடியும் என்பதையும் பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுத்திருக்கிறோம்.

“பழமையான நாணயங்கள், பானை ஓடுகள், வரலாற்றுச் சின்னங்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும், சிலைகளின் காலத்தைக் கணிக்கவும் மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்படுகிறது. இதனால் பல மாணவர்கள் வரலாற்றுத் தேடல்களில் ஈடுபட்டு பல புதிய வரலாற்றைத் தடயங்களைக் கண்டுபிடித்துள்ளனர். 2012இல் இம்மன்றத்தைச் சேர்ந்த  ஒன்பதாம் வகுப்பு மாணவன் அபுரார் அகமது தனது ஊரான கோரைக்குட்டம் கொற்றக்குடி ஆற்றின் கரையில் தலை இல்லாத சமண தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் மாணவர்களின் வரலாற்றுத் தேடல் தொடங்கியது. முனீஸ்வரி கண்டுபிடித்த ஈழ காசுகள் வரை எங்கள் மாணவர்கள் கண்டுபிடித்த பழம்பொருட்களின் வரிசை மிக நீண்டது,” என்கிறார் ராஜகுரு அவர்கள்.

இந்த தொல்லியல் மன்றத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் சாந்தலிங்கம் அவர்கள் சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் முயற்சியை மிகவும் பாராட்டுகிறார்.

தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தங்கள் ஆட்சியில் பள்ளிகளில் துவங்கிய தொன்மை பாதுகாப்பு மன்றங்களுக்கு அடுத்த வந்த ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றார். தொடங்கப்பட்டவைகளில் ஒரு சில மட்டுமே இயங்கிவருகின்றன. அவற்றில் மிகவும் சிறப்பாக செயல்படுவது  சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றம். அதற்க்கு காரணம் பள்ளி ஆசிரியர் ராஜகுரு மற்றும் அவரது மாணவர்கள், என்று புகழ்கிறார்.

Share the Article

Read in : English

Exit mobile version