Site icon இன்மதி

சொந்த ஊதியத்தில் பள்ளியை புனரமைத்த தூத்துக்குடி ஆசிரியர்

புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி நாசரேட் திருமண்டல அறக்கட்டளை தொடக்கப்பள்ளி

Read in : English

தூத்துகுடி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமையான பள்ளியில் ஒரே ஒரு மாணவனுக்கு பாடம் எடுத்த தலைமை ஆசிரியரின் தன்னலமற்ற சேவையால், வீழும் நிலையில் இருந்த பள்ளி புத்துயிர் பெற்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படுகிறது. கொரோனா ஊரடங்கில் தனக்கு கிடைத்த ஊதிய பணமான ஏழு லட்சம் ரூபாயை பள்ளிக்காக செலவழித்து மாணவர்களின் செல்ல ஆசிரியராக வலம் வருகிறார் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது பண்டாரம்பட்டி கிராமம். அதாவது அனைவருக்கும் எளிதில் தெரிய வேண்டுமென்றால் ஸ்டெர்லைட் அருகில் உள்ள ஒரு சிறிய ஊர். இந்த ஊரில் தூத்துக்குடி நாசரேட் திருமண்டல அறக்கட்டளை தொடக்கப்பள்ளி அரசு உதவிப்பெறும் பள்ளியாக இயங்கி வருகிறது. அறக்கட்டளை மூலம் இயங்குவதால் பள்ளிக்கு ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ்

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டீஷாரால் 1915ம் ஆண்டு இந்த பள்ளி நிறுவப்பட்டது. பிரிட்டீஷ் காரர்கள் கிறிஸ்துவ மதத்தை கல்வி வாயிலாக பரப்புவதற்காக இந்த பள்ளியை அப்பொழுது கட்டியுள்ளனர். நாளடைவில் கிறிஸ்துவ அறக்கட்டளை கீழ் பள்ளி வந்ததும், மாணவர்களுக்கு பாடங்கள் மட்டும் எடுக்கப்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி பராமரிப்பு இல்லாமல் வரலாற்றில் மறையும் தருவாயில் இருந்த போது அதற்கு புத்துயிர் அளிக்க வந்தார் நெல்சன் பொன்ராஜ்.

தூத்துக்குடியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த நெல்சன் பொன்ராஜ் 1992ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்து 2000ம் ஆண்டு வரை 300 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 2012ம் ஆண்டு கூட்டாம்புளி கிராமத்தில் உள்ள உயர்நிலை பள்ளிக்கு ஆசிரியராக பணியாற்ற அழைப்பு வந்துள்ளது. அங்கிருந்து செய்துநங்கநல்லூர் தொடக்கப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணிமாறுதல் பெற்றுள்ளார். புதுக்கோட்டையில் இருந்து செய்துங்கநல்லூருக்கு கிட்டத்தட்ட 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இதற்கு இடையே முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் மூலம் தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் இல்லம் தேடி பொன்ராஜ் கல்வி கற்பித்து வந்துள்ளார். இதையெல்லாம் கவனத்தில் எடுத்து கொண்ட அறக்கட்டளை பொன்ராஜை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு பணி மாறுதல் செய்தது. அதன்பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

2014ம் ஆண்டு கிராமத்திற்குள் வந்ததும் பொன்ராஜ் முன்பு இருந்தது ஒரே ஒரு வகுப்பறை கொண்ட ஓடுகளால் ஆன பள்ளி கட்டிடம். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை இருந்த போதிலும் 7 மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். தலைமை ஆசிரியரான பொன்ராஜ் ஒரே ஒரு மாணவருக்கு மட்டுமே பாடம் எடுக்க வேண்டும். அவர் பெயர் சந்தோஷ்…”எனது வாழ்நாளின் சந்தோஷை மறக்க முடியாது. என்னிடம் வகுப்பில் படித்த ஒரே ஒரு மாணவன் அவன். தற்பொழுது 12ம் வகுப்பு படித்து வருகிறான். ஆனாலும், அவன் என்னுடைய கண்காணிப்பில் தான் இருக்கிறான் “ என்கிறார் பொன்ராஜ். இப்படி ஒரே ஒரு மாணவருக்கு தலைமை ஆசிரியராக இருக்கும் பொன்ராஜை ஆரம்பத்தில் சிலர் ஏளனமாக பார்த்ததுண்டு.

பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எண்ணிய பொன்ராஜ் கிராமம் தோறும் வீடு வீடாக சென்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். கிராமத்தில் ஆண், பெண் என இருவரும் கூலி வேலைக்கு செல்வதால் மாணவர்களை கவனிக்க ஆள் இருக்காது. பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்கள். சரியான உடை, உணவு உள்ளிட்டவை இருக்காது என்பதை அறிந்த பொன்ராஜ் அந்த வழியில் சென்று மாணவர்களே பள்ளிக்கு வர நடவடிக்கை எடுத்துள்ளார்.

பள்ளியில் படிக்கும் 7 மாணவர்களுக்கும் ஆடை எடுத்து தந்துள்ளார். மாதம் ஒருமுறை அவர்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்று பிடித்த உணவுகளை வாங்கி கொடுத்துள்ளார். பள்ளியில் தலைமை ஆசிரியராக சேர்ந்த அதே நாளில் 7 மாணவர்களையும் ஒரே ஒரு ஆசிரியரையும் வைத்து ஆண்டு விழா நடத்தியுள்ளார். தானே நாடகத்தை எழுதி மாணவர்களை நடிக்க வைத்து அதை வீடியோ பதிவு செய்து கிராமத்தினரிடம் ஆண்டு விழாவில் போட்டுக்காட்டியுள்ளார். சுற்றுலா அழைத்து சென்றுள்ளார்.

தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் பொறுப்பெடுத்த போது அவரிடம் இருந்தது ஏழு மாணவர்களும் பழைய பள்ளிக்கட்டடம் மட்டுமே

மாணவர்களின் படிப்பு மட்டுமின்றி, அவர்களின் திறமையும் வளர்வதை கண்ட கிராமத்தினருக்கு பொன்ராஜ் மீது மெல்ல,மெல்ல நல்ல அபிப்ராயம் வர தொடங்கியுள்ளது. ஏழு மாணவர்களை பார்த்த சக குழந்தைகளும் பள்ளிக்கு வர விரும்பினார். இதனால் அடுத்த ஓராண்டில் 2015ம் ஆண்டு பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்தது.

ஆசிரியராக மட்டுமின்றி ஒரு நண்பனாக மாறி பழகியதால் மாணவர்கள் ஆசிரியரிடம் மெல்ல, மெல்ல வர தொடங்கினர். தற்பொழுது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை உயர்ந்தும் பொன்ராஜின் அடுத்த பார்வை பள்ளி கட்டிடம் மீது விழுந்தது. ஒரே அறையில் 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்க வேண்டும். பாழடைந்த கட்டிடம். மழை பெய்தால் வகுப்பறையில் தண்ணீர் தேங்கும் நிலை. இதனால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் இருப்பதை உணர்ந்த பொன்ராஜ் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க முடிவு செய்தார்.

அறக்கட்டளையிடம் பள்ளி கட்டிடத்தின் நிலை குறித்து எடுத்து கூறினார். அவர்கள் லட்சம் ரூபாயை தர முன் வந்தனர். ஆனால் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை கொண்ட பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க 17 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டது. மேலும் 10 லட்சம் ரூபாயை தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமும், கிராமத்தின் பெரியவர்கள் மூலமும் நிதி திரட்டி பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக புதுப்பித்தார். மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வி மட்டும் போதாது என உணர்ந்த பொன்ராஜ், ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்பறையையும் அமைத்தார். அதில் ப்ரொஜெக்டர் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் செயல்படாமல் இருக்க, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு கற்பிக்காமல் வந்த பணத்தை என்ன செய்வது என யோசித்த பொன்ராஜ், பள்ளியில் சுகாதாரமான சமையல் கூடம் மற்றும் கழிப்பறை இல்லாததை உணர்ந்து அதில் செலவிட்டார்.

பள்ளி கட்டிடமானது கொரோனா காலத்தில் தான் புதுப்பிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் செயல்படாமல் இருக்க, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு கற்பிக்காமல் வந்த பணத்தை என்ன செய்வது என யோசித்த பொன்ராஜ், பள்ளியில் சுகாதாரமான சமையல் கூடம் மற்றும் கழிப்பறை இல்லாததை உணர்ந்து அதில் செலவிட்டார். தனது ஊதிய பணமான 7 லட்சம் ரூபாயில் நவீன சமையல் கூடம், கழிப்பறை மற்றும் பொருட்களை வைக்கும் அறைகளை கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா அண்மையில் நடந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததும், பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

அடுத்ததாக, மாணவர்களுக்கு கல்வி கற்க ஆசிரியர்கள் வேண்டும் என்பதை பொன்ராஜ் அறிந்தார். அரசு அங்கீகாரம் மூலம் பள்ளிக்கு தலைமை ஆசிரியரை தவிர்த்து ஒரு ஆசிரியர் மட்டுமே ஒருந்தார். 1-5 வகுப்புகள் வரை உள்ள 81 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே போதாது என நினைத்த பொன்ராஜ் தனது சொந்த செலவில் 3 பேரை பணி நியமனம் செய்தார். அவர்களுக்கு தனது மாத சம்பளத்தில் இருந்து ஊதியம் வழங்கி வருகிறார். தற்பொழுது பொன்ராஜுடன் சேர்ந்த்து ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என 5 ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கைப்படி அரசு அங்கீகாரத்தில் 3 ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவைப்படும் பட்சத்தில் இருவர் மட்டுமே உள்ளனர். இது தொடர்பாக பலமுறை வட்டார மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் முறையிடப்பட்டும் அரசின் கவனம் பள்ளி மீது விழவில்லை.

மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளி கட்டிடம் புதுப்பித்தல், ஆசிரியர்கள் என ஒவ்வொரு படியாக முன்னேறிய பொன்ராஜ், பள்ளிக்கு வரும் மாணவர்களின் நிலையை அறிய ஆரம்பித்தார். பெரும்பலானோர் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதால் அரசு சார்பில் வழங்கப்படும் சீருடைகளை மட்டுமே அவர்கள் உடுத்த வேண்டியதாய் இருந்தது. சீருடை வாங்க முடியாதவர்களுக்கு தனது செலவில் சீருடைகளை வாங்கி தந்துள்ளார். பிறந்த நாள் கொண்டாட முடியாத மாணவர்களுக்கு தானே அழைத்து சென்று புதிய ஆடை வாங்கி கொடுத்து அதை போட்டு அழகு பார்த்துள்ளார். மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதிலும் ஆசிரியரின் கவனம் செல்லாமல் இல்லை. அரசு சார்பில் பெறப்படும் பொருட்களை தவிர்த்து தனது செலவில் காய்கறிகளை கூடுதலாக வாங்கி கொடுத்து, சத்துணவை சத்தான உணவாக மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வீட்டில் சாப்பிடுகிறார்களோ இல்லையோ பள்ளியில் கட்டாயம் சாப்பிடுவார்கள் என்ற நிலையை கொண்டு வந்தார். தானும் அவர்களுடன் சேர்ந்து மதியம் உணவை சாப்பிட்டு வந்துள்ளார்.

தற்பொழுதுள்ள அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. ஆனால், பொன்ராஜ் கடந்த ஆட்சியிலேயே கொரோனா ஊரடங்கில் மாணவர்களின் சக ஆசிரியர்களுடன் இல்லம் தேடி வகுப்புகள் எடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் செயல்படாமல் இருக்க, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகள் 5ம் வகுப்பு மாணவர்களின் கவனத்தை சிதறிப்படிதாலும், அவர்கள் கற்பிப்பதில் சிரமம் இருந்ததாலும் தானே மாணவர்களின் இல்லம் தேடி சென்றார். தற்பொழுதுள்ள அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. ஆனால், பொன்ராஜ் கடந்த ஆட்சியிலேயே கொரோனா ஊரடங்கில் மாணவர்களின் சக ஆசிரியர்களுடன் இல்லம் தேடி வகுப்புகள் எடுத்துள்ளார். இதனால் சுற்றுவட்டாரத்தில் பொன்ராஜ் மீதான மரியாதை வெகுவாக உயர்ந்தது. கடந்த ஓராண்டு ஊரடங்கில் 5ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தடையில்லாமல் வீடுகளிலேயே சென்று நடத்தி முடிக்கப்பட்டதாக பெருமையுடன் கூறுகிறார் பொன்ராஜ். இதனால் மாணவர்களுக்கும் பாடம் தடைப்படுகிறது என்ற எண்ணம் வரவில்லை.

நெல்சன் பொன்ராஜ் கணிதம் என்பதால் மாணவர்களுக்கு விளையாட்டு மூலமும் செயல்முறைகள் மூலமும் வாய்ப்பாடு உள்ளிட்டவற்றை கற்பித்து வருகிறார். அதை வீடியோவாக பதிவு செய்து யூடியூபில் பதிவேற்றி பிற மாணவர்கள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். மாலை வகுப்புகள் முடிந்ததும் பிற மாணவர்கள் சென்று விட மெதுவாக கற்று கொள்ளும் திறனுடைய மாணவர்களை பள்ளியிலேயே அமர வைத்து அவர்களுக்கு என கூடுதல் கவனம் எடுத்து கற்பித்து வருகிறார். மாணவர்கள் முழுமையாக கற்பிக்கப்பட்ட திருப்தியுடன் இரவு 9 மணிக்கு பள்ளியில் இருந்து வீட்டிற்கு புறப்படுகிறார். பொன்ராஜின் மனைவியும் ஆசிரியர். மூன்று மகள்கள் உள்ளனர்.

தலைமை ஆசிரியரால் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் வகுப்பறை

இந்த பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்து விட்டு வேறொரு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் அங்கு பாடம் முடிந்ததும் நேராக பொன்ராஜிடம் வந்து விடுகின்றனர். இரவு 9 மணி வரை பொன்ராஜிடம் இருக்கும் அவர்கள் பள்ளி பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்கின்றனர். பள்ளி பாடம் மட்டுமின்றி, தற்காப்பு கலையையும் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார். சிலம்ப ஆசிரியர் மூலம் வாரத்திற்கு இரு முறை மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வாலிபால் தெரிந்தவர் மூலம் வாலிபால் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அடுத்ததாக நண்பர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் உதவியுடன் பள்ளியில் கணினி லேப் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். மாணவர்களுக்கு கணினி அறிவை ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது கனவாக உள்ளது. இப்படி பல்வேறு சேவைகளை செய்து வரும் பொன்ராஜ் தனது சொந்த செலவில் வறுமையில் இருந்த 3 மாணவர்களை பொறியியல் படிக்க வைத்து பட்டதாரிகளாக மாறியுள்ளார்.

தலைமை ஆசிரியர் பொன்ராஜ் வகுப்பு பாடத்தை மட்டும் எடுக்காமல் பிறந்த நாளுக்கு புதிய உடை, பிடித்த உணவு வாங்கி தருவதுடன் பாசமாக பேசுவதால் சொந்த தந்தையை போன்று இருப்பதாக 8ம் வகுப்பு படிக்கும் தர்ஷன் குமார் கூறியுள்ளார். 7ம் வகுப்பு படிக்கும் ஜெஸ்டின் சாமுவேல், தன்னை வீரபாண்டியன் கட்டபொம்மனாக நடிக்க வைத்து அரசனாக அழகு பார்த்ததாக நெல்சன் பொஜ்ராஜை புகழ்ந்துள்ளார். மேலும் தன்னை மெரைன் படிக்க வைப்பதாக பொன்ராஜ் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறும் சாமுவேலின் கண்களில் ஆசிரியர் மீதான கள்ளம் கபடமற்ற பாசம் வெளிப்படுகிறது.

ஆசிரியரை விரும்பும் மாணவர்கள்…..மாணவர்களை விரும்பும் ஆசிரியர் என திகழும் தூத்துக்குடி நாசரேட் திருமண்டல அறக்கட்டளை தொடக்கப்பள்ளி பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணம் என்றே கூறலாம். தற்பொழுது இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான பொஜ்ராஜ் மற்றும் மாணவர்களின் ஒரே கோரிக்கை அரசு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது தான். கூடிய விரைவில் அரசின் கவனம் தூ.நா.தி.அ.க.பள்ளி மீது விழ வேண்டும்.

Share the Article

Read in : English

Exit mobile version