Site icon இன்மதி

பாதியில் முடிந்த தளபதி ராவட்டின் பயணம், தொழிற்நுட்ப கோளாறுகளுக்கு பெயர்போன M-17 ஹெலிகாப்டர்

Source Wikipedia

Read in : English

இந்தியாவின் பாதுகாப்புப்படைகளின் முதன்மை தளபதி (சீஃப் ஆஃப் டிஃபென்ஸ் ஸ்டாஃப்) பிபின் ராவட், தான் படித்த வெல்லிங்டன் பாதுகாப்புப் படை கல்லூரிக்கு புதன் கிழமை (08.12.21) அன்று சென்றுகொண்டிருக்கும்போது குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் மாண்டு போன துயரம் பாதுகாப்புப் படைகளுக்கு மட்டும் ஈடுசெய்ய முடியாத இழப்பல்ல; இந்தத் தேசத்தையே அதிர வைத்த துக்கம் அது. விபத்தின் சாத்தியமான காரணங்கள் பற்றி வெகுஜன ஊடகங்களிலும் மற்றும் சமூக ஊடகங்களில்
காலையிலிருந்தே தொடர்விவாதங்கள் நடந்தன. இந்த அவல நிகழ்வின் விவரங்களுக்குள் போகும் முன்பு, நாம் தளபதி பிபின் ராவட்டுக்கும் அவரது துணைவியார் திருமதி ராவட்டுக்கும் ஒரு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிடுவோம்.

புதன்கிழமைக் காலை ஜெனரல் ராவட்டையும் அவரது ஊழியர்களையும் சுமந்துசென்ற ஹெலிகாப்டர் வேகத்திலும், செலுத்தப்படும் தன்மையிலும் அதிசிறந்த பாதுகாப்பும், செம்மையும் கொண்டது. ருஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த எம்ஐ-17-வீ75 ஹெலிகாப்டர் நேட்டோவால் ‘ஹிப்’
என்றழைக்கப்படுகிறது. இந்திய விமானப்படைக்குள் 2008-ல் கொண்டுவரப்பட்டது. ஏவுகணைகளோடு ஏற்றப்பட்டிருக்கும் ராடார்கள், குண்டுகளால் துளைக்க முடியாத இரட்டை டர்போ எஞ்சின்கள், பாதுகாக்கப்பட்ட எரிபொருள்தாங்கி, எல்லா வானிலைச் சூழலிலும் வளைந்துபோகும் தன்மை என்று தரமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஹெலிகாப்டர் அது. ஆனால் அது விபத்தைச் சந்தித்தது. இந்த
விபத்தின் காரணங்கள் என்னவாக இருக்க முடியும்? வானிலை ஒரு காரணமாக இருக்க முடியாது. ஏனென்றால் குன்னூருக்கான அன்றைய வானிலை கணிப்பு சூரிய வெளிச்சத்தையும், நல்ல வானிலையையும் கணித்திருந்தது. இமாலய மலைத்தொடர்களை ஒப்பிடுகையில், குன்னூர் அவ்வளவு கடுமையானதல்ல. கிளர்ச்சிக்காரர்களின் அல்லது தீவிரவாதக் கும்பல்களின் நாசக்கார வேலை அல்லது எதேச்சையான தீவிபத்து சாத்தியமே இல்லை. ஏனென்றால் அந்தப் பகுதி இராணுவ முகாமிற்கு (கேன்டோன்மெண்ட்) அருகில் இருக்கிறது. குன்னூரில் நக்சல் எதிர்ப்புப் படைப் பயிற்சி மையமும் இருக்கிறது. தர்க்கரீதியாக ஒத்துப்போகக்கூடிய ஒரே காரணம் தொழில்நுட்பச் சிக்கல் அல்லது விமானியின் பிழை. கடந்தகாலத்தில் எம்ஐ-17 வகையறாக்கள் இதைப் போன்று ஐந்து
விபத்துக்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சந்தித்திருக்கின்றன.

வெவ்வேறு இடங்களில் ஏன் அப்படி விபத்து நடந்தது என்பதற்கு ஒரு முடிவான ஆதாரம் என்று எதுவுமில்லை. எனினும் ஒன்று மிகத்தெளிவு. இந்த வகை ஹெலிகாப்டரில் தொழில்நுட்பத் தவறு சகஜம்; வழக்கமான பரிசோதனையில் அதைப் அறிந்துகொள்ளவும் முடியாது.

வெவ்வேறு இடங்களில் ஏன் அப்படி விபத்து நடந்தது என்பதற்கு ஒரு முடிவான ஆதாரம் என்று எதுவுமில்லை. எனினும் ஒன்று மிகத்தெளிவு. இந்தவகை ஹெலிகாப்டரில் தொழில்நுட்பத் தவறு சகஜம்; வழக்கமான பரிசோதனையில் அதைப் அறிந்துகொள்ளவும் முடியாது. அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு தடவையும், உத்தரகாண்டில் ஒரு தடவையும், வெள்ள நிவாரணப் பணியின்போது இந்த மாதிரியான ஹெலிகாப்டர் விபத்தைச் சந்தித்திருக்கிறது. விமானப்படையும் மற்ற ஏஜென்ஸிகளும் இது சம்பந்தமாக புலன்விசாரணை செய்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் தொழில்நுட்பத் தவறுதான் இவ்வகையான ஹெலிகாப்டரின் தொடர்விபத்துக்களுக்குக் காரணம் என்று முடிவுகட்டுவது முந்திரிக்கொட்டை தனம். பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி போன்ற அதிமுக்கியமான பெரிய மனிதர்கள் கூட குன்னூர் போன்ற அமைதியான இடங்களில் விபத்துக்கு ஆளாகின்றனர். கவலைக்குரிய விசயம் இது என்பது கவனத்தை ஈர்க்கக்கூடியது.

இராணுவத் தளபதி முதல் முப்படைத் தளபதி வரை
இராணுவத் தளபதி முதல் முப்படைத் தளபதி வரையிலான தளபதி ராவட்டின் வீரப்பயணம் எளிதானது அல்ல. நிறைய சவால்களையும் கடுமைகளையும் சந்தித்த ஒன்று. நாகலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்ற கிளர்ச்சியாளர்களின் முகாம்களைத் அழிக்க மியான்மர் எல்லையில் 2015-ல் அவர் நடத்திய இந்திய இராணுவ நடவடிக்கை ’தங்கப் பறவை ஆபரேஷன்’ (ஆப்-கோல்டென் பேர்டு) என்ற சங்கேத வார்த்தையால் அறியப்பட்டது. அப்போதுதான் பொதுமக்களின் கவனம் அவர் மீது குவிந்தது.
அதற்குப் பின்னர் ’2016 யூரி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ அவரது கண்காணிப்பில் நிகழ்ந்தது. அதில் நமது முழுக் குழுவும் ஒரு கீறல் இல்லாமல் திரும்பி வந்தது. இது பாஜகவின் அரசியல் செல்வாக்கை உயர்த்தியதோடு
மட்டுமில்லாமல், மோடி பலமான, வல்லமையானதோர் தலைவர் என்பதையும் நிரூபித்தது. ஆனால் நிஜமான சோதனை டோக்லா 2017 தான்; அதில் ராவட் உறுதியாக நின்று சீனாவின் அத்துமீறலுக்கு எதிரே
இராணுவத்தைச் சரியாகத் தயார்படுத்தி சீனாவின் சாலைக் கட்டுமானத்தை நிஜமாகவே தடுத்து நிறுத்தினார். பின்பு, 2019 பாலக்கோட் அதிரடித் தாக்குதல், கவனமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் அவரது திறமைக்கு அதிக மரியாதையைச் சம்பாதித்துக் கொடுத்தது.

இந்தியாவின் பாதுகாப்புப்படை ஊழியர்களின் முதல் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டவுடன், அவர் தனக்கான பணியை வரையறுத்துக் கொண்டார். அமைப்பியல் ரீதியாகவும், படைப்பாவனை ரீதியாகவும் பாதுகாப்புப் படைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வாதாடியவர்.

பலமானதோர் முப்படை இயக்கக் கூட்டுழைப்புகாக 1999-ல் கார்க்கில் சீராய்வுக் குழுதான் பாதுகாப்புப்படை ஊழியர்களின் தளபதி என்ற பதவியைப் பரிந்துரைத்தது என்பது சுவாரஸ்யமானது. ஆனால் அப்படிச் செய்வதற்கு ஏனோ அப்போது அரசி்யல் மனஉறுதி இல்லாமல் போனது. அதன்
காரணங்கள் எளிமையானவை. முப்படைத் தளபதி என்பவர் பாதுகாப்பு விசயங்களில் பாதுகாப்பு அமைச்சகத்தின் மையப்புள்ளி. இயல்பாகவே அவர் பாதுகாப்பு அமைச்சருக்கு பாதுகாப்புப்படை ஆலோசகராகி விடுகிறார். ஆனால் அந்தப் பதவியில் அதுவரை ஐஏஎஸ் படித்த ஒரு மூத்த
அதிகாரிதான் பாதுகாப்புச் செயலர் என்ற பட்டத்துடன் இருந்தார்.

படைச்சேவை, கொள்முதல், படைச் சீர்திருத்தங்கள், அமைப்புகள் போன்ற விசயங்கள் எல்லாவற்றையும் பாதுகாப்புச் செயலர்தான் கவனித்து வந்தார். 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று செங்கோட்டையில் பிரதமர் மோடி பாதுகாப்புப்படை ஊழியர்களின் தளபதி என்ற பதவி உருவாக்கப்படும் என்று
அறிவித்தவுடன், தளபதி பிபின் ராவட்தான் அப்போது இயல்பான தேர்வாக உருவெடுத்தார்.

நியமிக்கப்பட்ட நாளிலிருந்து, தளபதி பிபின் ராவட் அமைப்பியல் சீர்திருத்தங்களை  நடைமுறைப்படுத்துவதில் வலிமையாகவும், படுமும்முரமாகவும் இருந்தார். ‘ஒருங்கிணைந்த அரங்குக் கட்டளைகள்’ என்பதின் பேரில் ஒரு மலைத்தாக்குதல் மையத்தை உருவாக்கினார்.

சீனா ஓர் ஆகப்பெரிய இராணுவ அச்சுறுத்தல் என்று வெளிப்படையாகவே முழங்கி,
எதிர்காலத்தில் ஓர் இருமுனைப் போருக்கு இந்தியா தயாராக இருக்க
வேண்டும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தார்.

சீனா ஓர் ஆகப்பெரிய இராணுவ அச்சுறுத்தல் என்று வெளிப்படையாகவே முழங்கி, எதிர்காலத்தில் ஓர் இருமுனைப் போருக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும், உயர்தர பாதுகாப்புக் கருவிகளை வெளிநாடுகளிலிருந்து செய்யும் மொத்த
இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்று அவர் நம்பினார்; அதற்காக உழைக்கவும் செய்தார். ஆண்டு 2030-க்குள் அவற்றை உள்நாட்டிலே தயாரிப்பதைச் சாதித்துவிட வேண்டும் என்று பாடுபட்டார். 2020-ல் கல்வான் தாக்குதலில் தனது தலைமைத்திறனை நிரூபித்து தனது அதிரடியான
செயற்பாட்டினால் சீனாவை அதிரச் செய்தார். ஒரு தாக்குதலைத் திட்டமிடும்போது அவர் கடைப்பிடித்த யதார்த்த அணுகுமுறைக்காகவே அவர் எப்போதும் ‘வீரர்களின் தளபதி’ என்று நினைக்கப்படுவார். வெற்றிபெற்ற ஒவ்வொரு ஆணுக்கும் பின்னே ஒரு பெண் இருப்பார் என்ற வழக்குச்சொல்லிற்கேற்ப திருமதி மதுலிகா ரவாட்டும் எப்போதும் ஞாபகத்தில் இருப்பார், ஒரு ஜென்டில்மேனை ஜெனரல் ஆக்கியதற்காக.

அடுத்த என்ன?
இந்தியாவின் முப்படைத் தளபதியை நியமிக்கும் தேர்வு, நியமனக் குழு இப்போது இந்த வெற்றிடத்தை நிரப்ப ஆள்தேட ஆரம்பிக்கும். ஆனால் அதற்கு இன்னும் கொஞ்சகாலம் ஆகும்.

அதுவரை, பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு அமைச்சரின் பாதுகாப்புப்படை ஆலோசகர் என்ற பதவியை வகித்துக்கொண்டு பாதுகாப்புத் துறையைக் கவனித்துக் கொள்வார். பாதுகாப்புப்படை ஊழியர்களின் தளபதிக்கு முப்படையின் இயங்கு வலிமையில் பெரும்பங்கு உண்டு.

குற்றங்குறை இல்லாத சேவையும் நேர்மையும் தேசிய உணர்வும் கொண்ட ஒரு வீரனுக்கு மரணம் என்பது இல்லை; அவன் சரித்திரமாகிறான். இன்று தளபதி பிபின் ராவட் சரித்திரமாகிவிட்டார்.

(டாக்டர் ஜே. ஜெகநாதன் ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசியப் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் மூத்த உதவி பேராசிரியர். இக்கட்டுரையில் சொல்லப்பட்டவை அவரது சொந்தக் கருத்துக்கள்).

Share the Article

Read in : English

Exit mobile version