Site icon இன்மதி

மழையில் நனைந்து வெயிலில் காயும் துப்புரவுப் பணியாளர்கள்

மழையோ, வெயிலோ சிங்காரச் சென்னையின் சாலைகளில் துப்புரவுப் பணியில ஈடுபட்டுள்ள பெண் துப்புரவுத் தொழிலாளர்கள்

Read in : English

கொரோனா காலத்திலும் சரி, பெரும் மழை வெள்ளத்திலும் சரி, தூய்மைப் பணியாளர்களின் பணிக்கு ஓய்வு இல்லை. அவர்கள் ஒட்டுமொத்தமாக ஓய்வு எடுத்துவிட்டால் சென்னை நகரமே குப்பைக்களமாகிவிடும்.

பரபரப்பாக காணப்படும் சாலை ஆள் நடமாட்டமின்றி அமைதியாக இருக்க, கொட்டும் மழையில் ஒரு பெண், கையில் குப்பைகளை வாரி போடும் அந்த இரு சிறிய சக்கரம் கொண்ட பெட்டியுடன், தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரை போட்டுக் கொண்டு சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்றி வருகிறார். இரவு நேரங்களில் சென்னை நகரம் ஓய்வெடுக்கும் பொழுது, இவரை போல் பலர் சாலைகளில் துப்புரவுப் பணியைச் செய்ய தொடங்குகின்றனர்.

நமது வீட்டில் சேரும் குப்பைகளையோ, அசுத்தங்களை அகற்ற நாமே முகம் சுழிக்கும் போது, நூறுக்கணக்கானோர் தூக்கி எரியும் குப்பைகளையும், கழிவுகளையும் கைகளால் எடுத்து போட்டு சுத்தம் செய்கிறார்கள்.

நமது வீட்டில் சேரும் குப்பைகளையோ, அசுத்தங்களை அகற்ற நாமே முகம் சுழிக்கும் போது, நூறுக்கணக்கானோர் தூக்கி எரியும் குப்பைகளையும், கழிவுகளையும் கைகளால் எடுத்து போட்டு சுத்தம் செய்கிறார்கள்.

மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து வெளியேறும் துர்நாற்றம், மழை வெள்ளத்தில் சாலைகளில் அடித்துவரப்பட்ட குப்பைகள், அலட்சியத்தால் தூக்கி வீசப்படும் குப்பைகள், பெருங்காற்றுக்கு முறிந்து விழும் மரக்கிளைகள் போன்றவற்றையெல்லாம் அகற்றி தூய்மைப்படுத்த வேண்டிய கடமை தூய்மைப் பணியாளர்களுக்கு உள்ளது. அத்துடன், சில இடங்களில் மனிதக் கழிவுகளை மனிதர்களை அகற்றும் அவலமும் தொடர்கிறது என்று துப்புரவுத் தொழிலாளர்கள் மனம் குமுறுகிறார்கள்.

மெரினா கலங்கரை விளக்கம் கடற்கரை சாலையைத் துப்புரவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வியாசர்பாடியை சேர்ந்த சுமதி (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்ற துப்புரவு பணியாளரிடம் பேசினோம்:

“சென்னையில் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்த மழையில் எனது வீட்டில் பாதி அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அந்த நிலையிலும் துப்புறவுப் பணிக்கும் வர வேண்டியிருந்தது. எனது கணவர் மாற்றுத் திறனாளி, வேலைக்குச் செல்ல முடியாது. குழந்தைகள் இருக்கின்றன. அவர்களின் தேவைக்காக இந்த வேலைக்கு வந்தேன். ஒரு நாள் லீவு எடுத்தால் சம்பளம் பிடித்து கொள்வார்கள். குழந்தைகளும் கணவரும் நிவாரண முகாம்களில் தங்கி இருக்க, நான் வேலைக்கு வந்துவிட்டேன்.

வீட்டில் சமைக்க முடியாது, மூன்று சக்கர வண்டியில் கொண்டு வந்து சாப்பாடு பொட்டலம் வழங்குவார்கள். அதைத்தவிர எங்களுக்கு வேறுவழியில்லை.

வேலைப்பார்க்கும் சில இடங்களில் கழிவறை இருக்கும். பல இடங்களில் இருக்காது. எங்களுக்கு என சட்டையும், இந்த கால் சட்டையும் கொடுத்து போட சொல்கிறார்கள். அவசரமாகக் கழிவறை செல்ல வேண்டும் என்றால் போக முடியாது. சில நேரங்களில், வாகனங்கள் ஏதாவது நின்றிருந்தால் அதன் மறைவில் சென்று ஒதுங்குவோம். இந்தக் கஷ்டத்தையெல்லாம் குடும்பச் சூழலுக்காக அனுபவிக்கிறோம்.

இப்பொழுதுதான் இறந்தவரின் ஊர்வலம் சென்றது. அவர்மீது தூவப்பட்ட பூக்களை எல்லாம் சாலையில் விழுந்து கிடக்கின்றன. குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்” என்று கூறி கொண்டே தனது வேலையில் கவனம் செலுத்தினார் சுமதி.

“அவசரத்திற்கு ஒருநாள் லீவு கேட்டாலும் மேற்பார்வையாளர் திட்டுவார். வேலை விட்டுவிட்டுப் போய் விடு என்பார்கள். அவர்களின் அதட்டல் பேச்சுக்கும், இந்த நாற்றத்துக்கும் இடையே எங்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டு செல்கிறது. சாப்பாட்டு நேரம் வந்து விட்டால் வேலை செய்யும் இடத்திலேயே சாப்பிட வேண்டிய நிலை.

வீட்டிற்கு சென்றதும் குளித்து விடுவோம். ஏனெனில், எங்களது துர்நாற்றம் எங்களுக்கே சகித்து கொள்ள முடியாது. வீட்டிலும் வயதானவர்கள், குழந்தைகள் இருப்பதால் அவர்கள் நலனுக்காக நாங்கள் ஒதுங்கி இருப்போம்” என்றார் தனது பெயர் கூற விரும்பாத இன்னொரு துப்புரவுத் தொழிலாளி.

“தீபாவளி அன்று தெருவெல்லாம் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகிறார்கள். அந்தக் குப்பைகள் தெருக்களெங்கும் சிதறிக்கிடக்கும். அதையெல்லாம் ஒரே நாளில் அகற்ற வேண்டும். இப்பொழுது, மழையால் சலைகளில் குப்பைகள் அடைந்துள்ளன. அதனை எடுத்து சுத்தப்படுத்துகிறோம். சாலைகளில் கிடைக்கும் குப்பையை அப்பொழுது எடுத்து கொண்டே செல்லும் போது சிலர் சாப்பிட்ட பேப்பர்களையும், பிளாஸ்டிக் கவர்களையும் கீழே தூக்கி வீசுவார்கள். நாங்கள் கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான். குப்பைகளைக் கண்ட இடங்களில் சாலைகளில் வீசிவிட்டுச் செல்லாமல், அதற்கு என வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் கொண்டு சென்று போட்டால் போதும்” என்கிறார் மற்றொரு துப்புரவுப் பெண்மணி.

“இதேபோன்று கொட்டும் மழையில் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டமில்லா அண்ணா சாலையில் பெண்கள் சிலர் சாலையோர குப்பைகளை அகற்றி கொண்டிருந்தனர். கொட்டும் மழையில் ஏன் இந்த வேலை செய்ய வேண்டுமா என்று கேட்டதற்கு, “இரவில் வேலை செய்து குப்பைகளை அகற்றினால் தான் பகலில் சாலை தூய்மையாக இருக்கும்.

மக்கள் சிரமமின்றி செல்ல முடியும். மழை அதிகமாக பெய்தால் கடைகளின் ஓரம் சென்று ஒதுங்கி கொள்வோம். நாங்களும் முடியாது என ஒதுங்கி இருந்துவிட்டால் இந்த குப்பைகளை அகற்ற யாரும் இருக்க மாட்டார்கள்” என்கிறார் அவர்.

கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை இரவோடு, இரவாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அகற்றும் பணியில் துப்புறவுப் பணியாளர்கள் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளது. சாதாரண நாட்களிலும் துப்புரவுப் பணி இருக்கிறது.

அதனால் அதிகாலையிலேயே வீட்டை விட்டு வேலைக்கு வர வேண்டியுள்ளது. மழை நேரம் என்றால் நேரகாலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டியதிருக்கும்.

மட்கும், மட்காத குப்பைகள் என தனித்தனியே பிரிக்காமல் நம் அலட்சியதால் கொட்டப்படும் குப்பைகளை அவர்கள் தரம்பிக்க வேண்டியதாகியுள்ளது. நாம் பயன்படுத்தும் உடைந்த கண்ணாடி போன்ற பொருட்களை அப்படியே போடுவதால் அவர்களின் கைகள் பதம்பார்க்கப்படுகிறது.

கைகளால் குப்பைகளை அகற்றுவதாலும், பிளீச்சிங் பவுடர் போன்ற கிருமி நாசினிகளை தெளிப்பதாலும் அவர்களுக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்படுகிறது.

இவ்வளவு கடுமையான உழைப்பைச் செலுத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு திட்டங்கள் மூலம் தேவையான உதவிகளை செய்து வந்தாலும், துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வாதாரம் திருப்திகரமாக இருப்பதாகச் சொல்லிவிட முடியாது.

தமிழகம் முழுவதிலும் உள்ள 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 561 பேரூராட்சிகளில் இருந்து நாளொன்றுக்கு 14 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதில் சென்னையில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 5000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் வீடுகளில் இருந்து 5400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 95% வீடுகளில் நேரடியாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

காலை 6.30 மணியில் இருந்து பிற்பகல் 1.30 மணி வரையிலும், இரவு 9 மணியில் இருந்து 2 மணி வரையிலும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. குப்பை சேகரிக்கும் பணியில் சென்னையில் மட்டும், நிரந்தரமாக 6,990 ஊழியர்களும், பஞ்சாயத்துகளில் 545 ஊழியர்களும், ஒப்பந்த அடிப்படையில் 8,171 ஊழியர்களும், தனியார் ஒப்பந்தம் அடிப்படையில் 3,403 ஊழியர்களும் என மொத்தமாக 19,109 பேர் பணிபுரிகின்றனர்.

சென்னையில் மட்டும், நிரந்தரமாக 6,990 ஊழியர்களும், பஞ்சாயத்துகளில் 545 ஊழியர்களும், ஒப்பந்த அடிப்படையில் 8,171 ஊழியர்களும், தனியார் ஒப்பந்தம் அடிப்படையில் 3,403 ஊழியர்களும் என மொத்தமாக 19,109 பேர் பணிபுரிகின்றனர்

மக்களின் சுகாதார நலனுக்காகப் பாடும் இந்தத் துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரது நிலைமையும் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும் நிலைமையில் இல்லை.

பெருந்தொற்று காலமாகட்டும், பேரிடர் காலமாகட்டும், விழாக் காலமாகட்டும் நம்மை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மைப்படுத்தும் தூய்மைப்பணியாளர்களின் சேவையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை முன்னணிப் பணியாளர் என்று அரசு அறிவித்துள்ளது.

இது அவர்களுக்குக் கௌரவம்தான். ஆனால் இதுமட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும் அவர்களது உடல் ஆரோக்கியத்துக்கும் அவர்களது குழந்தைகளின் கல்விக்கும் போதாது. இதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அரசின் நிரந்தர நடவடிக்கைகள் தேவை.

Share the Article

Read in : English

Exit mobile version