Site icon இன்மதி

தடைகளைத் தாண்டி சாதனை: பொதுத்துறை நிறுவனத்தில் சட்ட உதவி மேலாளரான பார்வைத்திறனற்றவர்!

சதீஸ்கரில் பிளாஸ்பூரில் உள்ள சௌத் ஈஸ்டர்ன் கோல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உதவி சட்ட மேலாளராகப் பணிபுரியும் ராம்குமார்

Read in : English

ஒரு சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பார்வைத்திறனற்ற  மாற்றுத்திறனாளியான ராம்குமார் பல்வேறு தடைகளைத் தாண்டி விடா முயற்சியுடன் சட்டப் படிப்பைப் படித்து, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தில் உதவி சட்ட மேலாளராகப் பணிபுரிகிறார்.

வேலூர் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் பிறந்தவர் ராம் குமார். தாழ்த்தப்பட்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது தந்தையும் தாயும் கூலித் தொழிலாளிகள். பிறந்தபோதே முழுவதும் பார்வை இழந்தவர் ராம்குமார். அவரது தம்பி விஜயக்குமாரும் பார்வை இழந்தவர்.

இவரது குடும்பத்தில் இதுவரை யாரும் படித்தவர்கள் இல்லை. இவர் முதல் தலைமுறை பட்டதாரி என்பது மட்டுமல்ல, இவர்களது பரம்பரையிலே இவர்தான் முதல் பட்டதாரி.

இவர் முதல் தலைமுறை பட்டதாரி என்பது மட்டுமல்ல, இவர்களது பரம்பரையிலே இவர்தான் முதல் பட்டதாரி

வேலூரில் கில்ட் ஆஃப் சர்வீசஸ் அமைப்பு பார்வைத்திறனற்ற மாணவர்களுக்காக நடத்தும் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரைத் தமிழ் வழியில் படித்தார் ராம்குமார். பின்னர் பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறனற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளியில் படிக்கின்ற காலத்தில் அவரிடம் இரண்டு செட் துணிகள் மட்டுமே இருந்தன. Ðபள்ளிக்குச் செல்லும்போது பள்ளியே வழங்கிய யூனிபார்ம்.
அதுதவிர, கையில் வாக்கிங் ஸ்டிக்.

எனக்குப் பண உதவி செய்யும் வகையில் எனது வீட்டின் நிலை இல்லை. நல்ல சாப்பாடு என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. அந்த மாதிரியான ஏழ்மைச் சூழ்நிலையில், பார்வையின்மை வேறு. எனினும், எப்படியாவது சட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்பது ராம்குமாரின் ஆசை.

பிளஸ் ஒன் வகுப்பில் கம்யூனிக்கேஷன் இங்கிலீஷ் பாடப்பிரிவை எடுத்துப் படிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அங்கு அந்தப் பாடப்பிரிவு இல்லை. எனவே, பிளஸ் ஒன் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், புவியியல், வரலாறு, பொருளாதாரம், அரசியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தார் ராம்குமார்.

தடைகளைத் தாண்டிய தனது பயணத்தில் தனக்கு ஏணியாக இருந்து தன்னை இந்த உயரத்துக்கு ஏற்றிவிட்டவர்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

“நான் பள்ளியில் படிக்கும்போது, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் நடத்திய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றது எனது வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அவரிடம் தொலைபேசியில் பேசி, சட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்ற எனது விருப்பதைத் தெரிவித்திருந்தேன். அதை ஞாபகம் வைத்து, கிளாட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தை எனது பள்ளி முகவரிக்க வாங்கி அனுப்பியிருந்தார். அதற்குள்ளே எங்களது பள்ளித் தலைமை ஆசிரியர் டேவிட் வில்சன், கிளாட் நுழைவுத் தேர்வு விண்ணப்பதை வாங்கிக் கொடுத்ததுடன் அதனைப் பூர்த்தி செய்து அனுப்பவும் உதவினார்.
அந்தத் தேர்வையும் எழுதினேன். அதன் மூலம் எனக்கு நல்ல சட்டக் கல்லூரியில் இடம் கிடைத்ததாகச் சொன்னார்கள்.

ஆனால் எனக்கு அந்த அளவுக்குப் பண வசதி இல்லை. இதற்கிடையில், 2011இல் பிளஸ் டூ தேர்வில் 780 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். எனவே ஏதாவது கல்லூரியில் சேர்ந்து பிஏ ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். தாம்பரம் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, லயோலா கல்லூரி, புதுக் கல்லூரி என்று பல கல்லூரிகளிலும் சேர முயற்சி செய்தேன். இடம் கிடைக்கவில்லை.

ஒரு வழியாக நந்தனம் கலைக் கல்லூரியில் பிஏ வரலாறு பாடப்பிரிவில் இடம் கிடைத்தது. பின்னர் ஆங்கில இலக்கியப் பிரிவில் ஒரு காலி இடம் ஏற்பட்டதால் அந்த இடம் எனக்குக் இடம் கிடைத்தது.

டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர் என்ற கல்வி ஆலோசனை அமைப்பை நடத்தி வரும் கல்வி ஆலோசகர் டி. நெடுஞ்செழியன்.

ஆனால் எனக்கு ஆங்கிலத்தில் பேச வராது. தமிழ் வழியில் படித்த எனக்கு ஆங்கிலம் கற்பதற்குச் சிரமமாக இருந்தது. நெடுஞ்செழியன் சாரை சந்தித்து ஆலோசனை கேட்கலாம் என்று நான் எனது நண்பர் சரவணனுடன் அவரது அலுவலகத்துக்குச் சென்றேன். சட்டம் படிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கூறினேன். கல்லூரிப் படிப்பை விட்டு வந்து விடு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதுதடன் எங்கள் இருவரின் கைச்செலவுக்கு ரூ.1500 கொடுத்தார்.

பிறகு எனது கல்லூரிப் படிப்பை அப்படியே விட்டு விட்டு, அவரது டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் பைண்டர் அலுவலகத்துக்குச் செல்லத் தொடங்கினேன். அங்கு இரண்டு வேளை சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கும். கைச் செலவுக்கும் பணம் கிடைக்கும். அவர் எனக்கு ஆங்கிலம் சொல்லித்தருவார். அலுவலகத்தில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பேன். இப்படியே கிளாட் தேர்வுக்கும் நான் தயாரானேன்.

2012இல் கிளாட் தேர்வையும் எழுதினேன். கொச்சியில் உள்ள நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ் கல்வி நிலையத்தில் இடம் கிடைத்தது. ஆனால், ஐந்து ஆண்டுகள் படிப்புக்கு சில லட்சங்கள் செலவாகும். அப்போது என்னிடம் இருந்தது 700 ரூபாய்தான். எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம். கல்லூரியில் போய் சேர் என்று நெடுஞ்செழியன் சார் சொன்னார். என்னைக் கடைக்குக் கூட்டிக் கொண்டு போய் நல்லதாக ஐந்து செட் பேண்ட், சர்ட், ஷு எல்லாம் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் நல்ல வாக்கிங் ஸ்டிக் ஒன்றையும் வாங்கித் தந்தார். பல்கலைக்கழகத்தில் பணம் கட்டுவதற்காக ரூ.25 ஆயிரத்தையும் அவரே செலுத்தினார்.
துணைவேந்தர் ஜெயக்குமாரிடம் எனக்காக அவர் பேசினார்.

“கட்டணம் பற்றியெல்லாம் கவலைப்படாதே, நீ படி. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று துணைவேந்தர் கூறிவிட்டார். அதன் பிறகு, எனக்கான கட்டணத்தை யார் யார் எல்லாம் செலுத்தினார்கள் என்று தெரியாது. நெடுஞ்செழியன் சாரும் எனக்காகப் பணம் கட்டியிருக்கிறார். எனது நண்பர்களான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் எனது கல்லூரி, விடுதிக் கட்டணத்தைப் பார்த்துக் கொண்டனர். யார் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. எனது அறை நண்பர்கள்கூட சொன்னதில்லை. மொழி தெரியாத ஊர். புதிய இடம், கொஞ்சம் கொஞ்சமாக பாடங்களைக் கற்று 2017இல் பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்) படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.

நான் படிப்பை முடித்துத் திரும்பிய போது, எனது அறை நண்பர்கள் எனக்கு ஒரு லேப் டாப் வாங்கித் தந்தனர். எனது நண்பர்கள் எனது கைச்செலவுக்காகக் கொடுத்த பணத்தை நான் சேர்த்து வைத்திருந்ததில் எனது கையில் ரூ.60 ஆயிரம் வரை இருந்தது. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கான்ஸ்டிடியூஷன் அண்ட் ஹீயூமன் ரைட்ஸ் பாடப்பிரிவில் எல்எல்எம் படிக்கச் சேர்ந்தேன்.

பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி என்பதால் எனக்குப் படிப்புக் கட்டணம் இல்லை. ஆனால், விடுதியில் தங்க இடம் இல்லை என்பதால் வெளியே அறை எடுத்தத் தங்க வேண்டியதிருந்தது. எனது கையில் இருந்த பணத்தைச் செலவுக்கு வைத்துக் கொண்டேன். நான் முதுநிலைப் படிப்பில் சேர்ந்திருப்பதை அறிந்த எனது கல்லூரி நண்பர்கள் மாதந்தோறும் எனது வங்கிக் கணக்கிற்கு தொடர்ந்து பணம் அனுப்புவார்கள்.

இதற்கிடையே. 2018இல் கோல் இந்தியா நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பித்ததில் உதவி சட்ட மேலாளர் வேலை கிடைத்தது. ரூ.60 ஆயிரம் சம்பளம். எனது வீட்டில இருப்பவர்களால் நம்ப முடியவில்லை. விமானத்தில் பயணம் செய்வேன் என்று நினைத்துப்பார்த்தில்லை.

சென்னையிலிருந்து தில்லிக்கு விமானப் பயணம், அங்கிருந்து ரா{ஞ்சிக்குப் பயணம். நான்கு மாதங்கள் பயிற்சி. தற்போது சத்தீஸ்கரில் உள்ள பிளாஸ்பூர் நகரில் சௌத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உதவி சட்ட மேலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக எனது பணியை நம்பிக்கையுடன் செய்து வருகிறேன்.

நான் இந்த நிலைக்கு வருவதற்குக் காரணம், எனக்கு எப்போதும் வழிகாட்டும் நெடுஞ்செழியன் சார் உள்ளிட்ட எனது நண்பர்களின் உதவிதான் என்று நன்றியுடன் கூறுகிறார் 29 வயது ஆகும் ராம்குமார்.பிஎச்டி படித்து எதிர்காலத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தில் அல்லது சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

பிஎச்டி படித்து எதிர்காலத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தில் அல்லது சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நான்காவது செமஸ்டர் தேர்வை எழுத எனக்கு இன்னமும் சிறப்பு அனுமதி கிடைக்கவில்லை. அந்த அனுமதி கிடைத்துவிட்டால், அந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி முதுநிலைச் சட்டப் பட்டத்தைப் பெற்று பெற்று பிஎச்டி படிக்கச் சேர்ந்து விடுவேன். அதற்கு பல்கலைக்கழகமோ தமிழக அரசோ உதவி புரிய வேண்டும்” என்பது ராம்குமாரின் வேண்டுகோள்.

அவரது பார்வைத்திறனற்ற தம்பி விஜயக்குமார் பிஏ ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். தங்கைக்குத் திருமணமாகிவிட்டது.

Share the Article

Read in : English

Exit mobile version