Read in : English
மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறந்தாலும்கூட, இந்த 19 மாத காலத்தில் தங்களது வாழ்வாதாரம் கருதி பள்ளிப் படிப்பைவிட்டுவிட்ட வேறு வேலைக்குப் போன மாணவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
கொரோனாவின் பாதிப்புகள் குறைய தொடங்க ஆரம்பித்தவுடன், தமிழகத்திலும் பள்ளிகள் நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலர், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்குக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.
ஆனால், 19 மாதங்களுக்குப் பள்ளி திறந்துள்ளதால் மாணவர்கள் உற்சாகமாகப் பள்ளிக்குச் செல்கின்றனர். பள்ளி நடைபெற இயலாத இந்த இடைக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடந்த வகுப்புகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பிலாத மாணவர்களுக்குப் பிரச்சினைதான்.
ஏற்கெனவே, பல மாதங்களாக பள்ளிப் படிப்பு இல்லாமல் இருக்கும் மாணவர்களின் நலன் கருதியே மாணவர்களுக்கு மாலை நேரத்தில் இல்லம் தேடி வரும் கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்த பல குடும்பங்கள் தங்களுடைய சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளன
தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் திட்டம் எந்த அளவுக்கு மாணவர்களுக்குப் பயனளிக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்த பல குடும்பங்கள் தங்களுடைய சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளன.
அவர்களுக்குக் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை விட்டால் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேறு வழியில்லை. இந்த ஆண்டு புதிதாக 1.50 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ரெட்டியார் பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் 5 வகுப்பில் தனது மகனை சேர்த்துள்ளார் சின்னையன். கேரளாவில் இருந்து புலம் பெயர்ந்த இவர் தனியார் பள்ளியிலிருந்து அரசுபள்ளிக்கு மகனை சேர்த்துள்ளார், பள்ளியின் கட்டட வசதிகளும் முக்கியம்தான் என்றாலும்கூட, அதைவிட முக்கியம் பள்ளி ஆசிரியர்கள்.
அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை ஓர் ஆசிரியர் தான் உள்ளார் என்பதைப் பார்த்து தனது மகனுக்கு நல்ல கல்வி கிடைக்குமா என்பது குறித்து கவலையுடன் உள்ளார்.பள்ளிகள் தொடங்கி விட்டாலும்கூட நோய்த்தொற்றின் அச்சம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
கோவிட் தொற்று குறைந்தாலும் டெங்கு மழைக்காலத்தில் வரும் காய்ச்சல் சளியோடு பள்ளிக்கு வரும் மாணவர்களை எப்படி அணுகுவது என்ற அச்சமும் உள்ளது. தினமும் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் அறிவுறுத்தியுள்ளது கல்வித்துறை, ஆனால் சில மாணவர்களின் உடல் வெப்பம் அதிகமானவுடன் தனிமைப்படுத்த அறை இல்லாமல் தவித்து வருகின்றனர் அரசு பள்ளி ஆசிரியர்கள்.
1 முதல் 8 வரை கல்வி பயில வரும் மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், நீண்ட காலமாக வீடுகளில் தங்கிவிட்ட பல மாணவர்கள், பள்ளிக்கு வரவே விரும்புகிறார்கள்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் இயங்காத காரணத்தால் கிராமப்புற மாணவர்கள் அருகில் உள்ள சிறு நகரங்களில் உள்ள கடைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் பணிக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். பள்ளிகளின் வருகை பதிவேடுகளில் அவர்கள் பெயர்கள் இணைக்கப்பட்டாலும் மீண்டும் அவர்கள் வகுப்பறைக்கு அழைத்து வருவது சிரமமான காரியமாக உள்ளது.
இவ்வாறு பள்ளிப் படிப்பை விட்டு விட்டு இடைநின்ற குழந்தைகள் எத்தனை பேர் என்ற கணக்கெடுத்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன.
இதனிடையில் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை மாற்றிய பெற்றோர் பழைய பள்ளிகளில் மாற்று சான்றிதழ் வாங்க சிரமப்படுகின்றனர். கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் கல்வி வழங்கப்பட்டாலும்கூட, பெரும்பாலான தனியார் பள்ளிகள் முழுக் கட்டணத்தை வாங்கின.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றார்கள் என அறிவித்தவுடன் அடுத்த ஆண்டு கல்விக் கட்டணத்தை கட்டுங்கள் என்று பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்கள். இப்போது நாங்கள் அரசு பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்து விட்டோம் என்று கூறிய பிறகும்கூட, இந்த ஆண்டு கல்விக் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் தர முடியும் என கூறுவதாக பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் பெற்றோர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், முதல் நாள் பள்ளிக்கு வரும் குழந்தைகள் கையில் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்துகின்றனர்.
நீண்ட காலம் கழித்துப் பள்ளி தொடங்கப்பட்டாலும்கூட, தனியார் பள்ளி மாணவர்கள் சமாளித்து விடுவார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது. இவ்வளவு சவால்களுக்கு மத்தியில் பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
Read in : English