Site icon இன்மதி

சென்னை மழை: போதாமையும் உட்கட்டமைப்பும்

Read in : English

பெருமழைக்கு பின், சென்னை மகாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மீண்டும் இது போன்ற கொட்டும் மழையால் இயப்பை இழக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் மனதில் அச்சம் அதே நிலையில்தான் தொடர்கிறது. அது, டிசம்பர் வரை நீடிக்கும்.

சென்னை பெருநகர் வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட, 35 ஆண்டுகளாக இந்த நகரில்தான் வசிக்கிறேன். மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைவின்றி தொடர்கின்றன. மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய அலசலும் தொடர்கின்றன. இந்த அலசல் நிகழ்த்தும் குரல்கள், சமூக ஊடகங்களால் பெருகியும் உள்ளன.

ஆட்சிக்கு வர முடியாத மற்றும் ஆட்சியை இழந்த கட்சியினர் மழை பாதிப்பு பற்றி தொண்டை கிழிய கத்துவார்கள். ஆட்சியில் இருப்போர், நிவாரண முகாம்களில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அதற்கு பதிலடி கொடுத்து நிலைமையை சீர் செய்வர்.

நிவாரணம் திரட்டுவது என்ற பெயரில் கும்பல் வன்முறையும் நடக்கும். தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் இருந்த போதிலிருந்தே இதை பார்த்து வருகிறேன். ஆளும் கட்சி தொண்டரடிப் பொடிகள், நிவாரண பொதிகளை வழங்கி கட்சியை வளர்க்கப் பாடுபடுவர். எதிர்கட்சிகள் அதற்கு எதிரான நிலையை எடுத்து குறை கண்டுபிடித்து சொல்வதன் மூலம் தங்களை நிலை நிறுத்தப்பார்ப்பர்.

நிவாரணம் திரட்டுவது என்ற பெயரில் கும்பல் வன்முறையும் நடக்கும். தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் இருந்த போதிலிருந்தே இதை பார்த்து வருகிறேன்

பொதுவாக, நகரில் உட்கட்டமைப்பில் உள்ள குறைபாட்டை இருதரப்பினரும் மாறி மாறி பேசுவதை இப்போதும் கேட்க முடிகிறது. உட்கட்டமைப்புக்கு ஒதுக்கிய நிதி குறித்தும் கடும் விமர்சனங்கள் நடக்கும். இது தொடர்கதையாக உள்ளது.

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது இருந்த ஆளும் கட்சி, ‘சென்னை நகரை சிங்கப்பூர் போல் மாற்றிவிட்டோம்’ என்று மார் தட்டி ஓட்டு கேட்டது. இப்போது, பெருமழை பாதிப்புக்கு, தற்போதைய ஆளும் கட்சியை குற்றம் சுமத்துகிறது. இந்த வேடிக்கை வினோதங்களை பார்த்தும், கேட்டும் துன்ப கேணியில் வாழ்வதும், தமிழக மக்களின் வழக்கமாகிவிட்டது.

இந்த முணுமுணுப்புகள் எல்லாம் மழை ஓய்ந்ததும் அடங்கிவிடும். தமிழகத்தில் கட்சிகளை வளர்க்க பிரசார ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது பெருமழை காலங்கள். பல ஆண்டுகளாக இது தான் நடைமுறையில் உள்ளது.

தேசிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர், பெருமழை பாதிப்பு பற்றி படகுடன் சென்று படப்பிடிப்பு நடத்தியதாக பெரும் விமர்சனம் எழுந்தது. மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக சோறு பரிமாறிய முதல்வரிடம், “ஐயா, சமைத்த உணவு எல்லாம் எங்களுக்கு வேண்டாம்; நாங்கள் வசிக்கும் பகுதியை மேம்படுத்த ஏதாவது செய்யுங்கள்”,என்றார் ஒரு பெண்.

தமிழகத்தில் கட்சிகளை வளர்க்க பிரசார ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது பெருமழை காலங்கள்

அந்த கோரிக்கையை யாரும் கண்டது போல் தெரியவில்லை.
பெருமழை வந்தால் சில நிகழ்வுகள் தொடராக நடக்கின்றன.
அரசு அமைக்கும் பெரிய சமையல் கூடங்கள், அதில் ஆவி பறக்க வேகும் உணவுகள், தட்டேந்தி நிற்கும் பரிதாப முகங்கள், கருணையாக வெளிப்படும் பேச்சுகள், தன்னார்வலர்கள் வீசும் ரொட்டித் துண்டுகள், தற்காலிக தண்ணீர் வெளியேற்றம், போக்குவரத்து பாதிப்பு என சொல்லிக்கொண்டே போகலாம்.

இவற்றை நிறைவேற்று திட்டமிடாத செலவுகள் செய்கிறது அரசு. இதற்காக, பல நுாறு கோடிகள் வரை செலவிடப்படும். இது தொடர்ந்து வருகிறது.

இந்த பின்னணியில் தான் நகரின் கட்டமைப்பு முறையாக கட்டி எழுப்பப்படவில்லை என்ற கூக்குரலும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த முறையும் மாற்றம் இன்றி இவை எல்லாம் நடந்தன, நடந்து கொண்டிருக்கின்றன.

சரி, சடங்கு முறையில் நடக்கும் இந்த இயக்கம் முடிவுக்கு வர வழி உண்டா?

கண்டிப்பாக உண்டு. மிகவும் சுலபமானத. கூடுதல் நிதி வசதியோ, வெளிநாட்டு வல்லுனர் குழுவோ இதற்கு தேவையில்லை.

அரசு முன்னெடுக்கும் பணிகளை சரியாக ஆய்வு செய்து, முறையாக கண்காணிக்க தேர்ந்த வல்லுனர் குழு அமைந்தால் போதும். சென்னை நகரின் பெருவெள்ள பிரச்னையும், குடிநீருக்காக தவிக்கும் பிரச்னையும் தீரும்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் என்பது குறள்.
இடித்து உரைப்பதற்கான குழுவை உருவாக்கினாலே, பிரச்னைகள் தீரும்.

அரசின் அதிகார இயக்கத்தை, கண்காணித்து சுட்டிக்காட்டும் அமைப்பு முறை தமிழகத்தில் முற்றாக இல்லை. அப்படியான குரல் ஏதாவது கேட்டால், அதன் குரல்வளையை முறிக்கும் செயல்தான் முதலில் நடக்கிறது.

அப்படியான குரல்களுக்கு மதிப்பு ஏற்படும்போது மட்டுமே, துன்பகேணியில் மக்கள் மதிப்பது தவிர்க்கப்படும். விடியல் பிறக்கும். நாட்டில் ஜனநாயக செயல்பாடு அமோகமாக வளரும்.

Share the Article

Read in : English

Exit mobile version