Read in : English
தமிழ்நாட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவுக்கான இட ஒதுக்கீட்டுக்குள்,வன்னியர்களுக்கு என 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு அளித்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பு, வாக்கு வங்கி அரசியலுக்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பல்வேறு சாதிகளையே அரசியல் கட்சிகள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு மட்டும் அல்ல, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவீத இடஒதுக்கீடும், மொத்தத்தில் தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீடும் தொடருமா என்ற கேள்விக்குறி இப்போது எழுந்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் அது வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு செல்லாது என அறிவித்துள்ளது. இது இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்ற மிகப் பெரிய பிரச்சினையின் மீதே விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
உச்ச நீதிமன்றம் 1951-இல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி இட ஒதுக்கீடு ஏன் வகுப்புகளை அடிப்படையாகக் கொள்ளவில்லை என்றும், சாதிகளை அடிப்படையாக வைத்து மட்டுமே ஏன் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் உயர்நீதிமன்றம் ஐயம் எழுப்பியுள்ளது.
பல்வேறு மனுக்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் உச்ச நீதிமன்றத்திலும் இந்தக் கேள்வியே மேலோங்கி நிற்கிறது.
இப்போதைய சிக்கலில் இருந்து மீள்வதற்கான வழி, சாதிகளின் அடிப்படையில் அல்லாமல், வகுப்புகளின் அடிப்படையில், அரசமைப்புச் சட்டத்துக்கான சிறப்புத் திருத்தத்தின் மூலம் இட ஒதுக்கீடு அனுமதிக்கப்படுவதற்கு காரணமான, 1951-இல் உச்ச நீதிமன்றம் வகுத்தளித்த நோக்கங்களுக்கு திரும்புவதுதான் என்று தமிழ்நாடு திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜி.சிதம்பரம் யோசனை கூறுகிறார்.
உதாரணமாக, நிலமற்ற தொழிலாளர்கள், மெக்கானிக்குகள், பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள், மண்பாண்டங்கள் செய்பவர்கள் மற்றும் தினக்கூலி பெறும் மற்றவர்களின் குழந்தைகளுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இந்த வகையில், படிக்க விரும்பும் முதல் தலைமுறையினருக்கு ஒரு சாதகமான நிலை இருக்கிறது.
எனவே பொருளாதார அளவுகோலையோ அல்லது வசதி படைத்தவர்களை (கிரீமி லேயர்) நீக்கும் முறையையோ அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மொத்தத்தில் அமைப்பே அதை கவனித்துக் கொள்கிறது. இங்கே இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமானது அல்ல.
சாதிக் குழுக்களைப் போல் அல்லாமல் வகுப்பினர் என்ற பிரிவுக்கு உள்ளே செல்வதோ வெளியே வருவதோ சாத்தியம். மெய்யான பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கவனித்துக் கொள்வதற்கு உள்ளார்ந்த அமைப்பு இருக்கிறது. “சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. சாதிகளின் அடிப்படையில் இல்லாமல் வகுப்புகளின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் பயன்கள் வழங்கப்பட்டால் மட்டுமே, சமுதாயத்தின் நலிந்த பிரிவினரை மேம்படுத்துவதில் உண்மையான நீதியும் முன்னேற்றமும் ஏற்படும்.
இதுவே இடஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம். நிரந்தரமான இடஒதுக்கீடு என்று ஒருபோதும் சிந்திக்கவில்லை, மாறாக உதவி தேவைப்படுகிற மக்களின் சில வகுப்பினரை மேம்படுத்த உதவுது மட்டுமே அதன் நோக்கம்’’ என்று சிதம்பரம் குறிப்பிடுகிறார்.
அரசிலும் பொருளாதாரத்திலும் தொழிலிலும் வர்த்தகத்திலும் மிகப்பெரும் அதிகாரம் செலுத்தி வரும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சக்திவாய்ந்த, செல்வாக்குமிக்க, பணம் படைத்த பிரிவுகளால் ஒதுக்கித் தள்ளப்படாமல், முதல் தலைமுறையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இடம் கிடைக்க இத்தகைய அமைப்பானது வழி வகுக்கிறது. இட ஒதுக்கீடு என்ற கருத்தின் உண்மையான உணர்வு இதுதான்.
அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 1994-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இது, தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு (உச்ச நீதிமன்றம் விதித்த 50 சதவீத வரம்பைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகம்) சட்டச் சவால் எழாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியாகும்.
இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்துத் தான் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தேங்கியுள்ளன. 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு என்ன ஆகுமோ என்று தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளும், உதிரிக் கட்சிகளும் கவலைப்படுகின்றன. பல்வேறு மாநில அரசுகள் மனம்போன போக்கில் இடஒதுக்கீட்டை உயர்த்தி வருவது அல்லது சாதிக் குழுக்களை சேர்த்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் அவ்வப்போது எழுப்பி வரும் சங்கடமான கேள்விகள் குறித்தும் அவை கவலைப்படுகின்றன.
அரசமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி சாதிகளின் அடிப்படையில் இல்லாமல் வகுப்புகளின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள அடிப்படையான பிரச்சினையை இந்தக் கட்சிகள் முறையாக அணுகவில்லை.
இட ஒதுக்கீடு எவ்வாறு இயற்றப்பட வேண்டும், யாருக்காக இயற்றப்பட வேண்டும் என்பது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டி நெறிகளை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் புறக்கணித்து வரும் போக்கை, வன்னியர்களுக்கான புதிய உள் இட ஒதுக்கீடு வலியுறுத்துகிறது.
வன்னியர்கள் ஆதிக்கம் செலுத்தும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கொடுத்த அழுத்தத்தின் கீழ், 2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக, இந்த உத்திக்கு அடிபணிந்த அஇஅதிமுக, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு (அதனுடன் சேர்த்து நடத்தை விதிகள் அறிவிக்கப்படுவதற்கு) சில மணி நேரத்துக்கு முன்பாக சட்டப் பேரவையில் இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக அறிமுகப்படுத்தியது. வாக்கு வங்கி அரசியலுக்கு இது ஓர் அப்பட்டமான மாதிரியாகும்.
இது அஇஅதிமுகவுக்கு பெரிய அளவில் உதவி செய்திடவில்லை. மக்கள் தொகையில் வன்னியர்கள் கணிசமாக உள்ள வடக்கு தமிழ்நாட்டில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்திக்க நேரிட்டது.
பாமகவின் நிலைமையும் மோசமாகத்தான் இருந்தது. பதிலடியாக மற்ற சமூகத்தினர் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க முற்பட்டதால், இந்த நடவடிக்கை எதிர்விளைவை ஏற்படுத்தி விட்டதாகத் தோன்றுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சட்டத்துக்கு தாங்கள்தான் காரணம் என்று அஇஅதிமுகவும், பாமகவும் பெருமையுடன் உரிமை கொண்டாடி அந்த அடிப்படையில் வன்னியர்கள் ஆதரவைத் திரட்ட முயன்ற நிலையில், திமுக அரசானது இந்தக் கல்வி ஆண்டிலேயே கல்வி நிறுவனங்களில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமைதியாக அமல்படுத்தியது.
பாமகவிடம் இருந்து இதற்கான பாராட்டையும் பெற்றது. அந்த வகையில் அஇஅதிமுகவுடனான கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டது. ஆளும் கட்சியுடன் முறையான கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாமலேயே திமுகவை நோக்கி அது பல்வேறு அடிகளை எடுத்து வைத்திருக்கிறது.
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வழங்கியதன் மூலம் பகைத்துக் கொண்ட சமூகங்களுடன் உறவை ஏற்படுத்த முயன்று வரும் வேளையில், அஇஅதிமுக அதன் முதன்மையான கூட்டணிக் கட்சியை இழந்துவிட்டது. தெற்கு தமிழ்நாட்டிலும் கூட, தேர்தலில் அதிமுகவின் நிலை மோசமாகததான் இருந்தது. அதன் வன்னியர் ஆதரவு சாய்வை, குறிப்பாக தேவர் சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறது என்றும், உயர் நீதிமன்ற ஆணையை எதிர்த்து அது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்றும் திமுக அரசு அதிகாரபூர்வமாக நிலை எடுத்துள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 19 சதவீதம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் என்பதை உள்ளடக்கி மொத்தம் 69 சதவீதம் என்ற அதிகபட்ச அளவு இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அனுபவித்து வருகிறது. ஆனால் இதற்கு இப்போது வலுவான சட்டச் சவால்கள் எழுந்துள்ளன.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது சரியே என உச்ச நீதிமன்றம் அறிவிக்க நேர்ந்தாலும் அது கூட உண்மையான ஆபத்தாக இருக்காது.
சாதிகள் அடிப்படையில் இல்லாமல், வகுப்புகள் அடிப்படையில், குழப்பமான சாதிப் பிரச்சினைகளுக்கும் அப்பால் தீர்வுகளைத் தேடுகின்ற உச்ச நீதிமன்றத்தின் முயற்சியில்தான் உண்மையான ஆபத்து இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியான வகுப்புகளின் பட்டியலை தருவதற்கு பெரும்பகுதி மாநிலங்கள் தயாராக இல்லை.
Read in : English