Site icon இன்மதி

மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கைத் தவிர்க்க ஆளுநருடன் திமுக மென்மை போக்கா?

(Source: Twitter page of Raj Bhavan)

Read in : English

 

ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்பது திமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான அண்ணாவின் பிரபலமான வாசகம்.  Ñமாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் அதிகாரத்தை அதிகாரத்தை ஒடுக்குவதற்காக ஆளுநர் பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என்பதற்காக அவர் அப்படிக் கூறினார். மத்திய அரசின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்படுவதாகவும் தங்களுக்குப் பிடிக்காத மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ய ஆளுநர்களை தங்களது ஏஜெண்டுகள் போல மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் திமுக குற்றம்சாட்டி வந்திருக்கிறது.

ஆனாலும்கூட, திமுகவும் அதிமுகவும் ஆளுநர் பதவிக்கு சட்டவிதிமுறைகளின்படி அதற்குரிய மரியாதையைக் கொடுத்தே வந்திருக்கிறது. ஆனால், சில நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழக அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள சி.என். ரவி கேட்டது தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஆளுநருக்கு வழங்குவதற்காகத் துறை சம்பந்தப்பட்ட  தகவல்களை தயாரித்து வைத்திருக்கும்படி தலைமைச் செயலார் வெ. இறையன்பு துறைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, Ñமாநில நிர்வாகத்தில் தலையிடும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளது என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

ஆனால், பொதுவெளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோ அல்லது திமுகவோ இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஆளுநரின் நடவடிக்கை தலைமைச் செயலாளர் சொல்வது போது வழக்கமான ஒன்றுதான் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத கட்சி நிர்வாகியும் அமைச்சருமான  ஒருவர்.

ஆளுநரின் நடவடிக்கை தலைமைச் செயலாளர் சொல்வது போது வழக்கமான ஒன்றுதான் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத கட்சி நிர்வாகியும் அமைச்சருமான  ஒருவர்.

2017இல் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் சில மாவட்டங்களுக்குச் சென்று அரசு அதிகாரிகளைச் சந்தித்து, அரசுத் திட்டங்களை ஆய்வு செய்தபோது அன்றைய அதிமுக அரசு அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது. அரசைக் காப்பாற்றி கொள்ளும் நிலையில் இருந்த அதிமுக அரசு, ஆளுநரின் அந்த நடவடிக்கைகளை பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அப்போது திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தன. மாநிலத்தில் பாஜக அரசியல் செய்வதற்கான முயற்சியாக எதிர்க்கட்சிகள் பார்த்தன.

திமுக அரசுக்கு எதிராக பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாத நிலையில், சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ள சூழ்நிலையில், திமுக அரசு வலுவாக உள்ளது. மாநில அரசுத் திட்டங்களுக்கான கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் நேரில் பேசி அதற்கான உறுதிமொழியைப் பெறுவதற்காக அண்மையில் சில அமைச்சர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தில்லிக்கு அனுப்பிவைத்திருந்தார். இந்த தில்லிப் பயணங்கள் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகவா அல்லது திமுகவுக்கும் பாஜகவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் மோதல் போக்கைத் தொடரும் எண்ணம் இல்லை என்று காட்டுவதற்காகவா என்று அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் உலா வருகின்றன.

திமுக அரசின் அணுகுமுறைகள் குறித்தும் கொள்கைகள் குறித்தும் வழக்கமாக மாநில பாஜக தலைவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தாலும்கூட, மத்திய அமைச்சர்கள் திமுக அரசின் நல்ல நடவடிக்கைகளை பாராட்டுகிறார்கள். திமுக அமைச்சரவையின் செயல்பாடுகள் குறித்து எந்த மத்திய அமைச்சரும் அண்மைக் காலத்தில் விமர்சனம் செய்யவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்.

அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வரும் பாஜக, அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட்டணியைத் தொடரக்கூடும். மோடி முக்கியமாக எதிர்ப்பார்க்கக்கூடிய 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு புதிய யுக்தியை உருவாக்குவதற்கு பாஜகவுக்கு இன்னமும் நேரம் இருக்கிறது.

Share the Article

Read in : English

Exit mobile version