Site icon இன்மதி

கொரோனா பாதிப்பு: புதிய திருடர்கள் உருவாகிறார்களா?

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அதிஷ்டலட்சுமி நகரில் கொள்ளை நடந்த இடம்

Read in : English

கொரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதரங்களை இழந்த ஒரு சிலர் புதிய திருடர்களாக உருவாகியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோவைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களைப் பார்க்கும்போது இந்த சந்தேகம் மேலும் உறுதியாகிறது.

வணிகர்களும் நில உரிமையாளர்களும் அதிமாக வாழும் கோவையில் கடந்த ஒரு மாதமாக நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் அந்தப் பகுதி மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதி அதிஷ்டலட்சுமி நகரில் பெரும்பாலான வீடுகள் தனித்தனியாக உள்ளன. இங்கு தான் கோவை முன்னாள் ஆட்சியர் ராஜாமணி வீடும் உள்ளது.

இந்தப் பகுதியில் வசித்து வரும் ஜஸ்கிரீம் நிறுவனம் நடத்தி வரும் தொழில் அதிபர் சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த வாரம் சனிக்கிழமை இரவு வீட்டின் மேல் மாடியில் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தார் சீனிவாசன். நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் 50 பவுன் நகை, மற்றும் 4 வைர நெக்லஸ்களைக் கொள்ளையடைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, அருகில் இருந்த பைனான்சியர் சண்முகம் வீடு பூட்டப்படு இருப்பதை அறிந்து கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி. பீரோவில் ஏதும் இல்லை.

அந்த ஆத்திரத்தில் அங்கு கையில் கிடைத்த பெருட்களையெல்லாம் தெருவில் வீசிச் சென்றுள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் திருட முயன்ற திருடர்களைப் பார்த்து வீட்டில் உள்ளோர் அலற, திருடர்கள் தப்பி விட்டனர். சிசிடிவி பதிவுகள் மூலம் திருடர்களை அடையாளம் கண்ட காவல்துறையினரால் அவர்களை இன்னமும் பிடிக்கமுடியவில்லை.

கோவை நகரில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தக் கொள்ளை சம்பவம் நடந்த சில நாட்களில் கோவை தூடியலூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கரிகாலன் வீட்டில் தங்களது கைவரிசையைக் வைத்தனர்.

அவர் தனது குடும்பத்தினருடன் சேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அடுத்த நாள் இரவு வீடு திருப்பியதும் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பீரோவில் இருந்த சுமார் 50 பவுன் நகையுடன், ரூ.2 லட்சம் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாயுடன் விரைந்துள்ளனர்.

சிறிது தூரம் ஓடிவிட்டு திரும்பிய மோப்ப நாய் ஏமாற்றத்துடன் திரும்பியது. மேலும் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை.
கோவை நகரிலும், புறநகரில் உள்ள பகுதியிலும் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 250 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாய்பாபா காலனி, பீளமேடு மற்றும் சிங்கார நல்லூர் பகுதிகளில் வசிக்கும் பணக்கார்கள் மற்றும் புறநகர் பகுதிகளான சூலூர், கருமத்தப்பட்டி மற்றும் தூடியலூர் பகுதிகளையும் கொள்ளையர்கள் குறிவைத்து திருடுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பூட்டிருந்த வீடுகளை குறிவைப்பதும், திட்டமிட்டு சரியான நேரத்தில் கொள்ளையடிக்கிறார்கள் என்றாலும்கூட, கண்காணிப்பு காமிராவையும் கைரேகையையும் ஆராயும் போது இவர்கள் புதிய திருடர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறுகிறது காவல் தரப்பு.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் பொருளாதர இழப்புகள் ஏராளம். சிறு மற்றும் பெரு நிறுவனங்களில் வேலை செய்த இளைஞர்கள் வேலை இழப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து, இத்தகைய கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீஸ் தரப்பு சந்தேகப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

கொள்ளைபோன வீடுகளில் உள்ள கண்காணிப்புக் காமிரா காட்சிகளையும் கைரேகை நிபுணர்களால் சம்பவ இடங்களில் பதிவு செய்யப்பட்ட கைரேகை தடயங்களைக் கொண்டும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொள்ளையர்கள் முதல் தலைமுறை குற்றவாளிகள் என்பதால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஆட்கள் இல்லாத வீடுகளைக் கண்காணிப்பதற்காக சகோ என்ற புது செயலியை துவங்கியுள்ள மாவட்ட காவல் துறையினர் செயலியை அறிமுகபடுத்திய அன்றைய தினமே 5 வீடுகளில் கொள்ளை போனது காவல் துறையினரை மட்டுமின்றி பொது மக்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

ஒரு பக்கம் கொள்ளையரைப் பிடிக்க தனிப்படையினர், மறுபக்கம் பூட்டிய வீட்டை காண்காணிக்க செயலி என்று கோவை காவல் துறையினர் சுறுசறுப்பாக இருந்தாலும்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாநகரின் மையப் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பிலே இரண்டு அதிகாரிகளின் வீடுகளில் பீரோவை உடைத்து கொள்ளையடித்து போலீசாரையே திகைக்க வைத்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது பழக்கப்பட்ட கொள்ளை கும்பலா அல்லது புதிய திருடர்களின் கைவரிசையா என்பது குற்றவாளிகள் பிடிபடும்போதுதான் தெளிவாகும்.

Share the Article

Read in : English

Exit mobile version