Site icon இன்மதி

நீலகிரியில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் படித்து டாக்டரான தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகன்!

நீலகிரியில் பந்தலூர் தாலுகாவில் உள்ள நெலாக்கோட்டைப் பகுதியில் வசிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் மகனான எஸ். கிருஷ்ணன் (வயது 27) தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் படித்து டாக்டராகி அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறார்.

Read in : English

நீலகிரியில் பந்தலூர் தாலுகாவில் உள்ள நெலாக்கோட்டைப் பகுதியில் வசிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் மகனான எஸ். கிருஷ்ணன் (வயது 27) தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் படித்து டாக்டராகி அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறார். தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அவர், மலைப் பகுதியில் ஏழ்மைச் சூழ்நிலையிலும் தொடக்கப் பள்ளிப் படிப்பையே தாண்டாத அந்த ஏழைக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி மட்டுமல்ல, அந்தப் பகுதியின் முதல் டாக்டரும்கூட.

சுற்றுலா செல்வவதற்கு ஊட்டிக்கு வந்து சில நாட்கள் தங்கிச் செல்ல ஏராளமானவர்கள் விரும்புவார்கள். ஆனால், அங்கேயே பணிபுரிய பலர் விரும்பமாட்டார்கள். அந்த மலைக்காட்டுப் பகுதியில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணன், டாக்டருக்குப் படித்து முடித்து தற்போது தனது டாக்டர் மனைவியுடன் அந்த ஊரிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து அந்தப் பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருகிறார்.

கிருஷ்ணனின் பூர்வீகம் தென்காசி அருகே கம்ப்ளியூர் என்ற ஒரு சிறிய கிராமம். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் பஞ்சம் பிழைப்பதற்காக அவரது தாத்தாவின் குடும்பம் ஊட்டியில் தேயிலைத் தோட்டத்துக்கு இடம் பெயர்ந்தது. வாழ்வாதாரம் கருதி ஊர் திரும்பாமல் அப்படியே அங்கு தங்கிவிட்டது. கிருஷ்ணனின் தந்தை சுப்பிரமணி மூன்றாம் வகுப்பு வரை படித்தவர். அவரும் ராக்வுட் எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளி. பள்ளிக்கூடப் படிப்பையே பார்க்காத அவரது தாய் மகாலட்சுமியும் தேயிலைத் தோட்ட வேலை பார்த்தார். கிருஷ்ணனுக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை.

ஊட்டி நகரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெலாக்கோட்டையில் தேயிலைத் தோட்டத்துக்கு நடுவே அடுத்தடுத்து வரிசையாக சிறிய வீடுகள் இருக்கும். அந்த வரிசை வீடுகளில் ஒன்றில்தான் ஐந்து பேர் கொண்ட அந்தக் குடும்பம் குடியிருந்தது. தாயும் தந்தையும் இருவரும் சேர்ந்து காலையிலிருந்து மாலை வரை தேயிலைத் தோட்டத்தில் வேலைபார்த்தாலும்கூட அந்தக் குடும்பத்துக்கு வாய்க்கும் வயிற்றுக்கும் போதுமானதாகத்தான் வருவாய் இருந்தது. ஆனாலும், தன்னைப் போல  தங்களது குழந்தைகளும் தேயிலைத் தோட்ட வேலைக்கு வந்து கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று நினைத்து நல்ல வேலையில் சேருவதற்கு அவர்கள் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவரது தந்தை சுப்பிரமணி..

ராக்வுட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாவது வரை படித்தார் கிருஷ்ணன். அதன் பிறகு, 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவர்சோலை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை தொடர்ந்து தமிழ் வழியில் படித்தார். காலை 7.30 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து பஸ்சில் பள்ளிக்குக் கிளம்பிப் போனால் மாலை 6 மணிக்குதான் வர முடியும். அதன் பிறகு வீட்டில் படிக்க வேண்டும். மழை காலத்தில் மின்சாரம் அடிக்கடி போய்விடும். அப்போது படிப்பது சிரமம். மழை காலத்தில் பள்ளிக்குச் சென்று வருவதும் சிரமம். ஆனாலும், நன்கு படித்து பத்தாம் வகுப்புத் தேர்வில் கிருஷ்ணன் 500க்கு 464 மதிப்பெண்கள் பெற்றார்.

மழை காலத்தில் மின்சாரம் அடிக்கடி போய்விடும். அப்போது படிப்பது சிரமம். மழை காலத்தில் பள்ளிக்குச் சென்று வருவதும் சிரமம்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடில் உள்ள வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளியில் கட்டணம் இல்லாமல் இலவசமாகத் தங்கிப் படிக்க அவரது உறவினர் மூலம் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவை எடுத்துப் படித்தார். அப்போதும் அவர் தமிழ் வழியில்தான் படித்தார்.

Dr S Krishnan

Dr S Krishnan

“பள்ளியில் படிக்கும்போது, அடுத்து என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. பள்ளிப் படிப்பை படித்து முடித்ததும் திருப்பூரில் வேலைக்குச் சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன். எப்படியாவது படித்து வேலைக்குப் போய், எனது அப்பாவையும் அம்மாவையும் கஷ்டமான தேயிலைத் தோட்ட வேலையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பிளஸ் டூ படித்த பிறகு கல்லூரியில் படிக்க எனக்குப் பொருளதார வசதி கிடையாது. எனது நிலைமையை எடுத்துக்கூறி, கல்லூரியில் படிக்க உதவி செய்ய முடியுமா என்று அகரம் பவுண்டேஷனுக்குக் கடிதம் எழுதினேன். பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்ததும் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1163 மதிப்பெண்கள் கிடைத்தது. அடுத்து நான்கு ஆண்டு பொறியியல் படித்தால் உடனே வேலைக்குப் போய்விடலாம் என்று நினைத்தேன். மருத்துவம் படித்தால் படித்து முடிக்க ஐந்தரை ஆண்டுகள் ஆகுமே என்று அப்படிப்பில் சேர தயங்கினேன். நான் உயிரியலில் 99 சதவீதமும் இயற்பியலில் 96 சதவீதமும் வேதியியலில் 98 சதவீதமும் மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் இந்த மதிப்பெண்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் எளிதாக இடம் கிடைக்கும். அதில் சேருவது நல்லது என்று யோசனை சொன்னார்கள். அதனை ஏற்று, 2012இல் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தேன். எனக்கு அரசு கல்வி உதவித் தொகை கிடைத்ததால் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எனது விடுதிக் கட்டணத்தை அகரம் பவுண்டேஷன் செலுத்தியது. எனது செலவுக்கு வீட்டிலிருந்தது இரண்டு மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் அனுப்புவார்கள். அதை வைத்துக் கொண்டு எனது இதர செலவுகளைப் பார்த்துக் கொள்வேன். மூன்றாம் ஆண்டிலிருந்து எனக்கு தெரிந்த டாக்டர்களிடம் கல்லூரி முடிந்த பிறகு சில மணி நேரம் வேலை செய்து  நூறு, இருநூறு சம்பாதிப்பேன்”” என்கிறார் கிருஷ்ணன்.

“பள்ளிப் படிப்பு முழுவதும் தமிழ் வழியில் படித்த எனக்கு, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததும் அவர்கள் ஆங்கிலத்தில் நடத்திய பாடம் புரியவில்லை. ஒரு வருஷத்துக்கு பாடங்களைப் புரிந்து படிக்க சிரமப்பட்டேன். அகரம் பவுண்டேஷன் உதவியுடன் கோவையில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் சேர்ந்து படித்தேன். அத்துடன், அதே கல்லூரியில் அகரம் பவுண்டேஷன் உதவி பெற்ற இரு மாணவர்களும் எனக்கு உதவியாக இருந்தார்கள். ஒருவழியாக எனது கல்லூரிப் படிப்பை 2018இல் முடித்து எம்பிபிஎஸ் படிப்பில் 75க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி (distinction ) பெற்றேன்” என்று கூறிய அவர் தனது கதையைத் தொடர்ந்தார்.

“அதன் பிறகு கோவையில் தனியார் மருத்துவமனையில் ஓராண்டு இரவுப் பணிப் பார்த்துக் கொண்டு பகலில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தேர்வை எழுதுவதற்காகப் படித்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையே, தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதனால் அரசு மருத்துவமனையில் டாக்டராகும் வாய்ப்புக் கிடைத்தது.

எனது சொந்த ஊரான நெலாக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிய அனுமதி கேட்டு, அங்கு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் சேர்ந்தேன். எனது தம்பி மாரியப்பன் பிஎஸ்சி வேளாண்மை படித்து விட்டு, நல்ல வேலை கிடைக்கும் வரை கோவையில் டாக்ஸி ஓட்டுகிறார். எனது தங்கை வித்யா பிஎஸ்சி கணிதம் படித்து விட்டு, தமிழ்நாடு அரசுப் பணியில் சேருவதற்காகத் தயாராகி வருகிறார். எனது அப்பாவும் அம்மாவும் தேயிலை எஸ்டேட்டில் வேலையை விட்டுவிட்டு நான் பணிபுரியும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகே ஒரு வீட்டில் எங்களுடன் தங்கி இருக்கிறார்கள். சேலத்தைச் சேர்ந்த பாஸ்கர் வள்ளிநாயகி தம்பதிகளின் மகளும் எனது கல்லூரித் தோழியுமான கௌசல்யாவை அவர்கள் வீட்டாருடன் பேசி கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டேன். எனது முயற்சிகளுக்குத் துணை நிற்கும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த அவர், தற்போது மாறுதல் பெற்று நான் பணிபுரியும் நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதர நிலையத்திலேயே பணிபுரிகிறார்.

தற்போது ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி வந்துள்ளது. நான் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்து, அந்தக் கல்லூரியில் பணியில் சேர்ந்து எனது பகுதி மக்களுக்குத் தொடர்ந்து மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.           எனது மருத்துவப் பணிகளுடன்முதுநிலை மருத்துவப் படிப்புப் படிப்பதற்கான நுழைவுத்தேர்வை எழுதவும் தயாராகி வருகிறேன்” என்கிறார் டாக்டர் கிருஷ்ணன்.

Share the Article

Read in : English

Exit mobile version