Read in : English
Q)பெர்மி லேப்-இந்திய அணுசக்தி துறை சேர்ந்து நடத்தும் ரகசிய குண்டு தயாரிக்கும் ஆய்வு தானே இது? ஏன் உண்மையை கூற மாறுகிறீர்கள்? சிகாகோவில் ஃபெர்மி லேப் ஆய்வுக் கூடத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஆற்றல் மிக்க நியூட்ரினோ கற்றைகளைப் பெற்றுக்கொள்ள, புவி உருண்டையின் நேர் எதிர் பக்கத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆய்வுக் கூடம் தேவைப்படுகிறது. 180 ° நேர்க்கோட்டில் போடி INO உள்ளது. எனவேதான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. என்கிறார்கள் சிலர்.
அவர்களுக்கு சிறிய விளக்கம். ஐயா! பிழையாக கூறாதீர்கள். தேனியின் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை 10.01 டிகிரி வடக்கு; 77.47 டிகிரி கிழக்கு. சிகாகோவின் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை 41.49 டிகிரி வடக்கு 88.15 டிகிரி மேற்கு. எனவே இரண்டு இடங்களுக்கும் இடையே உள்ள கோணம் 126.5 டிகிரி!!!. 180 ° அல்ல . இதைக் கணக்கிட பள்ளிக்கூட கோள வடிவியல் கணித அறிவு இருந்தால் போதும்; (எப்படி கணிப்பது என்பதை https://bit.ly/3wmS2Ew இல் பார்க்கவும்). எனினும் இதைச் சரி பார்க்காமல் இப்படி பொய்யாக, புனைவாக அபாண்டமாகக் கூறுவதன் நோக்கம் என்ன?
இந்த ஒரு சிறிய செய்தியை தான் சரிபார்க்கனும்னு தோன்றாத அளவிற்கு அவர்களுடைய மனதில் பீதியக் கிளப்பியது யார்? “அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்”என்ற பழமொழி தான் அந்த அரசியல் பிரமுகரின் வாதத்தை கேட்டபின் எனக்கு தோன்றியது.
அடுத்ததாக பெர்மிலாப் என்ன பூதம் என்பதையும் பார்ப்போம். பெர்மிலாப் (உலகத்தில் உள்ள பல அடிப்படை ஆய்வு நிறுவனம் போல) உலகத்தின் பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து அங்கு உள்ள விஞ்ஞானிகளின் உதவியோடு பல கூட்டு ஆய்வுகளை மேற்கொள்கிறது.
பெர்மிலாபில் நடைபெறும் நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு Deep Underground Neutrino Experiment (DUNE) என்று பெயர். DUNE திட்டத்தின் படி ஆற்றல் மிக்க நியூட்ரினோ கற்றை இல்லினாய்ஸின் படேவியாவில் உள்ள ஃபெர்மி தேசிய துகள் முடுக்கி ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்டும். இந்த நியூட்ரினோ கற்றை சுமார் ஆயிரத்து முந்நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவின் லீட்டில் உள்ள சான்ஃபோர்ட் நிலத்தடி ஆராய்ச்சி ஆய்வகம் நோக்கிச் செலுத்தப்படும்.
அமெரிக்காவில் செயல்படுத்தப்படும் இந்தப் பரிசோதனையில் கற்றை அமெரிக்காவில் தயாராகி அமெரிக்காவில் உள்ள மற்றொரு ஆய்வகத்தில் தான் உணரப்படுகிறது. அதாவது இந்தக் கற்றைகள் ஆபத்துத் தீங்கு என்றால் அமெரிக்காவில் தான் பாதிப்பு ஏற்படுத்தும்.
மேலும் மேலே கூறியது போல வேறொரு நியூட்ரினோ கற்றை ஏற்கனவே ஜூலை 2006 முதல் டிசம்பர் 2012 வரை சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா CERN ஆய்வுக்கூடத்தில் தயாரித்து 730 கி.மீ தொலைவில் இத்தாலியில் உள்ள கிரான் சாசோ நியூட்ரினோ ஆய்வகத்திற்கு ஆராய்ச்சி செய்துவிட்டார்கள். 2005இல் இந்தியாவில் நியூட்ரினோ திட்டம் துவங்குவதற்கு பிறகு இந்த ஆய்வு துவங்கி ஆய்வு முடிவும் பெற்று விட்டது என்பதை கவனத்தில் கொள்க. ஃபெர்மி லேப்பில் துவக்கப்படும் ஆய்வு இதன் அடுத்தகட்ட ஆய்வு.
கூடுதலாகச் சீனாவின் 19 மற்றும் 16 அமெரிக்க பல்கலைக்கழகங்களின் கூட்டு ஆய்வு முனைப்பின் பகுதியாகத் தயா-பே ரியாக்டர் நியூட்ரினோ பரிசோதனையில் இதே போன்று நியூட்ரினோ கற்றை தயார் செய்து சீனாவில் 2011 முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கும் தேனி நியூட்ரினோ ஆய்வுக்கூடத்துக்கும் என்ன உறவு? மொட்டைக்கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்பு கூட இல்லை.
முதலாவதாகத் தேனி ஆய்வுக்கூடம் வளிமண்டல நியூட்ரினோக்களை அறியும் வகை உணர்வி கொண்டது.
இரண்டாவதாக ஃபெர்மி லேப்க்கும் சான்ஃபோர்ட் நிலத்தடி ஆராய்ச்சி ஆய்வத்துக்கும் செல்லும் கோடு தேனி, தமிழ்நாடு ஏன் இந்தியா நோக்கிக் கூட வராது. பூமியின் வரைபடம் டேபிள் மேசை போலத் தட்டையாகச் சமதளமாக காட்சிப்படுத்தப்பட்டாலும், பூமி பந்துபோல உருண்டை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பூமி உருண்டையில் ஃபெர்மி லேப்க்கும் சான்ஃபோர்ட் நிலத்தடி ஆராய்ச்சி ஆய்வத்துக்கும் போடும் கோடு எந்தத் திசையில் செல்லும் என்பதை பாருங்கள். எனவே இந்த பெர்மி லேப் நியூட்ரினோ கற்றை செல்லும் திசைக்கும் தேனி (அல்லது இந்திய) நியூட்ரினோ நோக்குக்கூடத்துக்கும் சம்பந்தமே இல்லை.
ஃபெர்மி லேப் சான்ஃபோர்ட் கோடு தமிழ் நாடு நோக்கி இல்லை ; ஃபெர்மி லேப்பிலிருந்து துவங்கி பூமியின் மையம் வழியாகக் கோடு போட்டு பூமியின் அடுத்த பகுதியை அடைந்தாலும் அங்கே தமிழ் நாடு இல்லை.
எந்த ஒரு மாணவ மாணவியும் பூமி உருண்டையைப் பார்த்து இதை எளிதாக என்று அறிந்து கொள்வார்கள்; எனினும் போலி வாதங்கள் செய்யும் இவர்கள் நியூற்றினோ திட்டம் குறித்து விமர்சனம் செய்யும்போது இது ஃபெர்மி லேப் உடன் இணைந்து இந்தியா நடத்தும் ‘சதி’எனவும் அதற்க்கு சான்றாக “கொள்ள, புவி உருண்டையின் நேர் எதிர் பக்கத்தில் நேர்க்கோட்டில் போடி INO உள்ளது. எனவேதான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.” எனவும் புனைவாகக் கூறுவது ஏன்? புரியவில்லை.
கோமியம் குடித்தால் கொரோனா குணமாகும் என்பது போன்ற அறிவியல் பார்வையை மழுங்கடிக்கும் கருத்தே ஃபெர்மி லேப் கற்றை வரும் திசையில் தேனி உள்ளது என்ற பூச்சாண்டி.
Q) நியூட்ரினோ ஆயுதங்கள் தயாரிக்க தான் பெர்மிலாப் ஆய்வு. இது இன்னொரு புரளி.
ஆபத்தான குண்டு தாயரிப்பு ஆய்வு தான் நியூட்ரினோ ஆய்வு என்றால் Deep Underground Neutrino Experiment (DUNE) ஆய்வில் அமெரிக்கா ஈரான் பாகிஸ்தான் இந்தியா சீனா ரஷ்யா போன்ற நாடுகளை இணைத்துக் கொள்ளுமா? நியூட்ரினோ குறித்த பெர்மிலாப் DUNE ஆய்வில் இந்தியா மட்டுமல்ல ஈரானும் உறுப்பினர்! மொத்தம் முப்பது நாட்டு ஆய்வாளர்கள் இணைந்து அமெரிக்காவின் ஒரு நகரிலிருந்து வேறு ஒரு நகருக்கு “செயற்கை நியூட்ரினோக்களை”அனுப்பி ஆய்வு செய்கிறார்கள். அதாவது அந்த ஆய்வில் வெளியாகும் அணைத்து தகவல்களும் ஏனைய நாட்டு அறிவியலர்களுக்கு கிடைப்பது போலவே இரானிய விஞ்ஞானிகளுக்கும் கிடைக்கும்.
இதில் இந்திய விஞ்ஞானிகளும் பங்குபெறுகின்றனர். இந்த ஆய்வு ராணுவ ரகசிய ஆய்வு என்றால் தனது எதிரி நாடான ஈரானை கூட்டாளியாக பங்கெடுக்க அனுமதிக்குமா?
தடுப்பூசி போட்டுக்கொண்டால் செத்துவிடும் என்பது போல பகுத்தறிவு அற்ற பார்வை தானே நியூட்ரினோ கற்றை ஆபத்து என்பதும். ஆபத்து என்றால் இந்தியா பாகிஸ்தான், கியூபா, ஈரான் போன்ற நாடுகளின் கூட்டு ஆய்வாக அமெரிக்காவில் தயார் செய்து, அமெரிக்காவிலேயே செலுத்தி ஆய்வு செய்வார்களா?
சூழல் மாசு செய்யும் உற்பத்திகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றி அங்கே ஆபத்தை விளைவிப்பது போல தானே செயல்படுவார்கள்? அப்போது ஏன் அமெரிக்காவில் ஐரோப்பாவில் சீனாவில் ஜப்பானில் இந்த ஆய்வை மேற்கொள்கிறார்கள்?
பகுத்தறிவை குழிதோண்டி புதைத்துவிட்டு தான் இப்படி பட்ட அவதூறுகளை எந்த வித ஆதாரமின்றி கூற முடியும்.
நியூட்ரினோ கற்றை தயார் செய்து அனுப்பி அப்படி என்ன ஆய்வு செய்கிறார்கள். ஆற்று நீரில் ஒரு இடத்தில் மரக்கட்டையை மிதக்க விடுகிறோம் எனக் கொள்வோம். ஒரு கிலோமீட்டர் தொலைவில் எவ்வளவு நேரத்தில் அந்த மரக்கட்டை கடக்கிறது என்பதை அளவு செய்து ஆற்று நீரின் வேகத்தைக் கணக்கிடலாம். அதுபோலத் தான் இந்த ஆய்வுகளும். தயார் செய்யும் உற்பத்தி இடத்தில் நியூட்ரினோ கற்றையின் தன்மைகளை அளவு செய்வார்கள்.
சில நூறு கிலோமீட்டர் தொலைவில் வந்து சேரும் கற்றைகளின் தன்மையை அளவு செய்து ஒப்பீடு செய்து இதுவரை நமக்குச் சரிவரத் தெரியாத நியூட்ரினோ துகளின் தன்மைகளை அறிந்து கொள்ள முயல்வார்கள். இது அவர்கள் செய்யும் ஆய்வு. இந்திய நியூட்ரினோ திட்டம் இயல்பில் நமது வளிமண்டலத்தில் உருவாகும் நியூட்ரினோக்களை இனம் கண்டு அதன் தன்மைகள் முதலியவற்றை அறியும் ஆய்வு. இரண்டின் நோக்கம் ஒன்றல்ல.
Q) ஏன் 50,000 டன் இரும்பை வைத்து மின்க்கந்தம் ஏற்படுத்தி கருவியை அமைக்கவேண்டும்? சிறிதாக வைத்துக் கொள்ளகூடதா?
ICAL எனப்படும் நியுற்றினோ அளவை உணர்வீ மொத்தம் 50,000 டன் இரும்பு தகடுளை கொண்டு இருக்கும். இரண்டு தகட்டின் இடையில் மின்னணு உணர்வி இருக்கும். இந்த கருவியில் மொத்தம் சுமார் 6 க்கு பிறகு இருபத்தி ஒன்பது 0- பூச்சியங்களை இட்டால் வரும் தொகையில் இரும்பு அணுக்கள் இருக்கும். மலை குகையில் இந்த கருவியை வைத்தாலும் எல்லா காஸ்மிக் கதிர்களையும் முழுமையாக தடுத்து நிறுத்த முடியாது. மலையின் பாறைகளை கடந்து ஒரு மணி நேரத்தில் சுமார் 300 காஸ்மிக் கதிர்கள் அந்த உணர்வீ கருவியில் சமிக்கைகளை ஏற்படுத்தும். நியுற்றினோக்கள் மிகமிக குறைவாக மற்ற பொருள்களுடன் வினைபுரியும் எனவே அதனை ஆராய்வது எளிதல்ல.
அந்த கருவியில் ஒரு நொடிக்கு சுமார் கோடிகோடி நியுற்றினோக்கள் விழும் என்றாலும் அதில் ஆகக் கூடுதலாக ஒரு நாளைக்கு சுமார் 10 தடவை எதாவது இரும்பு அணுவுடன் வினைபுரியும் என எதிர்பார்கிறார்கள். காஸ்மிக் கதிர்கள் ஏற்படுத்தும் சமிகையின் ஊடே தான் நியுற்றினோ ஏற்படுத்தும் வினையை பிரித்து அறியவேண்டும். ஆய்வுக் காலத்தில் கருவியில் ஏற்படும் சமிக்கை காஸ்மிக் கதிரின் சமிகையா அல்லது நியுற்றினோ ஏற்படுத்திய வினையா என்பதை தான் ஆராய்ச்சி செய்து தரவுகளை சேகரிப்பார்கள். இவ்வாறு ஆய்வு செய்யும்போது, இந்த பத்தில் ஒரு நாளைக்கு சுமார் மூன்றை தான் நியுற்றினோவினை என உறுதிபாட்டுடன் பிரித்து அறியமுடியும்.
இவ்வாறு தான் மெல்ல மெல்ல தரவுகளை பத்து ஆண்டுகள் சேகரித்து மூன்று வகை நியுற்றினோவில் எதன் நிறை கூடுதல் எதன் நிறை குறைவு என கணிதம் செய்வார்கள்.
பெரிதாக வைத்தால் சடுசடுவென ஆய்வு செய்ய முடியும். ஆனால் அவ்வளவு பெரிய காந்தத்தை துல்லியமாக வைப்பது சாத்தியப்படாது. ஆய்வு பாழ்படும். கருவியை சிறிதாக வைத்தால் பத்து ஆண்டுகளுக்கு பதிலாக ஐம்பது நூறு ஆண்டுகள் எடுக்கும். ஆய்வே வீணாகும். எனவே தான் சரியான நடைமுறை சாத்தியாமான அளவில் கருவியை வடிவமைத்துள்ளனர்.
இந்த ஆய்வு மையம் அமைய வேண்டிய 66 ஏக்கர் தரிசு நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கியது. யாருடைய தனியார் நிலத்தையும் கையகப்படுத்தப்படவில்லை. நீர் தேவையும் வெகு குறைவே. பாதிப்பு ஒன்றும் ஏற்படுத்தாது. மரம் காடுகள் வெட்டப்போவது இல்லை.
இது அடிப்படை ஆய்வு திட்டம்; எனவே வேலைவாய்ப்பு போன்ற வசதிகள் நேரடியாக தராது.
இந்தத்திட்டத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்டல் வரலாற்றில் இந்த வகை ஆய்வுகள் என்ன நன்மை ஏற்படுத்தின என்பதை தான் கூற முடியும்.
நியுட்ரினோ என்பது ஒருவகை அடிப்படை துகள் எனவே இது அடிப்படை துகள்கள் ஆய்வு என்ற வகையில் படும். ஏலேக்ட்ரோன் என்பதும் துகள் தான். இன்றய எலெக்டிரானிக்ஸ் மின்னணு கருவிகள் இயங்குவது இந்த அடிப்படை ஆய்வின் தொடர்ச்சியா தான்.
பாசித்திரன் என்பதும் ஒருவகை அடிப்படை துகள் – அதைவைத்து தான் பெட் ஸ்கேன் கருவி இயங்குகிறது. அதுபோல எதிர்காலத்தில் நியுட்ரினோ கொண்டு தகவல் தொடர்பு மற்றும் கதிரியக கசிவு இனம் காணுவது போன்ற பயன்பாடுகள் இருக்கும் என எதிர்பார்கிறார்கள்.
த. வி. வெங்கடேஸ்வரன், புதுதில்லியில் உள்ள மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் விக்யான் பிரச்சார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி.
This is the first part of this article
தேனி நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்: போலி, புனைவு, உண்மை
நியூட்ரினோ குறித்த செய்திகள் மீண்டும் தலையெடுத்துள்ளன. மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு தலைமையிலான குழு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து, நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட கூடாது என வலியுறுத்தினர். தமிழ முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து முன்னர் மத்திய...
Read in : English