Read in : English
அதிமுக ஆட்சியில் 2018இல் கொண்டுவரப்பட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை முறை, கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த ஒற்றைச்சாளரமுறை பொறியியல் மாணவர் சேர்க்கையின் அடிப்படை நோக்கத்தை குலைப்பதாக உள்ளது.
ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கையில் மாணவர்கள் தங்களது ரேங்க் படி இருக்கிற காலி இடங்களில் கல்லூரியையும் படிப்பையும் தாங்களே தேர்வு செய்துக் கொள்ளலாம். ஆனால், ஆன்லைன் கவுன்சலிங்கில் மாணவர்கள் தங்களது விருப்பப் பட்டியலைத் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஆனால், மாணவர்களின் விருப்பப் பட்டியலில் இருந்து கம்ப்யூட்டரே இறுதி செய்து முடிவை அறிவிக்கும்.
1997ஆம் ஆண்டில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த மு. ஆனந்தகிருஷ்ணன் முன்முயற்சியால் பொறியியல் மாணவர் சேர்க்கையில் `சிங்கிள் விண்டோ அட்மிஷன் சிஸ்டம்’ என்கிற ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை, பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு பல விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய நிலை மாறி, ஒரே விண்ணப்பம் போட்டால் போதும், மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரிகளில் இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
இரண்டாம் ஆண்டில் அந்த மாணவர்களுக்கு பாடப்பிரிவை ஒதுக்கீடு செய்வதற்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் தனியே பணம் கேட்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, மாணவர்களுக்குக் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்யும்போதே அவர்களது மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களின் விருப்பப்படி கல்லூரியுடன் பாடப்பிரிவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதால், முக்கியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் காலி இடங்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டன.
தமிழ்நாட்டில் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்ற இந்த ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை நடைமுறை இந்த முறை மருத்துவ, தொழிற்படிப்புகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வெளிப்படையான அட்மிஷன் முறையை மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களும் செயல்படுத்தத் தொடங்கின.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக மாணவர்களும் பெற்றோரும் நீண்ட் தூரம் பயணம் செய்ய வேண்டியதைத் தவிர்க்க சென்னையுடன் மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களிலும் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறை நடத்தப்பட்டது. அதற்கு ஆகும் செலவையும் நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு அந்த நடைமுறை சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்டு, மீண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலேயே ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடந்து வந்தது.
2018இல் அதிமுக ஆட்சியின்போது, உயர்கல்வித் துறை அமைச்சருக்கும் அப்போதைய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளை அடுத்து, பொறியியல் மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன், ஆன்லைன் கவுன்சலிங் முறையும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால். இதுவரை எளிமையாக இருந்த பொறியியல் அட்மிஷன் முறை சிக்கலாகிவிட்டது. கவுன்சலிங்கிற்கு நேரடியாக வந்து, தங்களது ரேங்க் படி இருக்கிற காலி இடங்களில் தங்களுக்கு விருப்பமான இடங்களை ஒரே நாளில் சில மணி நேரங்களில் பெற்று செல்லும் எளிய நடைமுறை முடிவுக்கு வந்து விட்டது.
ஆன்லைன் கவுன்சலிங்கில் முதலில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதுடன் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களது வீட்டிலுள்ள கம்ப்யூட்டர் மூலமோ அல்லது உதவி மையங்கள் மூலமோ இதனைச் செய்யலாம். அதன் பிறகு, மாணவர்களின் சான்றிதழ்களை இணைய வழியாக சரிபார்க்கப்படும். தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு மாணவர்கள் தங்களது விருப்பப்படி கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.
முதல் விருப்பப்படி இடம் கிடைத்தவர்கள் அல்லது கிடைத்துள்ள இடம் தங்களுக்கு விருப்பமானதுதான் என்று நினைப்பவர்கள் கிடைத்த படிப்பிலேயே சேர்ந்து விடலாம். அல்லது இந்த தற்காலிக அட்மிஷன் ஆணையில் உள்ள இடங்களை ஏற்பதாகவும் மீதமுள்ள காலி இடங்களில் தங்களுக்கு விருப்ப முன்னுரிமைப் பட்டியலில் உள்ள இடங்கள் இருந்தால் அதை தங்களது தகுதி மதிப்பெண்கள்படி ஒதுக்கீடு செய்யவும் கோரலாம். அவர்களது விருப்பப்படி காலி இடங்கள் இருந்தால் அவர்களது ரேங்க் மற்றும் விருப்ப அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அட்மிஷனில் விருப்பமில்லை என்றால் கவுன்சலிங்கிலிருந்து வெளியேறி விடலாம். இதுதான் ஆன்லைன் கவுன்சலிங் நடைமுறை.
இந்த ஆண்டு பொறியியல் முதல் கட்ட ஆன்லைன் கவுன்சலிங்கில் 200லிருந்து 186 கட் ஆப் மதிப்பெண்கள் வரை பெற்ற 14,788 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எத்தனை மாணவர்களுக்கு முதல் விருப்பப்படி அல்லது முதல் மூன்று விருப்பங்களின்படி எத்தனை மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. எத்தனை மாணவர்களுக்கு அவர்களது விருப்பப்படி எந்த இடமும் கிடைக்கவில்லை என்பது போன்ற புள்ளி விவரங்களை ஆன்லைன் கவுன்சலிங்கை நடத்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளிப்படையாகத் தெரிவித்தால் ஆன்லைன் கவுன்சலிங்கில் மாணவர்களுக்கு உள்ள சிரமங்கள் வெளிச்சத்துக்கு வரும்.
விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொறியியல் படிப்புகளில் இடம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், முதல் கட்ட கவுன்சலிங்கில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற இடம் கிடைக்காத சூழ்நிலையில் அடுத்தடுத்தகட்ட கவுன்சலிங்கில் அவர்களது விருப்பத்துக்கு ஏற்ற நல்ல கல்லூரியில் விரும்பிய படிப்பில் இடம் கிடைக்குமா என்பதையும் உறுதியாகக் கூற முடியாது
“குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஐஐடி, என்ஜடி போன்ற மத்திய பொறியியல் கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஆன்லைன் கவுன்சலிங்கில் கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்வதற்கு நகர்ப்புறங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் தடுமாறுகிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் தங்களது விருப்பமான கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்வதற்கு பெரும்பாலான மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற, சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் திணறுகிறார்கள். எனவே, ஏற்கனெவே முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக, வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்ட ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கையை தொடர்ந்து அமல்படுத்த தற்போதைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் கல்வி ஆலோசகர் டி. நெடுஞ்செழியன்.
தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை முறை தற்போது நடைமுறைப்படுத்துள்ளது. ஆனால், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மட்டும் எப்போதும் போல ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறையிலேயே நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சலிங் குறித்த சந்தேகங்களுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் கிளப் ஹவுஸ் அரங்கில் திங்கட்கிழமை (அக்டோபர் 4) இரவு 8 மணிக்கு பங்கேற்று விளக்கம் பெறலாம்.
https://bit.ly/Inmathi-Discussion
Read in : English