Site icon இன்மதி

நீட் தேர்வு குளறுபடி: முதல்முறை எழுதுபவர்களுக்கு வேட்டு: பலமுறை எழுதுபவர்களுக்கு சீட்டு

Read in : English

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆனதில் இருந்து பெரும் குழப்பங்களும் சிக்கல்களும் நிலவுகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் நீட் தேர்வு நடைமுறையில் இருக்கும்வரை அதில் இருக்கும் அநீதிகளும் குழப்பங்களும் களையப்பட வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.

பெரும்பாலும் தனியார் நடத்தும் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுபவர்களே மருத்துவப் படிப்பில் நுழையும் நிலை இருக்கிறது. இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு முதல்முறையாகத் தேர்வு எழுதும் மாணவர்கள் தகுதிபெறாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. முதல்முறை தேர்வு எழுதித் தோற்றவர்கள் பயிற்சி மையங்களில் பணம் கொடுத்து சேர்கிறார்கள், பலமுறை தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி அடைகிறார்கள், முதல்முறை எழுதி தேர்வு பெறாதவர்கள் மீண்டும் தனியார் பயிற்சி மையங்களில் சேர்கிறார்கள். பயிற்சி மையம் நடத்துபவர்களுக்கு பணம் கொட்டுகிறது. இந்த நச்சு சுழலை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன.

நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு படிப்பை முடித்துவிட்டு வேலைக்குப் போக வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். பயிற்சி மையத்தில் சேர்ந்து பணம் கொடுத்து மீண்டும் மீண்டும் நீட் எழுத வசதியும் இருக்காது. உடனே படிப்பைமுடித்து வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் இல்லாத வசதி படைத்தவர்களும் பயிற்சி மையத்தில் தொடர்ந்து படிக்க பணம் உள்ளவர்களும் மீண்டும் மீண்டும் நீட் எழுதி மருத்துவப் படிப்பில் சேரலாம் என்ற நிலையை மாற்ற வேண்டிய தேவை எழுகிறது. நீட் தேர்வை ஒருமுறைதான் எழுத வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவந்தால் பல மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்படும் என்ற கவலையும் இருக்கிறது.

நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு படிப்பை முடித்துவிட்டு வேலைக்குப் போக வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். பயிற்சி மையத்தில் சேர்ந்து பணம் கொடுத்து மீண்டும் மீண்டும் நீட் எழுத வசதியும் இருக்காது.

முதல் முறையாக எழுதும் மாணவர்களைவிட, கடந்த ஆண்டுகளில் பிளஸ் டூ முடித்து விட்டு மீண்டும் நீட் தேர்வு எழுதும் பழைய மாணவர்களுக்கே இந்த ஆண்டும் எம்பிபிஎஸ் படிப்பில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதி எம்பிபிஎஸ் படிப்பில் அட்மிஷன் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 28.58 சதவீதம்தான். அதேசமயம் கடந்த ஆண்டுகளில் இடம் கிடைக்காமல் மீண்டும் நீட்தேர்வு எழுதிய, அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் தேர்வு எழுதி எம்பிபிஎஸ் படிப்பில் இடம் பெற்ற பழைய மாணவர்களின் எண்ணிக்கை 71.42 சதவீதம்.

அதாவது, நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் பெற்ற பழைய மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 8.12 சதவீதமாக இருந்தது. அந்த நடப்பு ஆண்டில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் அட்மிஷன் பெற்றவர்களின் சராசரி எண்ணிக்கை 91.87 சதவீதமாக இருந்தது என்ற விவரங்களை நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய தமிழக அரசு நியமித்த நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டி தெரிவித்துள்ளது.

2019 – 20 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் அட்மிஷன் பெற்றவர்களில் 99 சதவீதம் பேர் கோச்சிங் மையங்களில் பயிற்சி பெற்றவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீட் தேர்வு எழுதியவர்கள் என்பதையும் அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

முதல் முறை நீட் தேர்வு எழுதி வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கையையும் பலமுறை எழுதி தேர்ச்சி அடைந்தவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிடும் வரைபடம்

நீதிபதி ராஜன் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்துக்கு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதிலும் அதற்குக் குடியரசுத் தலைவரின் அனுமதி கிடைத்தால்தான் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

கடந்த சில ஆண்டுகளைப் போல, இந்த ஆண்டு பிளஸ் டூ முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதும் கணிசமான மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்காது. ஏற்கனவே பிளஸ் டூ படித்து முடித்து விட்டு கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு எழுதி இடம் கிடைக்காத மாணவர்கள் தங்களது முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து கோச்சிங் மையங்களுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்கிறார்கள். அந்த மாணவர்களுக்கே இந்த ஆண்டும் எம்பிபிஎஸ் இடங்களில் பெரும்பாலான இடங்கள் கிடைக்கும். எனவே, முதல் முறையாக நீட் தேர்வு எழுதும் மாணவர்களில் பலருக்கு இடம் கிடைப்பது பின்னுக்குத் தள்ளப்படுவது இந்த ஆண்டும் தொடரும். அதனால் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதி எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்காமல் போகும் பல மாணவர்கள் மீண்டும் தொடர்ந்து கோச்சிங் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை சில கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது பிளஸ் டூ தேர்வை மீண்டும் எழுதி கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் அந்த மதிப்பெண்கள் அட்மிஷனுக்குக் கணக்கில் கொள்ளப்பட்டன. இதனால் மீண்டும் தேர்வு எழுதி கூடுதல் மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களே எம்பிபிஎஸ் படிப்புகளில் அதிக இடங்களைப் பிடிக்கும் சூழ்நிலை உருவானதைத் தொடர்ந்து, இம்ப்ரூவ்மெண்ட் மதிப்பெண்•கள் அட்மிஷனுக்கு கருத்தில் கொள்ளும் முறை தமிழகத்தில் கைவிடப்பட்டது. இப்போதும், அதுபோன்ற முடிவு தேவைப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சென்னையில் ஒரு நீட் தேர்வு மைய வாசலில் தேர்வு எழுதுவதற்காகக் காத்திருக்கும் மாணவர்கள்

இது குறித்துப் பேசிய சமத்துவ சமுதாய டாக்டர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

“மாநில உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்குப் பெற வேண்டும்  என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. நீட் தேர்வு தனியார் கோச்சிங் மைய பயிற்சியை மாணவர்களுக்கு கட்டாயத் தேவையாக்குவதுடன் தனியார் கோச்சிங் மையங்கள் பெரும் பணம் சம்பாதிப்பதற்கும் வழிவகுக்கின்றன”, என்ற ரவீந்திரநாத்,  “இந்த நிலையில், நீட் தேர்வு ஒரு முறை மட்டும்தான் எழுத வேண்டும் என்று கட்டுப்படுத்துவது பல மாணவர்களின் எம்பிபிஎஸ் கனவைத் தகர்த்து விடும் என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

“முதல் முறை தேர்வு எழுதுபவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்குவதன் மூலம் முதல் முறையாக நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யலாம். இதுகுறித்து, கலந்து ஆலோசித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார் அவர்.

Share the Article

Read in : English

Exit mobile version