Site icon இன்மதி

தடாலடியாகப் பேசினாலும் முதல்வரின் நம்பிக்கைபெற்ற தியாகராஜன்

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Read in : English

வலுவாக ஒன்றிய அரசின் ஆட்சிபீடத்தில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக கடும் தாக்குதல் கணைகளை வீசும் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நீக்கப்படுவாரா என்ற கேள்விகளும் கணிப்புகளும் ஊடகங்களில் சூடான விவாதமாக ஆகியுள்ளது. மூத்த திமுக தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு புதுமுகமான தியாகராஜனை நிதி அமைச்சராக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தது தவறு என்பதை தனது தடாலடிக் கருத்துகளால் நிரூபித்துவருகிறார் என்று கண்டனக் கணைகள் எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்தும் பாஜகவினரிடம் இருந்தும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசுவதால் திமுக அமைச்சரவையில் இருந்து தியாகராஜன் நீக்கப்படுவார் என்று சில ஊடகங்கள் கணிக்கின்றன. ஆனால், கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் ஒன்றிய நிதி அமைச்சகத்தால் அமைக்கப்படும் ஜி.எஸ்.டி. குழுவில் தியாகராஜனின் பெயரை சேர்ப்பதற்கு ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்துள்ளார். தியாகராஜன் மீது முதல்வர் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

எந்தப் பிரச்சினையிலும் புயலைக் கிளப்பும் வகையில் அமைச்சர் பேசிவருகிறார் என்ற விமர்சனங்களுக்காகவே அவரை ட்விட்டரில் ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் தொடர்கின்றனர். பாஜவுக்கு எதிராகப் பேசவே பலரும் அஞ்சி நடுங்கும்போது துணிச்சலாக அமைச்சர் பேசுகிறார் என்கிறார்கள். எதிலும் வெண்டைக்காயை விளக்கெண்ணையில் தாளித்ததுபோல் பேசாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் அமைச்சரின் வெளிப்படையான பேச்சு அவருக்கு ஆதரவாக ஒரு பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடுஅமைச்சரவையில் முக்கியத்துவம் மிகுந்த நிதி அமைச்சர் பொறுப்புக்கு புதுமுகமான தியாகராஜனை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்தது எதிர்பாராத முடிவு. அதற்குக் காரணம் அவர் புகழ்பெற்ற திராவிட இயக்கப் பாரம்பர்யமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் வெளிநாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தவர் என்பதும் காரணமாக அமைந்தது. கொரானா பெருந்ற்றால் மாநிலத்தின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நேரத்தில் நிதித்துறையிலும் பொருளாதாரத்திலும் அனுபவம் வாய்ந்த தியாகராஜன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நிதி வருவாயை அதிகரிக்கவும் முதல்வருக்கு உதவி புரிவார் என்று கருதப்பட்டது.

பதவிக்கு வந்தவுடன் தியாகராஜன் ஊடகங்களுக்குத் தந்த அதிரடி பேட்டிகளால் கலங்கடித்தார். வெறும் வாய்வீச்சு இல்லாமல் செயல்வீரர் என்று பெயர் எடுத்தார். தமிழக நிதி நிலை குறித்து சொன்னபடி வெள்ளை அறிக்கை தந்தார். தொடர்ச்சியாக இருமுறை ஆட்சியில் இருந்த அண்ணா திமுக ஆட்சியில் மாநில அரசின் கடன் சுமை எப்படி கூடியிருக்கிறது என்பதையும் நிதிநிலை எப்படி நெருக்கடிச் சுழலில் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் வெளிக்கொணர்ந்தார். அதிமுக அரசின் நிதி நிர்வாகம் மிகவும் மோசமாக இருந்ததுபோன்ற சித்திரத்தையும் அதை சரிசெய்ய அவர் எப்படி திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தினார்.

ஸ்டாலினும் மூத்த அமைச்சர்களும் பாஜகவுக்கு எதிராகப் பேசுவதில் எச்சரிக்கையாக இருந்த நிலையில் தியாகராஜன் பாஜகவுக்கு எதிராக காட்டமான, தீவிரமான விமர்சனங்களை வீசினார்.

ஆனால், தேவையில்லாமல் பாஜக மீது கடும் தாக்குதல் தொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்டார். ஈ.வெ.ரா பெரியாரால் நிறுவப்பட்ட திராவிடர் கழகத்தின் முன்னோடிக் கட்சியான நீதிக்கட்சியின் முன்னணித் தலைவரான பி.டி.ராஜனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். அவரது தந்தை பிடிஆர் பழனிவேல் ராஜன் மதுரையில் திமுகவின் முன்னணித் தலைவராக இருந்தவர். பாஜகவையும் அதன் இந்துத்வா கொள்கைகளையும் தியாகராஜன் கடுமையாக எதிர்ப்பது இயல்பானதுதான். ஸ்டாலினும் மூத்த அமைச்சர்களும் பாஜகவுக்கு எதிராகப் பேசுவதில் எச்சரிக்கையாக இருந்த நிலையில் தியாகராஜன் பாஜகவுக்கு எதிராக காட்டமான, தீவிரமான விமர்சனங்களை வீசினார்.

தியாகராஜனின் தாக்குதல் பாஜக, அதிமுக தலைவர்களை நெளிய வைத்தது. ஆனால், அமைச்சர் அசரவில்லை. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் மீது தியாகராஜன் தொடுத்த தாக்குதல்கள்களை பாஜகவை கடுமையாக எதிர்ப்பவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அதிகாரத்தின் உச்சியில் மத்திய அரசை ஆளும் கட்சியின் பிரதிநிதிகளான பாஜக தலைவர்களை இப்படி யாரும் உக்கிரமாகப் பேசியதில்லை.  

கடைசியாக நடந்த ஜி.எஸ்.டி. குழுக் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் கடைசி நேரத்தில் தரப்பட்டதால் தான் வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேரம் கொடுத்துவிட்டதாகவும் கூறி தியாகராஜன் புறக்கணித்தார். இதை பாஜகவும் அதிமுகவும் கடுமையாகக் குறைகூறினர். இதுகுறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் கே.அண்ணாமலை கூறிய கருத்துக்கு தியாகராஜன் ட்விட்டரில் கொடுத்த பதில் மிகவும் சூடானது. அண்ணாமலை நடைமுறை உலகத்தையும் கற்பனை உலகத்தையும் குழப்பிக்கொள்ளும் மனநோயாளி என்று சொன்ன தியாகராஜன் ‘சாகும்வரை தான் கன்னடனாகவே இருப்பேன்’ என்று அண்ணாமலை சொன்னதையும் நினைவுபடுத்தினார். அமைச்சரின் கருத்து பாஜக தலைவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிகாரத்தின் உச்சியில் மத்திய அரசை ஆளும் கட்சியின் பிரதிநிதிகளான பாஜக தலைவர்களை இப்படி யாரும் உக்கிரமாகப் பேசியதில்லை.

திமுகவின் ஏனைய தலைவர்கள் பாஜகவுக்கு எதிரான கருத்துகளைப் பேசும்போது மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றும்போது தியாகராஜனின் கருத்துக்கணைகள் திமுக தலைவர்களையே வியப்பில் ஆழ்த்தியது. வெளிப்படையாக முதல்வர் ஸ்டாலின் இதுவரை தனது நிதி அமைச்சரைக் கண்டித்ததில்லை. ஆனால், அரசியல் கருத்துகளைப் பேசும்போது காட்டமான வார்த்தைகளைக் கூற வேண்டாம் என்றும் கண்ணியமாகப் பேசும்படியும் தனிப்பட்ட முறையில் சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் ஒருமுறை தியாகராஜன் தெரிவித்த கருத்துகளுக்காக ஸ்டாலினே அமைச்சர் முன்னிலையில் அதிமுக உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஒரு பத்திரிகையாளரிடம் பேசும்போது தியாகராஜன் ஜி.எஸ்.டி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்றும் அமைச்சரின் பேச்சு மிகவும் கடுமையானது என்றும் கூறினார். இது குறித்து ட்வீட் செய்த தியாகராஜன் இரண்டு கிலோ இறால் மீன் கொடுத்தாலே இளங்கோவனை விலைக்கு வாங்கிவிடலாம் என்றும் இரண்டு முறை கட்சி இளங்கோவனை நீக்கியிருக்கிறது என்றும் தனது கட்சியைச் சேர்ந்தவரையே மட்டம் தட்டி தடாலடியாக தாக்குதல் தொடுத்தார். ஆனால், அந்தக் கருத்தை அமைச்சர் பின்னர் நீக்கிவிட்டார்.

தான் எல்லையைத் தாண்டி பேசவில்லை என்று கூறும் தியாகராஜன், பாஜக-அதிமுகவின் பொய்யானஅரசியல் வேடத்தைக் கலைக்கும் வகையில் பொருத்தமான வார்த்தைகளைத் தேர்வு செய்வதாகவும் கூறினார்.

தேசியகவி சுப்ரமணிய பாரதிபோல் நேர்மையான கோபத்துடன் தியாகராஜன் பேசுகிறார் என்று கூறும் நெட்டிசன்களும் இருக்கின்றனர். திமுகவின் புயல் பறவையாக பி.டி.ஆர். சிறகைவிரித்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Share the Article

Read in : English

Exit mobile version