Site icon இன்மதி

மனுவை எதிர்த்து, அம்பேத்கர் வழியில்? ஆர்ப்பாட்ட அரசியலால் தலித்துக்களுக்குப் பயன் உண்டா

Picture credit: twitter.com

பரபரப்பாக சமூக வலை தளங்களில் பேசப்பட்ட விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் ஆங்காங்கே சிறிய அளவில் நடந்து முடிந்திருக்கிறது. மனுதர்ம நூலைத் தடை செய்யவேண்டும் என்பதே முக்கிய கோரிக்கை.

அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பெரியாரிய அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்தும் திருமாவளவன் தலைமை தாங்கிய ஆர்ப்பாட்டத்திலேயே வெறும் நூறு பேர் தான் கலந்துகொண்டிருக்கின்றனர் ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு இந்தக் கோரிக்கையில் எந்த அளவு ஈடுபாடிருக்கிறது என்பதை நம்மால் ஊகிக்கமுடியும்.

முன்னதாக திருமா பெண்களை மனு ஸ்மிருதி இழிவுபடுத்துவதாகக் கூற, சம்பந்தப்பட்ட ஒளிநாடாவை வெட்டி, ஒட்டி, பொதுவாகவே பெண்களைக் கேவலப்படுத்திவிட்டார் என சங்கிகள் பிரச்சாரம் செய்ய, அவருக்கெதிராக முதல் தகவலறிக்கையே பதிவாகிவிட்டது. உடனே ஆளாளுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பெண்கள் அமைப்பும் திருமாவுக்கு ஆதரவு தெரிவிக்க, ஆக்ரோஷமாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட இன்னமும் பரபரப்பு.

https://www.bbc.com/tamil/india-54660846

சனியன்று காலை ’இனிதே’ முடிந்தது. பெரிய அளவில் மற்ற கட்சியினர் ஆர்வலர் சக சிந்தனையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கப்பால், திருமாவளவனே இது ஒரு நாள் நாடகம் மட்டுமே என்ற ரீதியில் தான் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஸ்மிருதி தடை செய்யப்படாவிட்டால் இன்னமும் போராட்டம் தீவிரமடையும் என்று கூறவில்லையே., தன் உரையை முழுமையாகக் கேட்டிருந்தால் தான் பெண்களை இழிவுபடுத்துவதாக எவரும் கூறமாட்டார்கள் என்று சொல்லி முடித்துக் கொண்டுவிட்டார்.

இப்போது முதல் தகவலறிக்கையும் மறக்கப்படலாம். திருமா மீது அரசு வழக்கு தொடருமானால் அதைப் பயன்படுத்தி தன் நிலைப்பாட்டை இன்னும் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்யக்கூடும் என்பதாலேயே புகார் கிடப்பில் போடப்படலாம்.

சரி, திருமா என்னதான் சொல்ல விரும்புகிறார்? மனு அதர்மத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் மூலம் என்ன சாதிக்க முனைகிறார்? அவரது தற்போதைய அறைகூவலின் பின்னணி என்ன? அவசியம்தானென்ன? விடை தெரிந்தவர் எவரேனும் இருந்தால் அவருக்குப் பரிசாக நூறென்ன ஆயிரம் பொற்காசுகள் தரலாம்!!

அரசு, இந்து மத வெறியர்கள் இவற்றுக்கப்பால், எந்நூலையும் தடை செய்யவேண்டும் என்பதே கருத்துரிமைக்கெதிரானது. தத்தம் மனநிலை, சமூகப்பார்வைகளுக்கேற்ப எதையுமே தடைசெய்யுமாறு கோரமுடியும். தீவிர இந்துத்துவர்களும் மற்ற மத வெறியர்களும் இணைந்து மக்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையினையே தடை செய்யவேண்டும் எனக்கூடக் கோரலாம். இது எங்குபோய் முடியும்?

இது பற்றியெல்லாம் அவர் யோசித்தாரா என்பதே கேள்விக்குறிதான். அங்கிங்கெனாதபடி இந்தியாவெங்கும் இந்துத்துவ முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன. விந்தியத்திற்குத் தெற்கே பெரிதாக மவுசு ஏதும் இல்லை. ஆனாலும் இந்து மதத்தை நாள் தோறும் நாராச நடையில் சாடிவந்த பெரியார் பிறந்த மண்ணிலேயே தங்கள் இந்து மத அடையாளங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் போக்கு பரவலாகிக்கொண்டிருக்கிறது.

இன்று விபூதி குங்குமம் பூசாத அமைச்சர்களே இல்லை எனலாம். முதல்வரே மஹாளய அமாவசை என ராமேஸ்வரம் அருகே கடலில் முங்கிக் குளித்து மூதாதையரை நினைவு கூறுகிறார்.

இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலனுக்கு அஞ்சலி என்றால் திமுகவினர் முதலில் போய் நிற்கின்றனர். முஸ்லீம்களையும் இதர சிறுபான்மையினரையும் தொடர்ந்து குறிவைத்து அவர்களுக்கு மேலும் மேலும் மன உளைச்சலை உருவாக்கும் மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆளும் அ இ அதிமுக ஆதரிக்கிறது.

எதிரணியில் இருப்பதாகவும் மதச்சார்பின்மையில் உறுதியாக இருப்பதாகவும் கூறும் திமுக முன்பு போல் பிராமணர்களை சீண்டுவதில்லை, இந்து மதத்தைக் கலாய்ப்பதில்லை. எந்தப் பகுதியில் எந்தத் தரப்பினரின் வாக்குக்களை இழப்போமோ என்றஞ்சி மிக எச்சரிக்கையுடனேயே நடந்துகொள்கின்றனர். இந்நிலையில் ஏன் திருமாவளவனின் திடீர் ஆவேசம்?

மனு தர்மம் பற்றி எவரும் எதுவும் பேசாத நிலையில் அந்த ஸ்மிருதியைத் தடைசெய்யக் கோருவானேன்? எத்தனை நூலகங்களில் அல்லது நூல் விற்பனை நிலையங்களில் ஸ்மிருதியின் தமிழ் மொழிபெயர்ப்பைக் காணமுடியும்?

பெரிய கட்சிகளே பம்மும்போது ஏன் திருமா துள்ளவேண்டும்? அரசியல் ஆதாயம் ஏதும் பெரிதாக கிடைக்கக்கூடிய வாய்ப்பில்லாதபோதும், இன்னும் சொல்லப்போனால் பின்னடைவுகள் கூட ஏற்படலாம் என்ற நிலையில், ஏன் இந்த ஒரு நாள் போராட்டம்? யாராவது அவரைத் தூண்டிவிடுகின்றனரா, அப்படியெனின் தூண்டுவோரின் நோக்கம் என்னவாக இருக்கமுடியும்?

அவரது அண்மைக்கால வரலாறு, அவர் ஏதோ ஒருவித இலாபத்தை மனதில் கொண்டே அவர் இப்படிச் செய்திருக்கிறார் என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது. அல்லது சில நாள் பரபரப்பிற்காகக்கூட இப்படி ஒரு அக்மார்க் திராவிட இயக்க செயலில் அவர் இறங்கியிருக்கக்கூடும்.

அதி தீவிர தலித் போராளியாக முதலில் அறிமுகமாகி பின்னர் தேர்தல் அரசியல், அதன் பின்னர் தமிழ்த் தேசியம், இப்போது அதி தீவிர இந்துத்துவ/பார்ப்பன எதிர்ப்பு என்று செல்கிறது தொல் திருமாவளவனின் அரசியல் பயணம். நடந்து வந்த பாதையை நம்மால் கணிக்க முடிகிறது, ஆனால் அவர் இலக்கு என்ன, எங்கு போய்ச் சேர விரும்புகிறார் என்பதைத் தான் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

1999ஆம் ஆண்டில்தான் அவர் தேர்தல் அரசியலில் காலடி எடுத்துவைக்கிறார். அதுவரை அவர் அரசுப்பணியில் இருந்து கொண்டு மதுரையில் இயங்கி வந்த ஒரு தலித் ஆர்வலர் அமைப்பையும் நடத்திவந்தார்.

மெல்ல மெல்ல அவரது ஆவேச உரை வீச்சுக்கள் பலரது கவனத்தை ஈர்க்க, குறிப்பாக தலித்துக்களை எதிரிகளாக அடையாளம் காட்டி வன்னியர்களை அணி திரட்டிக்கொண்டிருந்த பாமக நிறுவனர் இராமதாஸ் மேடை தோறும் திருமாவை சாட, அவரது அமைப்பான விடுதலைச் சிறுத்தைகளின் செல்வாக்கு கூடியது.

கூட்டணிக் கட்சியான திமுக பாஜக அணி பக்கம் தாவ, அ இஅதிமுகவுடன் கைகோர்த்துவிட்ட தாய்க் காங்கிரசுக்கும் திரும்பமுடியாமல் தவித்த கருப்பையா மூப்பனார் தனது தமிழ் மாநில காங்கிரசை அரசியல் களத்தில் நிலைநிறுத்தவேண்டி தனித்துப் போட்டி என முடிவெடுத்தார்.

ஆனாலும் பெரிய அளவில் வாக்கு வங்கி ஏதும் இல்லாத நிலையில், இருக்கும் சிறிய சிறிய அமைப்புக்களையெல்லாம் ஒன்றிணைத்து கூட்டணி என்றார். அப்படித்தான் திருமா தலைமையிலான விடுதலை சிறுத்தைகளும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும் மூப்பனார் பின்னே அணிவகுத்தன.

ஓராண்டுக்கு முன் நடந்திருந்த மக்களவைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட புதிய தமிழகம், ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லையெனினும், தென் தமிழகத்தில் ஆறேழு தொகுதிகளில் கணிசமான வாக்குக்களைப் பெற்று திமுக-தமாகா கூட்டணி தோல்வியடையக் காரணமாயிருந்தது.

அதன் எதிர்காலம் மிகப் பிரகாசமாயிருப்பதாகப் பலரும் நினைத்தனர்.  கிருஷ்ணசாமி அப் புகழ் போதையில் தான் ஏற்கனவே பெருந்தலைவராகிவிட்டது போலவே கால் தரையில் பாவாமல் மிதந்து கொண்டிருந்தார்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்கட் தொகையில் தலித் மக்களின் எண்ணிக்கை 18லிருந்து 19 சதம் வரை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மாநிலத்தில் பரவலாக வாழும் பறையர்கள் 13 சதம், தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் மட்டும் அடர்த்தியாகக் காணப்படும் காண பள்ளர்கள் வெறும் ஐந்து சதம்தான் என்பதும் பொதுவான புரிதல்.

அந்த அளவில் பறையர்கள் அமைப்பாகக் கருதப்படும் விடுதலை சிறுத்தைகளுக்கே கூடுதல் செல்வாக்கு இருக்கும் என்றாலுங்கூட ஒட்டுமொத்த தலித்தினமும் தன் தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டது போல் ஆர்ப்பரித்தார் கிருஷ்ணசாமி. தொண்டர்கள் கூட கைகட்டி வாய் பொத்தி நின்றனர்.

திருமாவளவனோ மிக அடக்கமாக, நிதானமாக நடந்துகொண்டார்.  தேர்தல் நேரத்தில் அவரது கட்சி அலுவலகத்தில் இளைஞர்களின் உற்சாகம் பொங்கி வழிந்ததை நேரில் காணமுடிந்தது. தங்களுக்கு விடிவு பிறந்துவிட்டது போல மகிழ்ந்தனர். திருமாவும் அணுக்கத் தலைவராயிருந்தார்.

தமாகா கூட்டணி படுதோல்வியடைந்தது, மூப்பனாரும் முடங்கிப் போனார். புதிய தமிழகமும் 1998 தேர்தல்களில் ஏற்படுத்திய பிரமிப்பை மீண்டும் சாதிக்க முடியவில்லை. ஆனால் திருமாவிற்கு பரவலான வாக்கு வங்கியிருப்பது உறுதிப்படுத்தப் பட்டது. அதன் பின் அவருக்கு ஏறுமுகம்தான். கிருஷ்ணசாமியோ எங்கெங்கோ சுற்றி இப்போது மோடி பக்தராகிவிட்டார்.

தனது வலிமை, வலிமைக்குறைவு இரண்டையுமே நன்கு உணர்ந்து, மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்ளும் திருமா ஏதோ ஒரு கூட்டணியில் இடம்பெற்றுவிடுகிறார், தமிழகத்தின் குறிப்பிடத் தக்க தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

ஆனால் அவரது வளர்ச்சியால் தலித் மக்களுக்கு, ஏன் பறையர்களுக்குக் கூட என்ன நன்மை விளைந்திருக்கிறதென்றால், சொல்லும்படி ஏதுமில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியாகிவிட்டது,  தனி டிவி, யூ ட்யூப் சானல், உணவு, கேளிக்கை விடுதிகள், பிரம்மாண்டக் கட்டிடம், இப்படி இப்போது பிரமிப்பை ஏற்படுத்துவது விசிகவே.

எங்கும் கிளைகள் உண்டு  இலட்சக் கணக்கில் தொண்டர்கள், ஆங்காங்கே சிறு சிறு பூசல்களிலும் தலையிட்டு வளப்படுத்திக்கொண்டிருக்கும் நிர்வாகிகள், ஏதோ வேலை வாய்ப்பு, டெண்டர்களில் சிறு பகுதி, இவற்றைத் தாண்டி தலித் மக்கள் என்றல்ல பறையரினத்தாரின் வாழ்வு கூட மேம்பட்டுவிட்டதாகக் கூறவியலாது.

தலித்துக்கள் ஒடுக்கப்படுவதாக மேடை தோறும் முழங்கிக்கொண்டிருந்த திருமாவளவனும் அவரது சக தலைவர்களும் இப்போதெல்லாம் தலித் பிரச்சினை பற்றிப் பேசுவதே இல்லை. இரட்டைக் குவளை, மயானம், சேரிகளின் நிலை இவையெல்லாம் பிரச்சினகளாகக் கூடத் தோன்றுவதில்லை. மூச்சும் பேச்சும் தேர்தல்தான்.

199க்குப் பிறகு எப்போதுமே தலித்துக்களை மையப்படுத்தி எந்தப் போராட்டத்தையும் விசிக நடத்தவில்லை. ஒரு கட்டத்தில் வன்னியர்கள் கட்சியாக அறியப்படும் பாமகவிற்கு நெருக்கமானார்  திருமா. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் தலித் கூட்டணி ஒன்று உருவாவது போலத் தோன்றியது.

பின்னர் தமிழ்த் தேசிய பதாகையின் கீழ். பிரபாகரன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைவன், தானே தமிழகத்தின் பிரபாகரன், இப்படியான பிம்பங்கள்.

தமிழ்த் தேசியம் பேசுவது பொதுவாக சாதி இந்துக்களே. விடுதலைப் புலிகளை வாழ்த்தியே வளர்ந்திருக்கும் சிறு சிறு அமைப்புக்களில் கூட தலித் தலைவர்களைக் காணவியலாது. அவ்வமைப்புக்கள் யாழ்ப்பாண வெள்ளாள ஆதிக்கத்தை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டவர்கள் அல்லது அதை விமர்சிப்பதைத் தவிர்ப்பவர்கள்.

ஈழத்துப் பள்ளர்கள் கட்சி என எள்ளி நகையாடப்பட்ட ஈ பி ஆர் எல் எஃப் பிரபாகரனால் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டது பற்றி எந்த ஈழ ஆர்வலரும் விமர்சிப்பதில்லை. தமிழக தலித் மக்கள் மீதான வன்முறை பற்றியும் மௌனமே. அப்படிப்பட்ட கூட்டத்தில் ஏன் திருமா இடம் பெறவேண்டும்?

புலி ஆதரவு நிலைப்பாடிருந்தால்தான் புலம் பெயர் தமிழர்களிடமிருந்து நிதி வரவிருக்கும் என்கின்றனர் நோக்கர்கள்.

இழந்துவிட்ட செல்வாக்கை மீட்டெடுப்பதில் மும்முரமாகவிருக்கும் ராமதாஸ் கூட இப்போது அதிகம் தமிழ்த் தேசியம் பேசுவதில்லை. ஆனால் பிரபாகரனின் உண்மை வாரிசு யார் என்ற போட்டியில் தான் முன்னே நிற்பதாகத் திருமா காட்டிக்கொண்டிருக்கிறார்.

வன்னியர் வாக்கு வங்கியை வலுப்படுத்திக்கொள்ள திருமாவுடனான கூட்டணியை ராமதாஸ் முறித்துக்கொண்ட பின், வட மற்றும் மத்திய மாவட்டங்களில் இடைநிலை சாதியினருடனான மோதல்கள் அதிகரித்துவிட்டன. ஆனால் அவை குறித்து சம்பிரதாய அறிக்கைகளைத் தாண்டி திருமா ஏதும் சொல்வதில்லை, செய்வதில்லை.

ஈழ நாயகனாக ஒரு திரைப் படத்தில் தோன்ற, பின் முழுநேர நடிகனாகப்போவதாகவும், ஓய்வு நேரத்திலேயே அரசியல் என்றும் கூடச் சொன்னார். ஆனால் திரைப்பட உலகில் எதிர்பார்த்த வரவேற்பில்லாத நிலையில் மீண்டும் அரசியலுக்கே.

ஆனால் மேலே குறிப்பிட்டிருப்பதைப் போன்று வெறும் தேர்தல் அரசியலே, சாதி, இனம், எல்லாமே அகராதியில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. திருமா தேர்தலுக்காக சிதம்பர தீட்சிதர்களின் ஆதரவு கோரும்போது, திருநீறு பூசப்பட்டதும் உண்டு. அவரே சில கோவில் கும்பாபிஷேகங்களில் பங்கேற்றதும் உண்டு.

அண்மையில்தான் திருமாவின் தளபதி, தலித்தியல் அறிஞர் ரவிகுமார் தலித் பிரிவினர் அனைவரும் ஆதிதிராவிடர்களாகிவிடவேண்டும் எனக் கூறி சிறிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பறையர் என்பது இழிச்சொல்லாகக் கருதப்படுவதால் ஆதிதிராவிடர் பயன்படுத்தப்படலாம், ஆனால் மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினரான அருந்ததியரோ, தாங்கள் தலித்தே இல்லை என்று இப்போது வலியுறுத்தும் பள்ளர்களோ ஆதித்திராவிடர் என்ற பொதுத் தலைப்பை ஏற்றுக்கொள்வதில்லை. பறையர் தலைமையை ஏற்றுக்கொள்ளவே அழைப்பு என விமர்சிக்கப்பட்டது.

அருந்ததியர்களை அதிகம் விசிகவில் காணமுடியாது. அருந்ததியர் குடியிருப்புப் பகுதிகளில் விசிக கொடி கூடப் பறக்காது. தமிழ்த் தேசிய தீவிரம் காட்டும் திருமா பெருமளவில் அருந்ததியர்கள் தெலுங்கு பேசுவதால் அரவணைத்துக்கொள்ளத் தயங்குகிறாரா? அல்லது கழிப்பறை மற்றும் சாலைகளை சுத்தப்படுத்தும் பணியில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டுவரும் அப் பிரிவினரை மற்றவர்கள் தங்களுக்கு சமமாக ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலேயே திருமாவும் ஒதுக்குகிறாரா?

அக்கேள்விகளுக்கெல்லாம் விடை காணும் முன்னரேயே ஆதிதிராவிடராக எனும் அச் சடங்கு முடிய, இப்போது மனு ஸ்மிருதிக்கெதிரான ஆர்ப்பாட்ட சடங்கு.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் மிக வலிந்து சென்றுதான் திமுகவுடன் ஒட்டிக்கொண்டனர் சிறுத்தைகள். அப்போது கூட மற்ற சாதியினர் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டாம் என எச்சரிக்கையாக எங்குமே சுவர் விளம்பரங்களில் விசிக கொடி, முழக்கம் எதுவும் இடம்பெறக்கூடாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். திருமாவும் அடிபணிந்தார். திமுக ஆதரவில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர் ஆனால் கொள்கை, தனித்துவமெல்லாம் என்னவாயிற்று?

இப்போது மனுதர்மத்தை ஆக்கிரோஷமாக எதிர்க்கும் விசிக 2001 சட்டமன்றத் தேர்தலிகளில் திமுக-பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டவர்கள்தானே. அப்படி இருக்கையில் அதன் நம்பகத்தன்மை என்னவாகவிருக்கும்?

தாழ்வுற்று ,பாழ்பட்டு நிற்கும் பிரிவினருக்கு அடையாள அரசியல் சில நன்மைகளைத் தரக்கூடும். ஒரு தொகுப்பைத் திருப்திப் படுத்தவேனும் ஏதாவது செய்யவேண்டிய அவசியத்திற்கு ஆளாகின்றனர் ஆட்சியாளர்கள். அந்த வகையில் தலித் மக்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.

அம்பேத்கரின் முன்முயற்சிகளின் காரணமாகத்தான் தலித்துக்கள் மீது தனிக்கவனம் செலுத்துவது போல நடந்து கொள்கின்றன அரசியல் கட்சிகள். அமைச்சர்களாகின்றனர், அதிகாரிகளாகின்றனர், தனிநபர் முன்னேற்றம் சமூகத்திற்கும் உதவுகிறது. மறுக்கமுடியாது. ஆனால் எல்லாமே அடையாளத்திற்குத்தான்,

இதோ பார், இங்கே பார், ஜெகஜீவன்ராமிலிருந்து ராம்விலாஸ் பாஸ்வான் இப்போது அத்வாலே எல்லோருமே நாம் பீடு நடை போடப் போதுமான சான்றுகள் என மார்தட்டிக்கொள்ளலாம் –  நம் கருணாநிதி தலித்துக்கள் என் சம்பந்தி எனச் சொல்லிக்கொள்வாரே அது போல,

உண்மையில் அகில இந்திய அளவில் அம்பேத்கருக்குப் பிறகு எந்த தலித் தலைவரும் நேர்மையாளராக, தலித் நலனில் மனதார அக்கறை காட்டுபவராக அமையவில்லை/.

துவக்கத்தில் சில நல்லியல்புகளால் நம்பிக்கையூட்டிய தொல் திருமாவளவனும் அந்தப் பட்டியலில் இணைந்திருப்பது பெரும் சோகம்.

 

 

Share the Article
Exit mobile version