Site icon இன்மதி

வயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்!

அன்புள்ள விவசாயிகளே! கடந்த இரண்டு வாரங்களாக  பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது குறித்து எழுதியதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பலர், வீட்டு உபயோகத்துக்கே தண்ணீர் இல்லாதபோது நாட்டு மாடுகளை எப்படி பராமரிப்பது என கேள்வி எழுப்பியிருந்தனர். சிலர், கிராமங்களில் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் சூழ்நிலையில் நாட்டு மாடுகளை எப்படி பாதுகாக்க முடியும் என்றும் கேட்டிருந்தனர். இம்மாதிரியான கேள்விகளை எழுப்புவோருக்கும் பத்தியை வாசிப்போருக்கும் ஒன்று மட்டும் கூற முடியும், மனமிருந்தால் மார்க்கமுண்டு.

நான் பல ஆண்டுகளுக்கு   முன்பு சந்தித்த ஒருவரைப் பற்றி கூறுகிறேன். அவருடைய பெயர் .ரமேஷ் பரியா, மத்தியப்பிரதேசம் ஜாபா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரிடம் பல ஏக்கர் நிலமிருக்கிறது. அதில் ஒரு ஏக்கரில் காய்கறி வளர்த்தார். காய்கறிப் பயிர்கள் லாபத்தைக் கொடுத்ததால் அவர் பாவக்காய் பயிரிட ஆரம்பித்தார். ஆனால், நாற்றங்காலுக்கு போதிய நீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டார். இதனால் கவலையடைந்த அவர் விஞ்ஞானிகளுடன் கலந்தாலோசித்தார். அவர்களது அறிவுரையின்பேரில்  பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி நீர்ப்பாசனம் செய்தார். இந்தவகைப் பாசனம் தொங்குகாய் பயிர்களுக்கு ஏற்றதாக இருந்தது. இது, சொட்டுநீர்ப்பாசனம் போல் செயலபட்டதால் சிறு மற்றும் பெரு விவசாயிகள் இம்முறையைப் பயன்படுத்த முடிந்தது.

பாட்டிலின் அடிப்பாகம் அகற்றப்பட்டு தண்ணீர் நிரப்பி, கம்பு ஊன்றி அதனுடன் சேர்த்து  மேலிருந்து கீழாகத் தொங்கவிடப்படும்.  சலைன் பாட்டில் போல் செயல்படுவதற்காக பாட்டிலின் மத்தியில் சின்ன திருகு அமைக்கப்பட்டு தண்ணீர் சொட்டு சொட்டாக விழும் வகையில் இருக்கும்.

அந்த விவசாயி, 300 பிளாஸ்டிக் பாட்டில்களை பழைய பேப்பர் கடையில் வாங்கிப் பயன்படுத்தினார். இம்முறை, அதிக உழைப்பைக் கோருவதால் அவரின் மொத்தக் குடும்பமும் பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் வேலையைச் செய்தது. அவருடைய வெற்றியைக் கண்ட மாநில அரசு அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. இந்த தொழில்நுட்பம் குறித்து அறிந்த பல விவசாயிகள் நிலத்துக்கே நேரடியாக வந்து பார்வையிட்டனர்.

நாம் நீர்ப்பாசனம் குறித்து பேசும்போது, உடனே நமது மனதில் இஸ்ரேல் நினைவுக்கு வருகிறது. ஆனால், நீங்கள் இஸ்ரேலுக்கு சென்று பார்வையிட்டால் அவர்கள் நம்மைவிட எந்த விதத்திலும் சிறந்தவர்கள்  இல்லை என்பதை உணர்ந்துகொள்ள முடியும். அவர்கள் நாடு பாலைநிலம் என்பதால் தண்ணீரின் அருமையை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். இங்கு, நம் நாட்டில் அபரிமிதமான வளங்கள்இருப்பதால், குறிப்பாக தண்ணீர் போன்ற வளங்களைச்  சேமிக்க வேண்டும் என்றோ  பாதுகாக்க வேண்டும் என்றோ நினைப்பதில்லை.

தென்னிந்தியாவில் நெல் வயல்களில் பயிர் நடவுக்கு பிறகு, ஒரு விஷயத்தை நீங்கள் காணலாம். விவசாயி தன் நிலத்தில் மோட்டர் பம்ப்பை போட்டு, வயலில் நீர் நிரம்பி அது வரப்பையும் மீறி போய்க்கொண்டிருக்கும்போதுதான் விவசாயி அதனை நிறுத்த முற்படுவார். அதனையும் அவருக்கு யாராவது நினைவுபடுத்த வேண்டும்.

ஆனால், ரமேஷ் பரியா இந்த விஷயத்தில் சாதித்துள்ளார். அவரும் நாம் வசிக்கும் இதே நாட்டில் இருந்துதான் வந்து, நாம் கனவு காணும் ஒரு விஷயத்தைச் செய்துள்ளார். அவரால் செய்ய முடியும்போது நம்மால் இயலாதா? அதற்கு  பிரச்சினைக்குத் தீர்வு காண ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை அவசியம்.

Share the Article
Exit mobile version