Site icon இன்மதி

வலங்கைமான் தந்த வினைஞன்

ஹரிஷங்கர் மற்றும் முருகானந்தம்

வருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். அதிகம் கண்டுகொள்ளப்படாத விருதுதான் என்றாலும் என்னளவில் பெருமகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்விது. வருடம்தோரும் வாத்தியம் செய்யும் ஒரு வினைஞரை கௌரவித்து அவரை வாழ்நாள் நண்பராக்கிக் கொள்ளும் தருணமது.

இந்த வருடம் கஞ்சிரா மேதை ஹரிசங்கர் அவர்களின் அறுபதாவது பிறந்த வருடம் என்பதால், அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த வினைஞரை கௌரவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஹரிசங்கர் அவர்களின் சீடர்களுடன் பேசுகையில் திரு.முருகானந்தமே ஹரிசங்கருக்கு வேலை செய்த வினைஞர்களுள் முதன்மையானவர் என்று தெரிய வந்தது. அவருடைய மகன் நவநீதம் சென்னையில் மிருதங்கவேலை செய்து வருகிறார் என்கிற தகவலும் கிடைக்க – கூகிள் உபயத்தில் நவநீதத்தின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரிடம் பேசுகையில் முருகானந்தம் இப்போது தொழிலிலிருந்து ஓய்விபெற்று தன் சொந்த ஊரான வலைங்கைமானில் உள்ளார் என்று தெரிய வந்தது.

வலைங்கைமான் என்ற பேரைக் கேட்டதுமே அந்த ஊர் சங்கீதத்துக்கு அளித்த தவில் மேதை சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு காதில் ஒலித்தது. குறிப்பாக மேண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு அவர் வாசித்த கச்சேரிகள்! மேண்டலின் ஸ்ரீனிவாஸ் உச்சிக்கு வரும்போது நிறைய வீடுகளில் மங்கலவாத்யமாக டேப்ரிக்கார்டர்களில் ஒலித்துக் கொண்டிருந்த நாகஸ்வரத்தின் இடத்தை மேண்டலின் பிடித்துக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு என்பது என்னுடைய துணிபு. மேண்டலினின் இனிமையான நாதத்தையும், விறுவிறுப்பான காலபிரமாணத்தையும் மீறி அந்த ஒலிநாடாக்களுக்கு மங்கல வாத்யத்தின் தன்மையைக் கொடுத்ததில் தவிலின் நாததிவலைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு.

இந்த எண்ணங்களை எல்லாம் அசை போட்டபடி முருகானந்தம் அவர்களை அழைத்து அவருக்கு விருது வழங்க விரும்பவதைச் சொன்னேன். “எனக்கு விருதா? நான் அப்படி ஒன்னும் பண்ணலியே”, என்றவரிடம் ”ஹரிசங்கரின் அறுபதாவது பிறந்த ஆண்டில் உங்களுக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்கும்”, என்றவுடன் ஒப்புக் கொண்டார்.

அதன்பின் அவரை வலைங்கைமானில் சென்று காண நான் திட்டமிட்ட போதெல்லாம் ஏதோவொரு காரணத்தால் தட்டிக்கொண்டே போனது. விருது கொடுக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில் தொலைபேசியிலாவது அவரிடம் பேட்டி எடுத்தவிடலாம் என்று இன்று அழைத்தேன்.

எனக்குவோர் இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

“என்னை அப்பா தவில் கத்துக்க சொன்னாங்க. நான் மாட்டேனுட்டேன். நாகஸ்வரம் கத்துக்கப் போனேன்.”, என்று பேட்டியைத் தொடங்கினார்.

பெரும்பாலும் வாத்தியம் செய்யும் வினைஞர்களுக்கு இசைப்பயிற்சி இருப்பதில்லை என்பதால் எனக்கு ஆவல் மிகுந்தது.

“அப்பாவுக்கு தவிலில் ஆர்வமா?”

“என்ன இப்படி கேட்கறீங்க. அவரு பெரிய வித்வானாச்சே”

என் ஆவல் அடுத்த நிலையை எட்டியது.

“ஐயா பேரென்னங்க…”

“வலைங்கைமான் சண்முகசுந்தரம்….”

“ஆ!!!…”

தூக்கிவாரிப் போட்டது. என்னை சிறுவயதில் இசையின் பால் இழுத்த அந்த வாசிப்புக்கு சொந்தக்காரரின் வாரிசுக்கு விருதளிக்கப் போகிறோம் என்றெண்ணி புளகாங்கிதமடைந்தேன்.

“இவ்வளவு நாளா அவர்தான் உங்க அப்பானு தெரியாம இருந்துட்டேன். மேண்டலினுக்கு அவர் வாசிச்ச பதிவுகளை டேப் தேயத் தேயக் கேட்டிருக்கேன்.”

“அவர் வாசிப்பு பெரிய வாசிப்பு. நானும் வாசிச்சு அந்த அளவுக்கு வரலைன்னா அவர் பேர் கெட்டுபோயிடும்-னு தவில் கத்துக்கமாட்டேனுட்டேன்.”

“அதனால நாகஸ்வரம் கத்துக்கிட்டீங்களா?”

“ஆமாம். ஆண்டான்கோயில் செல்வரத்தினம் எனக்கு தாத்தா முறை. வயசு வித்தியாசம் அவ்வளவு இல்லைனாலும் முறைப்படி தாத்தா. அவர்கிட்ட கத்துகிட்டேன். கோயில்ல எல்லாம் வாசிச்சுப் பழகுவேன். பதினைஞ்சு வயசிருக்கும் போது கொஞ்டம் உடம்பு சரியில்லாம போச்சு. டாக்டர் பாத்துட்டு இதயம் வலுவில்லாம இருக்கு. நாகஸ்வர பயிற்சி கூடாதுனு சொல்லிட்டாரு.”

“அதுனால வாத்தியம் பண்ண ஆரம்பிச்சீங்களா?”

“இல்லை. அம்மையப்பன், வலங்கைமாந்ல எல்லாம் கொஞ்சம் நிலமிருந்தது. அதைப் பார்த்துகிட்டு இரண்டு வருஷம் விவசாயம் பண்ணினேன்”

“அப்புறம் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?”

“என் தங்கையை மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரனுக்கு கொடுத்திருந்தோம். அவர் தொழில்ல முன்னேறி சென்னைக்கு குடிபோயிட்டாரு. அவர்தான் என்னையும் சென்னைக்கு வரச் சொன்னாரு.”

தஞ்சாவூர் உபேந்திரன் இன்று முன்னணியில் விளங்கும் கலைஞர்களை மட்டுமல்ல, ஓர் அற்புதமான வினைஞரையும் இசையுலகுக்கு இட்டு வந்திருக்கிறார்.

“அவருக்கு அப்போ ராமகிருஷ்ணன்-னு வண்ணாந்துறையில ஒருத்தர் மிருதங்க வேலை செஞ்சுகொடுத்துகிட்டு இருந்தார். அவர் அண்ணனும் பக்கத்துலையே கடை வெச்சு இருந்தார். அவங்க கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சேன். தவில்ல இப்பதான் நட் போல்ட் போட்டு முடுக்கறோம். அப்பல்லாம் வார் பிடிக்கணும். அது அவ்வளவு சுலபமான வேலையில்ல. அப்பாவுக்காக நான் பலமுறை வார்பிடிச்சு கொடுத்து இருக்கேன். அந்த அனுபவத்துனால மிருதங்கத்துக்கு வார்பிடிக்கறது, மூட்டு அடிக்கறது எல்லாம் சுலபமாவே வந்துடுச்சு. கொஞ்ச நாள்ல நானே சொந்தமா கடைவெச்சுட்டேன்.”

“உங்க கடை எங்க இருந்தது?”

“மாதவ பெருமாள் கோயில் பக்கத்துல. அங்க வேதமூர்த்தி-னு ஒரு மெக்கானிக் கடை வெச்சு இருந்தார். அவருக்கு சங்கீதம்னா உயிர். அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர் கடையிலேயே பாதியை எனக்குக் கொடுத்தார். அங்கதான் என் தொழில் தொடங்கிச்சு.”

இசை எப்படி சம்பந்தமில்லாத இருவரை இணைக்கிறது என்று வியந்தபடியே அடுத்த கேள்வுக்குச் சென்றேன்.

”தஞ்சாவூர் உபேந்திரனுக்குதான் முக்கியமா மிருதங்கம் செஞ்சுகொடுக்க ஆரம்பிச்சீங்களா?”

“இல்லையில்லை! அவர் சிஷ்யர் நெய்வேலி நாராயணனுக்குதான் முதல்ல செஞ்சு கொடுத்தேன். அப்புறம் இன்னொரு சிஷ்யர் முருகபூபதிக்கு செஞ்சு கொடுத்தேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமா என் நிறைய பேருக்கு செய்ய ஆரம்பித்தேன். காரைக்குடி மணி, திருவாரூர் பக்தவத்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-னு நிறைய பெரிய வித்வான்களுக்கு செஞ்சு கொடுத்திருக்கேன்.”

”ஹரிசங்கர் அவர்களை எப்படி சந்திச்சீங்க?”

“அவரை உபேந்திரன் அத்தான்தான் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. மேடலின் கச்சேரிக்கு அப்போ இவங்க எல்லாம்தான் செட்டு. அப்பா, அத்தான், ஹரிசங்கர், விநாயக்ராம் சேர்ந்து வாசிப்பாங்க. பல ஊர்கள்ல, கல்யாணங்கள்ல கச்சேரி நடக்கும். அப்படி சந்திச்சுப் பழக்கம். அப்பா மேல ஹரிசங்கருக்கு ரொம்ப மரியாதை. என்கிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பாங்க.”

“கச்சேரிகள் நிறைய கேட்டு இருக்கீங்க. உங்களைக் கவர்ந்த கச்சேரி?”

“நிறைய போவேன். எல்லாம் கேட்பேன். அதுக்கு மேல சொல்ற அளவுக்கு நுணுக்கமெல்லாம் தெரியாது. பாட்டைவிட கலைஞர்களைப் பார்த்து பழகறதுலதான் எனக்கு கவனமிருந்தது.”

”ஹரிசங்கருக்குனு ப்ரத்யேகமா ஏதாவது செய்யச் சொல்லுவாரா?”

“அப்படி ஒண்ணும் இல்லை. அவர் முக்கியமா என்கிட்ட தோலைத்தான் வாங்கிப்பாரு. நான் கட்டையில் ஒட்டிக் கொடுத்த வாத்தியங்களும் அவர் வாங்கிக்கிட்டிருந்தாலும் அவருக்கு அவரே தோலை ஒட்டினாத்தான் பிடிக்கும். ஃபெவிக்காலை வெச்சு ஒட்டறது அவருக்குப் பிடிக்காது. சாதத்தை வெச்சே ஒட்டிப்பாரு. அது அவருக்குத்தான் முடியும்.”

“கஞ்சிராவுக்கு அப்பல்லாம் உடும்புத் தோல் உபயோகிச்சீங்க இல்லையா?”

“ஆமாம். அதுலதான் அந்த நாதம் கிடைக்கும். வேற தோலுல கிடைக்காது. எஙக் ஊர்ல, வேதாரண்யத்துல, ஆடுதுறைல எல்லாம் மாமிசத்துக்காக உடும்பு அடிப்பாங்க. அதனால் தோல் சுலபமா கிடைக்கும்.”

“இப்ப உடும்பு அடிக்கறது தடை பண்ணிட்டாங்களே”

“ஆமாம்.”

“இப்ப என்ன தோலு உபயோகிக்கறீங்க?”

“நான் தொழில் பண்ணின வரைக்கும் உடும்புதோல்தான் உபயோகிச்சேன். இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை”

”ஹரிசங்கரோட அறுபதாவது பிறந்த வருடமிது, அவரைப் பற்றி வேற எதாவது சொல்ல விரும்பறீங்களா?

“அவருக்கும் எனக்கும் முதலாளி தொழிலாளி உறவில்ல. நண்பர்கள் மாறிதான் பழகினோம். அவரும் நானும் அடிக்கடி வெத்தலை கடையில சந்திச்சுப்போம். அவர் அன்பா பழகினதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது.”

“இந்த விருதை மிருதங்கம் செய்வதுல நிபுணரா இருந்த பர்லாந்து அவர்கள் பேருல கொடுக்கறோம். அவரை நீங்க சந்திச்சதுண்டா?”

“ஒரு முறை பார்த்து இருக்கேன். உபேந்திரன் அத்தான் தஞ்சாவூர்ல இருந்தபோது அவர் வீட்டுக்கு வந்து பர்லாந்து வேலை செய்வாரு. அப்ப பார்த்து இருக்கேன். அன்னிக்கு எனக்குத் தெரியாது நானும் இந்தத் தொழிலுக்குத்தான் வருவேன்னு.”

“ஒரு பெரிய இசை பரம்பரைல வந்த நீங்க வாத்தியங்கள் செய்யறதை தொழிலா எடுத்துக்கிட்டீங்க. இப்ப உங்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது நிறைவா இருக்கா?”

“நிச்சயமா நிறைவா இருக்கு. இந்தத் தொழில்தான் என்னை ஒருமனுஷனா ஆக்கி இருக்கு. எந்தக் குறையுமில்லாம நிம்மதியா இருக்க வெச்சிருக்கு. என்  பசங்க – நவநீதம், தனபால் – ரெண்டு பேரும் இன்னிக்கு இந்தத் தொழில்தான் பண்ணிகிட்டு இருக்காங்க”

நான் பர்லாந்து அவர்களைப் பார்த்ததில்லை. அவர் மகன் செல்வத்தைப் பார்த்து கௌரவித்த போது பர்லாந்து அவர்களையே பார்த்த உணர்வு ஏற்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் முருகானந்தம் அவர்களைப் பார்க்கும் போது மேதை வலங்கைமான் சண்முகசுந்தரம் அவர்களையே பார்த்த நிறைவு ஏற்படும் என்று தோன்றியது. அந்த மகிழ்ச்சியில் துளிர்த்த புன்னகையோடு பேட்டியை முடித்துக்கொண்டேன்.

Share the Article
Exit mobile version