Site icon இன்மதி

விவசாயத்துகான நிதி எங்கே?: அரசியல் கட்சிகளிடம் விவசாயிகள் கேட்க வேண்டிய கேள்வி!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே விவசாயிகள் பொருளாதார திரையில் ஏதோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரிவார்கள். கட்சிகளின் கொள்கைகள், நிறம் என பாகுபாடு இல்லாமல் இதே அணுகுமுறை நடந்து வருவதை கடந்த 30 ஆண்டு காலமாக பார்த்து வருகிறேன்.  மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று விவசாய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள சூழ்நிலையில், இதே நிலை தொடர்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் பலவிதமான வாக்குறுதிகளைக் கொடுத்து விவசாயிகளை தங்கள் வசப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

2019இல் நடக்கவுள்ள பொதுதேர்தலை மையமாக வைத்து நாடு முழுவதும் பல்வேறு விவசாய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மிக முக்கியமாக இரண்டு கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஒன்று, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மற்றொன்று, அரசு வாக்குறுதி அளித்தது போல குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதுடன் சுவாமிநாதன். கமிஷன் பரிந்துரைப்படி 50 சதவீத லாபத்தையும் வழங்க வேண்டும். நிலுவையில் இருக்கும் அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்வதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்துவிட்டு, நிஜத்தில் மிக சொற்ப அளவு கடன்களையே ரத்து செய்கின்றன. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் உத்தரபிரதேசம், பஞ்சாப், மகாராஷ்ட்ரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான விவசாயிகளின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. தற்போது மூன்று மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அங்கு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது

இரண்டாவது கோரிக்கையைப் பொருத்தவரையில், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், உண்மையில் உற்பத்திப பொருள்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அது ஒரு சில விவசாயிகளுக்கே பயனளிக்கும் விதத்தில் உள்ளது. சாந்தகுமார் உயர்நிலைக் குழு அறிக்கையின்படி, வெறும் 6 சதவீத விவசாயிகளே கொள்முதல் விலை உயர்வினால் பயனடைகிறார்கள். ஒருவேளை குறைந்தபட்ச ஆதாரவிலையுடன் 50 சதவீதம் லாபமும் வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலும் அது ஏற்கனெவே  உற்பத்திப் பொருட்களை அரசு கொள்முதலுக்கு வழங்கி வரும் விவசாயிகளுக்கு மட்டுமே பயனளிக்கும். மீதமுள்ள  94 சதவீத விவசாயிகளின் நிலை? உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தில் 94 லட்சம் விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றன. அதில் 10.5 லட்சம் குடும்பங்கள் மட்டுமே அரசின் கொள்முதல் விலைக்கு விலை தங்களது பொருட்களை விற்பனை செய்கின்றனர். மீதமுள்ள 83 லட்சம் விவசாயக் குடும்பங்களின் நிலை என்ன?

சுவாமிநாதன் கமிஷன் பரிநதுரைத்த விலை நிர்ணய முறையை அமல்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் அனைத்து விவசாயிகளும்  தங்கள் விளை பொருட்களை சந்தைக்குக் கொண்டுவரும்போது அவை அதிகாரப்பூர்வமாக கொள்முதல் செய்யப்படாவிட்டால்  விலை உயர்வு என்பது அந்த விவசாயிகளுக்குப் பயனளிக்கப்போவதில்லை.   சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போதுமான அளவு கொள்முதல் செய்ய தவறியதும் அதனை தவறான நேரத்தில் செய்ததும் விவசாயிகளிடத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள பிரதமர் ஆஷா திட்டத்தின் கீழ் 25 சதவீத உபரி உற்பத்திப் பொருட்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் மீதமிருக்கும் 75 சதவீத உற்பத்திப் பொருட்களை யார் கொள்முதல் செய்வார்கள்? குறைந்தவிலைக்கு சந்தையில் விற்பதால் ஏற்படும் இழப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள்?

தொழில் நிறுவனங்களும் விவசாயிகளும் ஒரே வங்கியில் கடன் வாங்கும் நிலையில், தொழில் நிறுவங்களின் வாராக் கடன்கள் மட்டும் ஏன் மாநில அரசுகளின் பொறுப்பாகக் கருதப்படவில்லை என்ற கேள்வியை விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் எழுப்ப வேண்டும். தொழில் நிறுவனங்களுக்குச் செய்யப்படுவது போல,  விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏன் அறிவுறுத்துவதில்லை? மாநில அரசுகளுக்கு இந்தச் சுமையை ஏன் கூட்ட வேண்டும்? ஆகையால் இந்த விவாதம் இவ்விரு கோரிக்கைகளையும் தாண்டி விரிவாகச் செல்ல வேண்டும். பொருளாதாரக் கொள்கைகள் வடிவமைப்பு, விவசாய கொள்கைகளை உருவாக்க இடமளிக்கவில்லை என்பதை உணர வேண்டும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிக்கிறார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாநில அரசே விவசாயக் கடன் தள்ளுபடிக்கான நிதி ஆதாரத்தைக் கண்டறிய வேண்டும் என்கிறார். ஆனால், கடந்த ஏப்ரல் 2014லிருந்து ஏபரல் 2018 வரை 3.16 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்போதெல்லாம்  இந்த நிதிச்சுமையை நீங்கள்தான் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளிடம் மத்திய நிதியமைச்சர் கூறவில்லை.

2003ஆம் ஆண்டு நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தில் உள்ள பிரச்சினையே கடன் வாங்கும் அளவை மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதம் என நிர்ணயித்ததே.  பட்ஜெட்டில்  நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அளவை பார்த்தால், விவசாயத்துக்கு மிகவும் குறைவான நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவது கண்கூடாகத் தெரியும். இதுகுறித்து விவரிக்கிறேன். சத்தீஸ்கரில் அம் மாநிலத்தின் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டுப்படி,  அரசு பணியாளர்கள் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி ஆகியவற்றுக்கே 93 சதவீத நிதி சென்றுவிடுகிறது. வெறும் சம்பளமும் ஓய்வூதியமுமே பட்ஜெட்டின் பெரும் தொகையை விழுங்கிவிடுகிறது. மத்திய பிரதேசத்தில் 87 சதவீதம், ராஜஸ்தானில் 116 சதவீதம் அரசு பணியாளர்கள் சம்பளத்துக்காகப் போய் விடுகிறது. இப்படி பெரும் தொகை அரசு ஊழியர்கள் சம்பளத்துக்காக ஒதுக்கப்படும் நிலையில் விவசாயிகளையும் சேர்த்து ஒட்டுமொத்த  மக்களுக்காக என்ன தொகை மிஞ்சி இருக்கும்? மத்திய அரசு நிதி அளிக்காவிட்டால், இம்மூன்று மாநிலங்களுமே அம்மாநிலத்தின் மக்கள் தொகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள அரசு ஊழியர்களையும்  ஓய்வூதியதாரர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்க முடிந்திருக்காது. உதாரணமாக, மத்தியப்பிரதேசத்தில் 8.1 கோடி மக்கள் உள்ள நிலையில் வெறும் 7.5 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அதில் 4.50 பேர் நிரந்தரப் பணியாளர்கள்.

இந்த நிலையில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கும் உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கும் எங்கே மிச்சமிருக்கிறது நிதி? நிதி மேலாண்மை சூட்சுமங்களை விவசாய இயக்கங்கள் புரிந்துகொள்ளாதவரை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து பொய் வாக்குறுதிகளைத்தான் கொடுத்துக்கொண்டிருக்கும். இதற்கான நிதிக்கு என்ன செய்வீர்கள், அதற்கான வருவாய் ஆதாரங்கள் என்ன என்ற கேள்விகளை அரசியல் கட்சிகளிடம் எழுப்ப வேண்டும். இதன் தொடக்கமாக, 2003ஆம் ஆண்டு நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம், மாநில விவசாயிகள் வருவாய் கமிஷனை உருவாக்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்தது மாத வருமானமாக ரூ.18,000 கிடைப்பதற்கு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இக்கட்டுரையை ஆங்கில வடிவில் வாசிக்க கிளிக் செய்யவும்

Share the Article
Exit mobile version