Site icon இன்மதி

விஞ்ஞானிகளாகும் இயற்கை விவசாயிகள்: ஈரோடு விவசாயியின் வேளாண் கருவி கண்டுபிடிப்பு!

Read in : English

அன்புள்ள விவசாயிகளே! விவசாயம் என்பது உணவை உற்பத்தி செய்யும் கலை; ஒரு முழு நேரத் தொழில் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் அனைத்து விவசாயிகளும் விவசாயிகள் மட்டுமல்ல. நம் நாட்டின் பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் விஞ்ஞானிகளாகவும் கண்டுபிடிப்பாளர்களாகவும் மாறி அவர்களுடைய கிராமங்களிலும் வயல்களிலும் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஈரோடு மாவட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஜி.ஆர்.சக்திவேல்.

மிகவும் எளிதாகக் கையாளக்கூடிய, திறன்மிகுந்த ஒரு வடிகட்டும் கருவியைக் கண்டுபிடித்து அதன் மூலம் கால்நடைக் கழிவுகளை வடிகட்டி, அதனை கரும்புக்கு உரமாகப் பயன்படுத்தி வருகிறார் அவர். இந்தக் கருவியில் நான்கு தனித்தனி அறைகள் உள்ளன. அதில் படிப்படியாகக் கால்நடைக் கழிவுகளை வடிகட்டி, வடிகட்டியவற்றை சேகரித்து அவற்றை இறுதியாக சொட்டுநீர் பாசனத்தின் மூலம் நிலத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் இந்தக்  கருவியை வடிவமைத்துள்ளார்.

“தொடர்ந்து அதிக அளவிலான வேதி உரங்களைப் பயன்படுத்தியதால் நிலம் அதன் வளத்தை இழந்து வருகிறது. அதனை மேம்படுத்தவே இதனை உருவாக்கினேன். வேதி உரங்கள் மண்னின் வளத்தை மட்டும் பாதிக்கவில்லை; உற்பத்தியையும் குறைத்துவிட்டது.   மண்ணின் வளத்தை அதிகரிக்க வேதி உரங்களுக்குப் பதிலாக கால்நடைக் கழிவுகளை பயன்படுத்த முடியுமா என்பதைச் செய்து பார்க்கவே இந்தக் கருவியை உருவாக்கினேன்’’ என்று  இயற்கை வேளாண்மையில் நம்பிக்கைகொண்ட சக்திவேல்  பெருமையுடன். கூறுகிறார்.

’’அதுமட்டுமில்லாமல், வேலைக்கு ஆள் கிடைப்பது குறைந்து வருவதால் உருவாகும் சிரமத்தைப் போக்கவும் இந்தக் கருவி உதவியாக இருக்கும். இதைப் பயன்படுத்தியதன் மூலம் கரும்பு உற்பத்தி அதிகரித்து வருவதே இந்தக் கண்டுபிடிப்பின் வெற்றிக்குச் சான்று. முதல் சாகுபடியின்போது  60 டன் கரும்பு கிடைத்தது; இரண்டாம் சாகுபடியின்போது 63 டன் கரும்பு கிடைத்தது. இப்போது மூன்றாம் சாகுபடியின்போது அதைவிட அதிக உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கிறேன்’’ என்கிறார் அவர் நம்பிக்கையுடன்.

இவரது கண்டுபிடிப்பைப் பார்த்த உந்துதலால், மதுரை, தர்மபுரி மற்றும்  திண்டுக்கல் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இவரை சந்தித்து இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்று அதன் மூலம் தங்களது பகுதியில் இயற்கை விவசாயத்தை பரவலாக்கி வருகின்றனர்.  “அவர்களது பாராட்டுகளைத்தான் எனது முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள விருதாகக் கருதுகிறேன். இயற்கை விவசாயத்தை   பல விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தக் கருவியை உருவாக்கினேன். வேளாண்மையை சிறந்த தொழிலாக மாற்றுவதற்கான வழி. இயற்கை வேளண்மை மட்டுமே அதன் மூலமே இன்று அழிந்துவரும் விவசாயத்தைக் காப்பாற்ற முடியும்’’ என்கிறார் .சக்திவேல்.

கோபிசெட்டிபாளையம் மைராடா கிருஷி விஞ்ஞான் கேந்திராவில்  முனைவர் பி.அழகேசன் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் . சக்திவேல் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று வரும் விவசாயி.

சக்திவேலை தொடர்புகொள்ள: 94863 16041

Share the Article

Read in : English

Exit mobile version