Site icon இன்மதி

ஆசிரியர் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் கருவி: புதிய நடைமுறை கல்வித்தரத்தை உயர்த்த உதவுமா?

Read in : English

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7,728 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக மலைப் பகுதிகள் போன்ற தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வருகைப் பதிவு செய்து விட்டு பள்ளிகளுக்கு வராமல் ஏமாற்றும் ஆசிரியர்களைத் தடுப்பதற்கு இந்தப் புதிய முறை உதவும் என்கிறார்கள் சில ஆசிரியர்கள்.

“இந்த பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையினால் ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வருகிறார்களா என்பதை வேண்டுமானால் உறுதி செய்யலாம். ஆனால் பள்ளிக்கு சரியான நேரத்தில் வந்தாலும் ஆசிரியர்கள் வகுப்பறையில் சரிவர கற்பிக்கிறார்களா என்பதை இதன் மூலம் உறுதி செய்து விட முடியாது” என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து அனுபவம் பெற்ற கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

“பள்ளியில் தலைமை ஆசிரியர் முக்கியமானவர். பள்ளியை சரிவர நிர்வகிப்பதில் முக்கியப் பங்கு அவருக்கு இருக்கிறது. தங்களது தனித் திறமையாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் பள்ளிகளின் அடையாளமாகத் திகழ்ந்தவர்கள் அவர்கள். அந்தத் தலைமை ஆசிரியர்கள், தற்போது அரசாங்கம் சொல்லி விட்டுப் போகிறதை செய்கிறவர்களாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் எந்த அளவுக்குக் கற்றல் திறனைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிய முன்பு நடந்ததைப் போல முறையான இன்ஸ்பெக்ஷன் நடைபெற வேண்டியது அவசியம். அதன் மூலம் பள்ளிகளில் மாணவர்கள் எந்த அளவுக்குக் கல்வித் திறன் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க முடியும்” என்கிறார் அவர்.

“எப்போதும் பொறுப்பான ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்து விடுவார்கள். அவர்கள் பள்ளி நேரம் முடிந்ததும்கூட, மாணவர்களுக்காகப் பாடம் நடத்துவார்கள். அந்த ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மேலும், இதுபோல ஒரு விதிமுறையைக் கொண்டு வருவதன் மூலம்  ஆசிரியர்களைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு அதிகாரத்தை அதிகாரிகளிடம் கொண்டு சேர்ப்பதாகவே இது அமையும். ஆசிரியர்களை நேரத்துக்கு வந்தால் மட்டுமே மாணவர்களின் கல்வித்திறன் உயர்ந்து விடாது. அக்கறையுள்ள ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க முடியும். நேர்மையான ஆசிரியர் நியமனங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது”  என்கிறார் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

“மலைப் பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் பல இடங்களில் ஆசிரியர்கள் வராமல் ஏமாற்றுவது நடந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வருகிறார்களா என்பதை உறுதிப்படுத்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை உதவும். அதேசமயம் வருகைப் பதிவுக்குப் பிறகு, அந்த ஆசிரியர்கள் சரிவர பாடம் நடத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் நடைமுறைகள் தேவை. இல்லாவிட்டால், இந்த முறையையும் சில ஆசிரியர்கள் ஏமாற்றிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன“  என்கிறார் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையில் பணிபுரியும் ஆசிரியர் மகாலட்சுமி.

“வகுப்புகளுக்கு சரியான நேரத்துக்கு வருவதால் மட்டுமே வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் சரிவர பாடம் நடத்துவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பள்ளிக்கு வந்து விட்டு கற்பித்ததில் அக்கறையில்லாத சில ஆசிரியர்களைப் பார்க்க முடியும். பல அரசுப் பள்ளிகளில் போதிய அலுவலர்கள் இல்லாத நிலையில் அந்தப் பணிகளை ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் வகுப்புகளை எடுப்பது பாதிக்கப்படுகிறது. பள்ளிகளில் தலைமை ஆசிரியர் சரியாக இருந்தால்தான் பள்ளிகள் சரிவர நடக்கும்.  தொடக்க நிலை வகுப்புகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியரும் அடுத்த நிலைகளில் பாடத்துக்கு ஒரு ஆசிரியரும் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும்” என்கிறார் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி.

பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் போதிய ஆசிரியர்களும் இல்லாத சூழ்நிலையில், இதுபோன்ற புதிய தொழில்நுட்ப வசதிகளைச் செய்வதற்கு அரசு பணத்தைச் செலவிட வேண்டுமா என்று கேள்வி கேட்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து விட இது உதவியாக இருக்கும் என்றாலும்கூட, மாணவர்களுக்கு தரமாகப் படிப்புச் சொல்லித் தருவதைக் கண்காணிக்க பயோ மெட்ரிக் கருவியால் முடியாது என்பது அவர்களது கருத்து.

Share the Article

Read in : English

Exit mobile version