Site icon இன்மதி

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பால் உற்பத்தி விவசாயிகள்!

[Yann Forget / Wikimedia Commons]

தண்ணீரின் விலையை விட பாலின் விலை குறைவு என்கிற செய்தி கவலை அளிக்கிறது. ஒரு லிட்டர் பசும் பாலுக்கு மகாராஷ்ட்ராவிலும் வட இந்தியாவிலும் பால் பண்ணை விவசாயிகளுக்கு பசும் பால் ஒரு லிட்டருக்கு 17லிருந்து19 ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.20க்கு விற்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பால் பண்ணைகள் தொடர்ந்து தாக்குப்பிடிப்பதற்கு போராடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளாக பாலுக்கு குறைந்த விலை கிடைப்பதால் பால் பண்ணை விவசாயிகள் சிக்கலில் இருக்கும் நிலையில், எதிர்காலத்தில் பாலின் விலை இன்னும் சரியும் என்கிற செய்தி மேலும்  கவலையளிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்காவில், கடந்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 17 ஆயிரம் சிறிய பால் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் பிரிட்டனில்  ஆயிரம் பால் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பாலின் விலை இறங்குமுகமாகவே உள்ளது. அதனால் மிகப் பெரிய நிறுவனமான,  ‘முர்ரெ கோல்பர்ன்’ கனடாவின் சபுடோ நிறுவனத்துக்கு விறபனை செய்யபபட உள்ளது. பால் பண்ணைத் தொழில் வெற்றிகரமாக நடந்து வருவதாகக் கூறப்பட்ட நியூசிலாந்திலும் பால் பண்ணை விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள்.

சிறு பால் பண்ணைகள் வீழ்ச்சியடைந்து வரும் சூழ்நிலையில்,  மிகப் பெரிய நிறுவனங்கள் சந்தையில் நுழையத் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் பெரிய பால் பண்ணை நிறுவனங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன.  இதைத்தான் முன்னாள் அமெரிக்க விவசாயத் துறை செயலர் எர்ல் பட்ஸ், `பெற்றால் பெரிது அல்லது வெளியேறு’ என்று சொன்னார். இந்தப் போக்கு இப்போது உலகம் முழுதும் பரவி வருகிறது. இதனால் சிறு விவசாயிகள் இந்தத் தொழிலைவிட்டு துரத்தப்படும் சூழ்நிலையில், பெரும் நிறுவங்களுக்கு உதவும் வகையில் அரசின் கொள்கைகள் தீட்டப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள வால் மார்ட் நிறுவனம், பால் தொழில் நிறுவனத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. வால்மார்ட் தனது கரங்களை அமெரிக்கா முழுவதும் விரிவுபடுத்தினால் சிறு விவசாயிகள் பலர் இந்தத் தொழிலிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்தியாவில், பிரெஞ்ச் நிறுவனமான ’டானொன்’ சிறிது சிறிதாக உள்ளே நுழைந்து வருகிறது. பிரமாண்டமான பால் பண்ணைகளை அமைக்க அரசு ஒப்புதல் கொடுத்தால் பகாசுர நிறுவனங்கள் சந்தையில் நுழைவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

உலகம் தளும்பும் அளவுக்கு பால் உற்பத்தி அதிகமாக உள்ளது. உலகம் முழுதும் உள்ள பால் உற்பத்தியாளர்கள், அதீத பால் உற்பத்தியால் விலை வீழ்ச்சி என்ற மோசமான சுழலில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் பால் உற்பத்தி உயர்ந்து கொண்டிருந்தபோது, விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த விலை 20லிருந்து 30 சதவீதம் குறைந்தது. 2016-17இல் 165.4 மில்லியன் டன் பாலை உற்பத்தி செய்த இந்தியா, உலகின் பெரிய பால் உற்பத்தி நாடு. ஐரோப்பியாவிலும் இதே சிக்கல். அதிக அளவு பால் உற்பத்தி செய்யப்பட்டதால், விலையில் சரிவு ஏற்பட்டு லாபம் குறைந்ததால், அங்கு பாலுக்கு வழங்கப்பட்ட சலுகை 2015ஆம் ஆண்டு விலக்கப்பட்டது.  சர்வதேச அளவில் பால் பவுடர் விலை குறைந்து வருவதே இந்த நிலைமைக்குச் சான்று. 2013இல் சர்வதேச அளவில் பால் பவுடரின் விலை ஒரு டன்னுக்கு 5,000 டாலரிலிருந்து-5,200 டாலர் வரை இருந்தது. தற்போது, ஒரு டன் பால் பவுடர் 2,000 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே காலலகட்டத்தில் பால் பவுடர் உற்பத்தி அதிகரித்து வந்த இந்தியாவில், தற்போது எப்போதுமில்லாத அளவுக்கு தேக்க நிலை நிலவுகிறது. 2014இல் ஒரு கிலோ பால் பவுடரின் விலை 240 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை இருந்தது. தற்போது இதன் விலை 136 ரூபாய்தான்.

தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு பால் பவுடர் உற்பத்தி தேக்க நிலை அடைந்தததால், பல நிறுவனங்கள் பால் கொள்முதலைக் குறைத்துக் கொண்டன. மகாராஷ்ட்ராவில் பல பால் நிறுவனங்கள்,  பாலை வாங்குவதில்லை என்று அறிவித்துள்ளன. குஜராத் பால் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு, ஒரு நாளுக்கு இருமுறை பால வாங்குவதை நிறுத்தி விட்டு, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வாங்க முடிவு செய்துள்ளது. 2 லட்சம் டன் பால் பவுடர் தேங்கிக் கிடப்பதாக அங்குள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சாபிலும் நிலைமை சரியில்லை. அங்கும் பால் நிறுவனங்களில் பால் பவுடர் தேங்கியிருப்பதால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது.

“முன்பு 15 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பெற்ற நான் இப்போது 9 ஆயிரம் ரூபாய் நஷ்டம் அடைகிறேன்’’ என்று மகாராஷ்டிர மாநிலம் சங்லியில் உள்ள மஹுலி கிராமத்தைச் சேர்ந்த பாபாசாகேப் மானே என்பவர் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் செய்தி வெளியாகியுள்ளது. நான்கு மாடுகளை வைத்துக் கொண்டு கடந்த ஆண்டில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் பெற்று கவலையில்லாமல் இருந்த தம்பதி இன்று பண்ணைக் கூலிகளாக வேலைக்குச் சென்று வருகிறார்கள்.  வட இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல லட்சம் பால் பண்ணை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 70 சதவீதம் பால் பண்ணைத் தொழில் பெண்களின் கைகளில் இருந்தது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதரமாக இருந்த இத்தொழில் இப்போது நசிந்து வருகிறது.

அமெரிக்காவிலும் இதே நிலைதான். அங்கு பயணம் செய்யும்போது பல இடங்களில் பால் பண்ணை விற்பனைக்கு என்ற  அறிவிப்பு பலகையை பார்த்தேன். வேறு தொழில் மூலம் வருமானம் இருந்தால்தான், அங்கு சிறிய பால் பண்ணை விவசாயிகள் தாக்குப்பிடிக்க முடியும். விவசாயம் அல்லாத இன்னொரு தொழிலை வைத்திருப்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். அப்படி இல்லாதவர்கள் கடனில் சிக்கித் தவிக்கிறார்கள்.

இதிலிருந்து மீள வழி என்ன?குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் முன்னாள் இயக்குநர்  பி.எம். வியாஸ் கூறிய வழிதான். பால் தொழிலில் போட்டி போட்டு விலையைக் குறைப்பதை விட உற்பத்தி செய்யப்படும் பால் பவுடரை நமது அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான், சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு ‘பரிசாக’ வழங்கி அங்கு, இந்தியாவில் நடந்ததைப் போல வெண்மைப் புரட்சியை அங்கும் உருவாக்க உதவலாம். இந்தியா கூட ஐரோப்பாவிடமிருந்து வெண்ணெயை பரிசாகப் பெற்று தான் இங்கு வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தியது என்பதை மறக்க வேண்டாம்.

அதேவேளையில், சிக்கலில் தவிக்கும் பால் பண்ணை விவசாயிகள் அதிலிருந்து மீள்வதற்கு தேவையான பொருளாதார உதவியை இந்தியஅரசு செய்ய வேண்டும். ஜெர்மனியில் சிறிய பால் பண்ணை விவசாயிகளை மீட்பதற்காக 100 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டதைப் போல  இந்தியாவும் குறைந்தது 50 ஆயிரம்  கோடி ரூபாயை வழங்க வேண்டும். சர்க்கரைக்கு விலை நிர்ணயித்திருப்பது  போல பால் உற்பத்தியாளர்களுக்கும் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். கரும்பு உற்பத்தியாளர்களுக்கு அரசு நியாய விலை வழங்குவதைப் போல, பால் உற்பத்தியாளர்களுக்கும் நியாய விலை கிடைக்கச் செய்ய வேண்டும்.

இக்கட்டுரையை ஆங்கில வடிவில் வாசிக்க கிளிக் செய்யவும்

 

 

 

Share the Article
Exit mobile version