Site icon இன்மதி

இடைத்தேர்தல்களில் சோதனைக்குள்ளாகும் ஸ்டாலின் தலைமை: திமுக வரும் ஜூனில் ஆட்சியமைக்குமா?

Stalin the new face of DMK

Read in : English

மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடமிருந்து அரசியல் வாரிசுரிமையை மற்ற அனைவரும் நினத்ததை விட மிக எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், அவருடைய தலைமை, இன்னும் சில மாதங்களில்   20-24 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்கள் மூலம் சோதனைக்குள்ளாகிறது. அதிமுகவில் 2017- ன் ஆரம்பத்தில்  கோஷ்டி சண்டை உச்சக்க்கட்டத்தில் இருந்தபோது ஆட்சியை பறிக்கும் வாய்ப்பை ஸ்டாலின் இழந்துவிட்டபோதில், வரும் 2019-ல் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு ஸ்டாலின் திமுகவை வெற்றியடைய செய்வாரா என்பதுதான் திமுக தொண்டர்களின் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார்கள். என்னவெனில், ஸ்டாலின் 2014 பாரளுமன்ற தேர்தலில் மறைமுகமாக பொறுப்பாளராக  இருந்தபோதிலும் அவர் அப்போதிலிருந்து ஒரு வலிமையான வெற்றியை இன்னும் பெற்றுத் தரவில்லை என குறிப்பிடுகிறார்கள். அத்தேர்லில், காங்கிரஸை கூட்டணியில்  சேர்க்கவேண்டாம் என்ற முடிவுக்குப் பின்னால் ஸ்டாலின் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த முடிவுக்கு திமுக கூட்டணி அதிக விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டது.காரணம் காங்கிரஸுடன் சேர்ந்து சில இடங்களிலாவது வெற்றிப் பெற்றிருக்க வேண்டிய திமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

1989-லிருந்து  ஆளும் கட்சி அடுத்த தேர்தலில் ஆட்சியை இழப்பது ஒரு தொடர்கதையாக இருந்த நிலையில் 2016 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு இருந்தபோதும் அதை இழந்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக 2016 தேர்தலில் போராடி ஆட்சியைத் தக்கவைத்து 27 ஆண்டுகளாக இருந்த போக்கை மாற்றியது.  காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, திமுக மட்டுமே 89 இடங்களில் வெற்றி பெற்றது; கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றன. ஆனாலும் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை இழந்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணி என பிரிந்திருந்தது போதும் சரி, தற்போது தினகரன் அணியால் கட்சி மீண்டும் பிளவிட்டபோதும், ஸ்டாலினால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.   இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன், கருணாநிதி இந்த சூழ்நிலையை வேறுவிதமாக கையாண்டிருப்பார் என கூறினார். இதன்மூலம் ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க சரியான வழியை தேர்ந்தெடுக்கவில்லை என்று மறைமுகமாகக் கூறியுள்ளார்.  அடுத்து, ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஸ்டாலினுக்கு மிகப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.காரணம், தினகரன், மதுசூதனுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தான் திமுக வந்தது. அதிமுக பிளவுபட்டிருந்த நிலையிலும் திமுக டெபாஸிட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என திமுக மறைமுகமாக தினகரன் வெற்றிக்கு  உதவுவதற்காக  வேண்டுமென்றே சரியாக தேர்தல் வேலைகளைப் பார்க்கவில்லை என திமுக, திமுக மீது குற்றச்சாட்டை வைத்தது.  இதை திமுக மறுத்தபோதும் இதற்கு  சில திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தது.

இன்னும் சில மாதங்களில் 20 தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் திமுக புத்துணர்ச்சியுடன் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுகதான் தமிழகத்தின் ’நம்பர் ஒன்’கட்சி என்று நிரூபிக்க்கும் வாய்ப்பு திமுகவுக்கு கிடைத்துள்ளது. தினகரனையும் சேர்த்துக்கொண்டால் இப்போது எதிர்க்கட்சிகளின் பலம் 98ஆக உள்ளது. பதினெட்டு பேரையும் தகுதி நீக்கம் செய்ததால் சட்டசபையில் இப்போது உறுப்பினர்களின் எண்னிக்கை 214ஆகக் குறைந்துள்ளது. இப்போது கணக்கீடுகள் அதிமுகவுக்கு சாதகமாக 109 வாக்குகளுடன் இருந்தாலும் எதிர்த்தரப்பு பலம் 104 ஆக உள்ளது (தினகரனை ஆதரிக்கும் 6 அதிமுக உறுப்பினர்களைச் சேர்த்து).

திமுக 20 தொகுதிகளில், 13 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டால், திமுக கூட்டணி 110 இடங்களைப் பெற்று சட்டசபையில் அதிமுகவைத் தோற்கடிக்க முடியும் (தினகரன் ஆதரவு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு எதிராக வாக்களிக்க அனுமதித்தால்)

ஒருவேளை இடைத்தேர்தல்களில் அதிமுக மிகப் பெரிய தோல்வியை தழுவினால்,  அதிமுகவிலிருந்து பலர் வெளியேறி தினகரன் அணியில் சேர்ந்து அக்கட்சி ஆட்சியிலிருந்து இறங்குவதை விரைவுப்படுத்தலாம்.  இது 2019 பாரளுமன்ற பொதுத்தேர்தலையும் சார்ந்துள்ளது. பலவீனமடைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லது பல்வேறு மாநிலக் கட்சிகள் இணைந்து 1996ல் காங்கிரஸை ஆதரவை பெற்ற கூட்டணி அரசு அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு   அமைந்தால் அதிமுக அரசுக்கு கடுமையான அழுத்தம் உண்டாகும். மத்தியில் பாஜக அல்லாத ஒரு அரசு அமைந்தால், ஈபிஎஸ்  ஆளுநர் உதவியுடனும், மத்திய அரசின்  உதவியோடும் ஆட்சியில் நீடிக்கலாம் என்ற நிலை மாறி, ஆட்சியை இழக்க நேரிடும்.

ஒருவேளை அதிமுக இடைத்தேர்தல்களில் வெற்றிமுகமாக இருந்தால், அதாவது 20 இடங்களில் 10 இடங்களையாவது கைப்பற்றினால் சட்டசபையின் முழு அளவில் பாதிக்கு மேல் பெற்று,  தினகரன்  தன் பக்கம் ஆட்களை இழுக்காமல் இருந்தால், இன்னும் 2 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும்.

இன்னொருபுறம் திமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக உறுப்பினர்களைப் பெற்றால், தேர்தலுக்கு பிறகு காட்சிகள் மாறலாம். அடுத்த 2019 ஜூன் வரை ஆதிமுக ஆட்சியில் இருந்தால், திமுகவின் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் அதிமுகவை ஆட்சியை விட்டு இறக்கும் வேலையை செவ்வனே செய்வர்.

அடுத்த சில மாதங்கள் ஸ்டாலினுக்கு சோதனையான காலகட்டம். அவருக்கு முன்பாக நிற்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்சரியாக பயன்படுத்தி அவர் விரைவாக ஆட்சி அமைப்பாரா  என்பதை அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். ஏதேனும் தோல்வி  ஏற்பட்டால், ஸ்டாலினின்   எதிரிகள், குறிப்பாக  அவரது அண்ணன் மு.க.அழகிரி,  ஸ்டாலினால் வெற்றியத் தரமுடியாது என்று  அனைத்து தரப்பிலும்  எதிரொலிக்க செய்வார்கள்.

Share the Article

Read in : English

Exit mobile version