Site icon இன்மதி

அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்

ரஜினி மற்றும் ஸ்டாலினுடன் கருணாநிதி

Read in : English

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரஜினிக்கு அவர் எதிர்பார்த்ததை விட  சீக்கிரமே அச்சமிகு தருணம் வாய்த்துவிட்டது. தமிழகத்தின்  பிரதான அரசியல் கட்சிகள் தன்னை எதிரியாக கருதி தனிப்பட்ட முறையில் தாக்குவார்கள் என்ற அச்சத்தினால் தான் நேரடி அரசியலில் இறங்குவதை கடந்த காலங்களில் தவிர்த்தார். அவருடைய பயம் இப்போது உண்மையாகி இருக்கிறது. அரசியலில் முதல் அடி  வைக்கும்போதே தன் மீது தாக்குதல்கள் தொண்டங்கிவிட்டதே என்று ரஜினி  வேதனை அடைந்துள்ளாராம். அதுவும் தன்னை மிக பெரிய உயரத்தில் அமர்த்தி அழகு பார்த்த திமுக கட்சிடமிருந்து இவ்வளவு சீக்கிரமாக தன்மீது கடுமையான விமர்சனம் வரும் என்று அவர் நினைக்கவில்லை. ஆனால் அது தான் நேர்ந்தது. 

அரசியலில்  முதல் கசப்பான மருந்தை முரசொலியும், திமுகவும் அவருக்கு வழங்கிவிட்டன.

முரசொலி  பத்திரிகையில், அவர் சமூக விரோத சக்திகளின்  கைகளில் கைப்பாவையாக இருப்பதாக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரைக் கண்ட ரஜினி மிகவும் வருந்தினார்; கவலையடைந்தார் என அவருக்கு மிக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

ரஜினி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடமும் அவரது மகன் மு.க.ஸ்டாலிடனும் நல்ல உறவைக் கொண்டிருந்தார் கருணாநிதி பல முக்கிய  விழாக்களில் ரஜினிக்கு அழைப்பு விடுத்து, அவருக்கு உரிய மரியாதை அளிக்கும் விதமாக விழாவில் தனக்கு அடுத்து நாற்காலியில்  உட்கார வைத்தார்.   கருணாநிதி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ரஜினியை மனமார புகழ்ந்துள்ளார்.    அவருடைய  திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு  முதல் வாரத்தில் அதிக காட்சிகள், அதிக கட்டணத்துடன்   திரையிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம், தியேட்டர்களில் ஒரே வாரத்தில்  அதிக வருமானம்  வசூலாகியுள்ளது. ரஜினியும் பொதுவெளிக்கு வரும்போது  கருணாநிதியுடன் உள்ள நெருக்கத்தால்  பாதுகாப்பை பெற்றுள்ளார். ஆனால், கடந்த 20 வருடங்களில் முதன்முறையாக திமுகவால் விமர்ச்சிக்கப்பட்டுள்ளார்.

இந்த தருணத்தில் தான் ரஜினி அச்சமடைகிறார். குறிப்பாக, தமிழகத்தில்  அறிவிக்கப்படாத கூட்டாளியான திமுகவிடமிருந்து  விமர்சனம் வருவதை அவர் விரும்பவில்லை.

கடைசி 10 ஆண்டுகளில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை விமர்சனம் செய்ய தயங்கிய ரஜினி, அவ்விரு தலைவர்களையும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புகழ்ந்து பேசினார். அவர்கள் இருக்கும்வரை அரசியலில் வருவதை தவிர்த்தார். அரசியலுக்கு வந்தால் அவர்களை விமர்சனம் செய்யவேண்டி வரும் என்று அவருக்கு நன்றாக தெரியும். எனவே, அவர்கள் மறைவிற்கு பிறகுதான் அரசியலில் நுழைய முடிவெடுத்தார்.    ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இரு தலைவர்கள் மறைந்ததும்   அரசியலில் நுழைய இதுவே சரியான நேரம் என கருதினார். காரணம், அவ்விரு தலைவர்களை விமர்சனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் எழாது என்று நம்பினார்.

அரசியலில் நுழைந்த கணமே அதில் எதிரிகளை சம்பாதித்துவிட முடியும் என ரஜினிக்கு நன்கு தெரியும். இருந்தாலும், முதல் விமர்சனம், முரசொலியின் விமர்சனத்தையே அவரால் தாங்கி கொள்ளமுடியவில்லை. முரசொலியில் வெளியான கட்டுரை ரஜினியை  மென்மையாக  விமர்சிக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முரசொலி பத்திரிகையின் பொறுப்புகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியை பற்றி விமர்ச்சித்து வெளியான கட்டுரை, அடிமட்டத்தில் உள்ளவர்கலின் கவனக்குறைவால் வெளிவந்திருக்காது. அது அங்கு உயர்மட்டத்தில் இருப்பவர்களின் பார்வைக்கும் சென்றுதான்  வெளிவந்திருக்கும்.  அதனால்தான் ரஜினி தான் காயப்பட்டதாக உணர்ந்து கவலையடைந்துள்ளார். இந்தக் கவலைக்குக் காரணம், இது சினிமா உலகிலும் வெளி உலகிலும் இதுவரை தன்னை ஆதரவளித்தவர்களிடமிருந்து வெளியான விமர்சனம் என்பதுதான்.

இதைத்தான் இத்தனை காலமாக ரஜினி தவிர்த்து வந்தார்.  இருந்தபோதும், முதல் அடியே திமுகவிடமிருந்து கிடைத்ததுதான் அவரை அதிக வருத்தத்துக்குள்ளாக்கியுள்ளது.   திமுக, ரஜினிக்கு மென்மையான முறையில் கூறியுள்ள விஷயம் என்னவெனில் ரஜினி தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தால் திமுக வேடிக்கை பார்க்காது. தேவைப்படும் சமயங்களில் அதன் கோரைப்பற்களைக் காட்டும் என்பதுதான். திமுக (மற்ற கட்சிகளைப் போலவே) நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவதைப் பார்த்து கவலையடைந்துள்ளது. அதனால் தனது வாக்காளர்களையும் தன் கட்சியின் சில  தொண்டர்களைக் கூட இழக்க வேண்டிவரும் என அஞ்சுகிறது. அதேபோல், பல்முனைப் போட்டியால் ஒட்டுகள்  சிதறும் எனவும் அஞ்சிக் கவலையடைகிறது.

அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராக விழும் வாக்குகளைப் பிரிக்கவே இம்மாதிரியான நடிகர்களை ‘சக்திவாய்ந்த கட்சிகள்’ களத்தில் இறக்கிவிடுவதாக திமுக சந்தேகம் கொள்கிறது.  ரஜினியின் கட்சியில், பதவியைப் பெற வேண்டும் என்று விரும்பிய சில ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்கள்  நீக்கப்பட்டனர்.  விஜயகாந்த்தின் தேமுதிகவில் 2016 ல் இவ்வாறு குழப்பம் நிகழந்தது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது தேமுதிக கட்சியில் ஓரம்கட்டப்பட்டவர்களை தன் பக்கம் இழுத்து அந்த கட்சியை திமுக பலவீனமாக்கியது.

ரஜினி சில மதவாத சக்திகளின் கைப்பாவையாக  இருப்பதாக முரசொலியில் வெளியான விமர்சனம்,    அவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் குருமூர்த்தியின் ஆலோசனையின்படி செயல்படுகிறார் என்ற பார்வையில் எழுதப்பட்டிருக்கலாம்.

 திமுகவின்  முதல் தாக்குதலை ரஜினியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் அவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியின்மூலம்  தன் வருத்தத்தையும் கவலையையும் பகிர்ந்துள்ளார். எதிர்பார்த்தபடி, அதற்கு உடனே மு.க.ஸ்டாலின், அக்கட்டுரைக்கு முரசொலியில் வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட வைத்தார். மேலும், முரசொலி ஆசிரியர் குழுக்கு ரஜினிக்கு எதிராக இவ்வாறு இனி எழுத வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலமாக, ரஜினி தன் மீது திமுக இவ்வாறான தனிப்பட்ட  விமர்சனங்களை வைக்காது என்கிற உறுதிமொழியை ஸ்டாலிடமிருந்து பெற்றுள்ளார். இது ரஜினிக்கு தற்காலிகமாக அமைதியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் தேர்தல் நேரத்தில் அவர்  கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதையும் திமுக அவருக்கு உணர்த்தியுள்ளது.

Share the Article

Read in : English

Exit mobile version