Site icon இன்மதி

வளரும் கமல்… தேயும் ரஜினி…. கூட்டணி வைத்துக்கொள்வதா? வேண்டாமா?குழப்பத்தில் மக்கள் நீதி மய்யம்!

கமல்ஹாசன்

Read in : English

ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடகத்தின் புகழ்பெற்ற வசனம், வாழ்வது நல்லதா அல்லது சாவா என்கிற கேள்வி. கமல் முன்னாடி நிற்கும் கேள்வி, கூட்டணி அமைத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பதுதான். அவருடைய மக்கள் நீதி மையம் வரவிருக்கிற 20 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட தயாராகிக்கொண்டுள்ளது. இந்தியா டுடே நடத்திய சர்வேயில் ன்மக்கள் நீதி மையத்துக்கு கடந்த ஜனவரியில் இருந்த மக்கள் ஆதரவை விட இப்போது அவ்வாதரவு இரு மடங்கு அதிகரித்துள்ளது. ரஜினிக்கு கிடைத்திருக்கும் ஆதரவை விட அதிகமான ஆதரவை கமல் பெற்றுள்ளார்.

மக்கள் நீதி மய்யம், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகி வந்தது. ஆனால், அத்தேர்தல்  எந்த கால வரையுமின்றி தள்ளிப்போய்க்கொண்டு இருப்பதால் தன் அரசியல் பலத்தை சோதனை செய்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. தன் பலம் மற்றும் பலவீனத்தை எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக  அறிந்துகொள்ள  சட்டமன்ற இடைத்தேர்தல்கள் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் ஜனவரி 2019-ல் நடைபெறுவதாக இருந்த திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் போட்டியிட தயங்கியது. தற்போது. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தால்,  உருவான இத்தேர்தல்களில் வாக்காளர்களின் மனசாய்வை தீர்மானிக்கவும், தன் கட்சியின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்துகொள்ளவும், தன் கட்சியின் சின்னத்தை மக்களிடையே பிரபலமாகுவதற்கும், தங்கள் கோட்பாடு மற்றும் கொள்கைகளை முன்னிறுத்தவும் மக்களைதொடர்புகொள்ளவும் மக்கள் நீதி மய்யத்துக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கடந்த சில வருடங்களாக, பல கட்சிகள் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதைத் தவிர்த்து வருகின்றன. காரணம், ஆளும் கட்சி தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, பணத்தை வாரியிறைத்து, அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவதால் வெறுப்படைந்துள்ளனர். இப்போது 20 தொகுதிகளில் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல்கள் நடக்கவிருப்பதால் ஆளும் கட்சிக்கு அதன் பலத்தை பிரயோகிப்பது சிரமமான காரியமாக இருக்கலாம்.

இம்முறை இடைத்தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிடுவதைக் காண வாய்ப்புண்டு.  அந்தவகையில் மக்கள் நீதி மையத்துக்கும் அடிமட்டத்தில் அக்கட்சிக்குள்ள பலத்தை சோதனை செய்துகொள்ள இது ஒரு வாய்ப்பு. இவ்வருடத்தின் ஆரம்பத்தில், ஜனவரி மாதத்தில் இந்தியா டுடே- கார்வி நிறுவனம் நடத்திய சர்வேயில் மக்கள் நீதி மய்யத்துக்கு நான்கு சதவீத ஆதரவு கிடைத்ததாகக் கூறிருந்த நிலையில் நேற்று முன்தினம் இந்தியா டுடே,  தொலைக்காட்சிகளில் வெளியிட்ட சர்வே முடிவுகளில்  மக்கள் நீதி மய்யத்துக்கு 8 சதவீத ஆதரவு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இன்னொருபுறம் கடந்த ஜனவரியில் ரஜினிக்கு 16 சதவீதம் ஆதரவு இருப்பதாகக் கூறிய  இந்தியா டுடே சர்வே. அந்த ஆதரவால், தமிழக சட்டசபையில் 33 இடங்களைப் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறிய நிலையில், இப்போது வெளியிட்ட சர்வே முடிவுகளில் 16 சதவீதம் என்கிற நிலையிலிருந்து, 6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த வீழ்ச்சி கவலைக்குரிய வீழ்ச்சி. ஆனால் சர்வேயில் இந்த வீழ்ச்சிக்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. அதேவேளையில் ரஜினி கட்சி தொடங்க கால தாமதம் செய்வது, அவ்வப்போது அதிமுகவை புகழ்வது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தது, மறைமுகமான பாஜக ஆதரவு,  போன்ற இக்காரணங்களால் தான் மிக மோசமான வீழ்ச்சியை ரஜினி பெற்றுள்ளார்.

கமல்ஹாசன் தன்னுடைய கொள்கையில் நிலைத்தும் அதனை தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார். அதேவேளையில் அதிமுக அரசின் ஊழல்களையும் சந்தர்ப்பவாதத்தையும் தொடர்ந்து விமர்சித்து தன் எதிர்ப்பைக் காட்டி வருகிறார். ஆனால் கமலுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், மக்கள் ஆதரவு 8 சதவீதம் இருந்தாலும் அவை அனைத்தும் வாக்குகளாக மாறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. எப்படியும் 8 சத விகித வாக்குகள் தேர்தல் வெற்றியை அளிக்காது.  நம் நாட்டில் நிலவும் தேர்தல் முறையில், 8 சதவீதமோ, 20 சதவீதமோ ஆதரவு இருந்தாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை உண்டாகும். தேமுதிக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளுக்கு இந்நிலை உருவானதை அறிவோம்.

தன் கட்சியின் நிலைப்பாட்டைக் கூறி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போவதா அல்லது தன்னுடைய பலவீனங்களை மறைக்கவும் ஓரிரு எம்.பி, எம்.எல்.ஏ சீட்டுக்களைப் பெற  திமுகவுடன் கூட்டணி  அமைத்துக்கொள்வதா என்பதுதான் சிறிய கட்சிகளுக்கு இருக்கும் குழப்பம். இதே குழப்பத்தை  தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் எதிர் நோக்கியுள்ளன. மதிமுகவுக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகளால் உண்டான  அழுத்தத்தால் வேறு வழியின்றி,  திமுகவுடன் கூட்டணி  வைத்துக்கொள்வது தான் ஒரே வழி என்ற முடிவிற்கு மதிமுக வந்துள்ளது.

கமலின் சில ஆலோசகர்கள் இதே வழிமுறையை  பின்பற்ற அவருக்கு ஆலோசனை கூறுகிறார்கள்.  இதன் மூலம் கட்சி ஒரு சீட் கூட பெறமுடியாத மோசமான நிலைக்குச் செல்லாது என அறிவுறுத்துகின்றனர். தனித்தே நின்று வெற்றி பெரும் நிலை வரும் வரையில், வெற்றிபெறும் கூட்டணியில் சேருவது தவறில்லை என்று கூறுகின்றனர்.

அதேவேளையில் நேர்மையான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கி, மாற்றுப்பாதையை அமைப்பதாக கூறி, மாறாக அதிமுக மற்றும் திமுகவிலிருந்து விலகியிருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யம் திமுகவும் கூட்டணி வைத்துக்கொண்டாலும் பாதிக்கப்படும். கழகங்களுக்கு ‘மாற்று’ என்ற கொள்கை இதனால் நீர்த்துப் போக வாய்ப்புண்டு. தேர்தலுக்காக இந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் பின்னர் அவர்களை தாக்கி, விமர்சிப்பது கடினமாகிவிடும். இதே காரணத்தால் தான் தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கழகங்களை நேர்மையாக விமர்சிக்க முடியவில்லை. காங்கிரஸுக்கும் இதே நிலைதான். ஊடகங்கள் பெரிய கட்சிகளிடமிருந்து விளம்பரம் உள்ளிட்ட சுயலாபப்ங்களைப் பெற்று, கொள்கைகளுடன் இயங்கும் சிறு கட்சிகளுக்கு முக்கியத்த்துவம் தர தயங்கலாம்.

ஆகையால், ஆட்சியில் அமர்வது என்ற நீண்ட காலத் திட்டத்துக்காக இயங்கும்போது, ஒரு முறை வெற்றி என்கிற இடைக்காலத் திட்டத்தைக் குறித்து யோசிக்க வேண்டும். இவை எதுவும் உடனே தீர்க்கப்படக்கூடிய எளிய கேள்விகள் அல்ல.  அதிமுக மற்றும் திமுகவுக்கு எதிராக இருக்கும் எதிர்ப்பு இயக்கம் என்பது கூட்டணி அரசியலில் கரைந்து போகலாம்.    நீண்ட காலத்  லட்சியங்களா, குறுகிய கால சிறு வெற்றிகளா ? இதுதான் கமல் முன்னால்  இருக்கும் முக்கியமான கேள்வி.

Share the Article

Read in : English

Exit mobile version