Site icon இன்மதி

ப்ரீ கே.ஜி., எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு ஆறரை மணி நேரம் வகுப்புகளா?

Image Credit : livechennai.com

Read in : English

தமிழக அரசின் புதிய வரைவுப் பாடத்திட்டப்படி, ஃப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் வகுப்பில் ஆறரை மணி நேரம் இருக்க வேண்டியதிருக்கும்.

பகலில் 12.15 மணியிலிருந்து 1 மணி வரை மதிய உணவு நேரம் 1 மணி முதல் 3 மணி வரை உறங்கும் நேரம் என்றும் மற்ற நேரங்களில் என்னென்ன செயல்பாடுகள் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து சமூக நலத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டபேரவையில் அறிவித்தன் தொடர்ச்சியாக பள்ளி முன்பருவக் கல்வி வரைவுப் பாடத்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (எஸ்சிஇஆர்டி) வெளியிட்டுள்ளது.

“தனிக்குடும்பம், குழந்தை வளர்ப்புக்கு நேரமின்மை, பெற்றோர் மத்தியில் கூடுதலான சமுதாய விழிப்புணர்வு, பெற்றோரின் பணிச்சூழல், தொழில் மயமாக்கம், உயர்வான குடும்ப வருமானம் போன்ற பிற காரணிகள் பள்ளி முன்பருவக் கல்வியைத் தொடங்குவதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அரசு இதற்கான காரணங்களைத் தெரிவித்துள்ளது.

“குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி அளிப்பது குறித்தும் ஒவ்வொரு நாளும் எந்த மாதிரியான செயல்பாடுகள் இருக்கலாம் என்பது குறித்தும் என்சிஇஆர்டிக்காக மீனா சுவாமிநாதன் தயாரித்த புத்தகத்தை எஸ்இஆர்டிஇ தமிழில் மொழிபெயர்த்தது. அதையெல்லாம் பார்த்து விட்டு, இந்தப் பாடத்திட்டத்தைத் தயாரித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. மாண்டிசோரி, கிண்டர்கார்டன், நர்சரி என்று பல்வேறு வகையான முன்பருவக் கல்வி முறைகள் உள்ளன. இதில் எந்த முறையைக் கடைப்பிடிக்கப் போகிறார்கள் என தெரியவில்லை” என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

“சின்ன வயதில் உள்ள குழந்தைகளைப் பள்ளியில் இவ்வளவு நீண்டநேரம் வைத்திருப்பது சரியானது இல்லை” – அருணா ரத்னம்

“நாள் முழுவதும் குழந்தைகள் பள்ளியில் வைத்து இருப்பதற்கும் பகலில் தூங்குவதற்கும் என்ன வசதிகளை செய்யப்படும் என்று தெரியவில்லை. ஆசிரியர்கள் தவிர, 5 குழந்தைகளுக்கு ஒரு ஆயா தேவைப்படும். குடிநீர் வசதியும் கழிப்பறை வசதியும் தேவை. இந்த நர்சரி பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் எங்கே இருக்கிறார்கள்? அதற்காகப் பயிற்சி அளிப்பதற்கு அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? “என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

“சின்ன வயதில் உள்ள குழந்தைகளைப் பள்ளியில் இவ்வளவு நீண்டநேரம் வைத்திருப்பது சரியானது இல்லை. முன் பருவப் பள்ளியை டே கேர் சென்டர் போல இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.  அதாவது மீனுக்குத் தலை, பாம்புக்கு வால்? என்பது சரியா இருக்குமா? இரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கான முன் பருவப் பள்ளியில் காலை 9.30 மணி முதல் 4 மணி வரை இருக்க வைக்க வேண்டும் என்றால் பத்து பன்னிரண்டு குழந்தைகளுக்கு பயிற்சி பெற்ற ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும். ஒரு சமையலர், ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியதும் அவசியம்” என்கிறார் சென்னையில் உள்ள யுனிசெஃப் அமைப்பின் முன்னாள் எஜுக்கேஷன் ஸ்பெஷலிஸ்ட் அருணா ரத்னம்.

“பாடத்திட்டத்தை உருவாக்குவதில் சுகாதார மற்றும் குடும்ப நலம், ஒருங்கிணைந்த குழந்தை நல மேம்பாட்டுச் சேவை (ஐசிடிஎஸ்), பள்ளிக் கல்வித் துறை ஆகியவற்றின் இணைந்த வழிகாட்டுதல் தேவை. குழந்தைகளுக்கான வரைவுப் பாடத்திட்டத்திலும் தெளிவாகாத பல விஷயங்கள் இருக்கின்றன. காய்கறி, பழங்கள் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளதை  இரண்டு மூன்று வயதுக் குழந்தைகளால் புரிந்து கொள்ள முடியாது. அதாவது, தனிப்பட்ட காய்கறி, பழங்களை அடையாளம் தெரிந்து கொள்வது என்பதை அதனை வகைப்படுத்தத் தெரிந்தததாகக் கருத முடியாது. இதேபோல, எதிர்பார்க்கும் திறன்களையும் அதற்கான செயல்பாடுகளையும் பிரித்துப் பார்ப்பது குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவாது. காய்கறி, பழங்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு வண்ணங்களைக் கற்பிக்கலாம். வாசித்துப் பழகுவதற்கு முன் எழுத்துகளை குழந்தைகள் கண்டறிய வேண்டுமா அல்லது முதலில் எழுத வேண்டுமா என்பதில் எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள். இப்படி வரைவுப் பாடத்திட்டம் குறித்து சொல்வது பல விஷயங்கள் இருக்கின்றன” என்று கூறுகிறார்  அருணா ரத்னம்.

அங்கன்வாடிகளை முன்பருவப் பள்ளிகளாக தமிழக அரசு மாற்ற நினைக்கலாம். அத்துடன், அங்கு ஆறரை மணி நேர வகுப்பு என்பது நடைமுறையில் எப்படி சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. தனியார் பள்ளிகளைப் போல அரசுப் பள்ளிகளிலும் தகுந்த வசதிகள் செய்யப்பட்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா? இந்த முன்பருவப் பள்ளிகளை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடு எப்படி? என்பது தெரியவில்லை.

“பகவான் கிருஷ்ணனுடன் சக்கர வியூகம் பற்றிய தன் தாயின் விவாதத்தைக் கருவிலிருந்தே அபிமன்யூ கேட்டறிந்தான் என்று புராணம் கூறுகிறது. அவ்வாறு தன் தாயின் கருவிலிருந்து கேட்டறிந்ததை நினைவில் கொண்டு பின்னர் குருசேத்ரப் போரின் முக்கியக் கட்டமொன்றில் பாண்டவர்களை அவன் வழிநடத்தினான்“ என்று இந்த வரைவு பாடத்திட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்குக் கருவிலிருந்து கேட்டறிந்தது நினைவில் இருக்குமோ இல்லையோ தெரிவில்லை. இந்தப் பள்ளிகளில் கேட்டது, இந்த முன்பருவப் பள்ளிக் குழந்தைகளின் நினைவில் இருக்க வேண்டும்.

Share the Article

Read in : English

Exit mobile version