Site icon இன்மதி

தமிழகத்தில் மினி தேர்தலாக வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் : அதிமுக அரசிற்கு புதிய ஆபத்து

Read in : English

அதிமுக அரசு 18 பேர் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால், ஆசுவாசம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த அரசு 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் என்ற மிகப் பெரிய சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த இடைத்தேர்தல்கள், ஒரு மினி தேர்தல் போல இருக்கும். இதுகுறித்து இன்மதி.காம் ஏற்கனவே இந்த சூழலை விளக்கி கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. (18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் மினி பொது தேர்தலைக் கொண்டுவருமா?)   

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டால், இந்த 18 இடங்களுக்கும் அதே ஜனவரி அல்லது பிப்ரவரி மாத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சபநாயகர் தனபாலால் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் :

தங்க தமிழ்ச்செல்வன் – (ஆண்டிபட்டி தொகுதி), ஆர்.முருகன்  – (அரூர்), மாரியப்பன் கென்னடி – (மானாமதுரை), கதிர்காமு – (பெரியகுளம்), ஜெயந்தி பத்மநாபன் – (குடியாத்தம்)

பழனியப்பன் – (பாப்பிரெட்டி பட்டி) , செந்தில் பாலாஜி – (அரவக்குறிச்சி), எஸ். முத்தையா – (பரமக்குடி), வெற்றிவேல் – (பெரம்பூர்), என்.ஜி.பார்த்திபன் – (சோளிங்கர்), கோதண்டபாணி – (திருப்போரூர்), ஏழுமலை – (பூந்தமல்லி), ரெங்கசாமி – (தஞ்சாவூர்), தங்கதுரை – (நிலக்கோட்டை),  ஆர்.பாலசுப்பிரமணி – (ஆம்பூர்), எஸ்.ஜி.சுப்ரமணியன் – (சாத்தூர்), ஆர்.சுந்தரராஜ் – (ஒட்டப்பிடாரம்), கே.உமா மகேஸ்வரி – (விளாத்திகுளம்).

தகுதி நீக்க தீர்ப்பினால் அதிக பயன்களைப் பெற்ற கட்சியாக திமுக உள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்ற காரணத்தினால், இது ஒரு மினி பொது தேர்தலாக அமையும்.

ஆளும் அதிமுக அரசுக்கு இப்போது 109 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.அதேவேளையில் திமுக கூட்டணியில் 97( திமுக -88, காங்கிரஸ் – 8, முஸ்லீம் லீக் -1) பேர் உள்ளனர். இவர்களோடு எதிர்த்தரப்பில் உள்ள தினகரனையும் சேர்த்தால் எதிர்க்கட்சியின் பலம் 98. இவர்களோடு  கருணாஸ்,  தனியரசு, தமிமுன் அன்சாரி(வெவ்வேறு கட்சியைச் சேர்ந்த இவர்கள் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்) ஆகியோர் தினகரனின் ஆதரவாளர்கள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் — பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோரும் தினகரன் ஆதரவாளர்கள்.  இந்த ஏழு பேரின் ஆதரவோடு திமுகவுக்கு 104 பேரின் ஆதரவு கிடைக்கலாம்.  இடைத்தேர்தல்கள் நடைபெறும் 20 தொகுதிகளில் திமுக கூட்டணி குறைந்தபட்சம் 13 தொகுதிகளில் வெற்றிபெற்றால் அவர்களின்  பலம் ஆட்சியை பிடிக்கத் தேவையான 117 இடங்களைப் பெற்று எடப்பாடி அரசை வீழ்த்துவதற்கான பலத்தைப் பெறும். அதிமுக 7 இடங்களில் வெற்றிபெற்றால் கூட, நம்பிக்கை வாக்கெடுப்பில் அதன் அரசை தோற்கடிக்க முடியும்.

அந்த வகையில் தகுதி நீக்க தீர்ப்பினால் அதிக பயன்களைப் பெற்ற கட்சியாக திமுக உள்ளது. இந்த 20 தொகுதிகளில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக திருவாரூரில் மட்டுமே வெற்றி பெற்றது; அதிமுக 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது தனது தளத்தை விரிவுபடுத்திக்கொள்ள திமுகவுக்கு மிகப் பெரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.   117 இடங்களை பெற்று ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், தனது பலத்தை அதிகரிக்கவும், ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் நிலையை திமுக பெற்றுவிடும்.தேர்தல்களை கண்டு அதிமுக அச்சப்படுகிறது என்று அக்கட்சியின் மீது குற்றச்சாட்டுகள் ஓராண்டாக வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட காலமாக உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியபோதும் அதிமுக அரசு தேர்தலை சந்திக்க அச்சப்படுகிறது. அதேபோல் இடைத்தேர்தல்களையும் தள்ளி போடும் முயற்சியில் இறங்கியுள்ளது.  இந்த பயத்துக்கு நியாயமான காரணம் உள்ளது. தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவுக்குக் கொடுத்த போதும், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மிக மோசமான தோல்வியைத் தான் தழுவியது.

இப்போது அதிமுகவுக்கு இரண்டு ‘லிட்மஸ்’ சோதனைகள் இருக்கின்றன. ஒன்று உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கின் இறுதிக்கட்ட போரில் வெல்வது.  இன்னொன்று, பெரிய அளவிலான இடைத்தேர்தல் என்னும் போரைச் சந்திப்பது. எடப்பாடி அரசு, மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக கூட்டணி அரசின் ஆதரவைப் பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள்  நடத்துவதை தள்ளிப் போடலாம்.

இடைத்தேர்தல்கள் இப்போதிலிருந்து ஆறு மாதங்களுக்கு மேல் தள்ளிப் போட இயலாது. இந்த குறிப்பிட்ட காலத்தில் ஜனநாயகத்தின்  எஜமானர்களான மக்கள் அதிமுக அரசு குறித்தும் அதன் ஆட்சி குறித்தும் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியும் எந்த திசையில் ஆதரவு காற்று வீசும் என்பதையும் சொல்வதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. எடப்பாடி அரசு இக்குறுகிய காலத்தில் மக்களை  தைரியத்துடன் சந்திக்குமா? அடுத்த சில வாரங்களுக்கு  பிளவுபட்ட அதிமுகவில் போட்டி சண்டைகள்  அதிகரிக்கலாம்.

Share the Article

Read in : English

Exit mobile version