Site icon இன்மதி

#MeToo: உண்மையான குற்றச்சாட்டுகளும் தீய நோக்கத்துடன் பழிசுமத்தல்களும் -சித்திர வீணை ரவிகிரண்

1985ம் ஆண்டு, 18 வயது ரவிகிரன் 24 மணி நேர தொடர் கச்சேரி நடத்திய பொழுது

Read in : English

உலகின் மிக மோசமான சமூகக் குற்றங்களில் ஒன்று என உலகமே ஒப்புக் கொள்ளும் பாலியல் துன்புறுத்தலை அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட தகாத பாலியல் உறவை, அம்பலப்படுத்துவது என்ற உன்னதமான நோக்கம் கொண்டதுதான் மீ டூ இயக்கம். பொது இடங்களிலும் சரி, தனிப்பட்ட இடங்களிலும் சரி, முறைப்படுத்தப்பட்ட துறையானாலும் சரி, முறைப்படுத்தப்படாத துறையானாலும் சரி, இவை இரண்டிலுமே இந்தத் தீமையை ஒழிக்க வேண்டியது அவசியம். இந்த மீ டூ ஹேஷ்டாக் டிரெண்ட் ஆவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே, நான் உள்பட, உறுதிப்பாடு கொண்ட பலரும்  இதை எதிர்த்து பல வழிகளிலும் போராடி வந்திருக்கிறோம். அதன் விளைவுகள் இரண்டும் கலந்தே இருந்திருக்கிறது. ஆனால், அண்மைக்காலத்தில் உண்மையாகப் போராடுபவர்களின் குரலுக்கு மீ டூ இயக்கம் ஆற்றலை அளித்துள்ளது.

என் தனிப்பட்ட அனுபவம்

என்னுடைய  பதின்ம (டீன் ஏஜ்) வயதில், என்னைவிடவும் 50 வயது மூத்த ஒருவரால், பாலியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவன் என்ற முறையில்,  பாலியல் துன்புறுத்தலை, முறைகேட்டை பொறுத்துக் கொள்கிற மன்னிக்கிற கடைசி ஆளாகத்தான் நான் இருப்பேன்.

மன அமைதியைக் குலைக்கும் இந்த உண்மையை, என்னோடு என் புதைகுழிக்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானித்திருந்த நான், என் மீது பரிதாப்பட வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக ஒரு சரியான கண்ணோட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக, இந்த உண்மையை இப்போது பகிர்ந்து கொள்ள வேண்டியது தவிர்க்க இயலாத அவசியம் என்று கருதுகிறேன். எனக்கு நேர்ந்த  உணர்வு அதிர்ச்சியை அப்போது நான் யாரிடமும் சொல்லவில்லை. (உண்மையில், இதை இப்போதுதான் என் குடும்பத்தினர் முதல் முறையாக படிப்பார்கள்.) முறைதவறி நடந்து கொண்டவரை காப்பாற்ற வேண்டும் என்பதல்ல அப்போது என் எண்ணம். என் தந்தை-குருவின் மன நிம்மதியை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் என்னிடம் மேலோங்கி இருந்தது.

இதன் விளைவாக, என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டவரை, எப்படி தவிர்த்து விலகலாம் என்பதற்கு நான் சில வியூகங்களை வகுத்து அதில் வெற்றியும் கண்டேன். இப்போது  அவரின் பெயரை வெளிப்படுத்தி அவரை அவமானப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சென்னைக்கு வரும்போதெல்லாம் எங்களுடன் வீட்டில் தங்கி இருந்த, எனக்கு XI, XII-ஆம் வகுப்பு கணிதப் பாடம் கற்றுக் கொள்வதற்கு உதவி செய்த அவர் ஒரு பொறியியல் துறை பேராசிரியர் என்று மட்டும் இப்போதைக்கு சொன்னால் போதும்.

வாழ்க்கைப் பாதை

இதனுடைய மோசமான பாதிப்பில் இருந்தும் , அதிர்ச்சி அளித்த பிற அனுபவங்களில் இருந்தும் விடுபட்டு அவற்றை வெற்றி கொள்வதற்கு, கர்நாடக இசையின் அறிவாற்றல் சுடர்விடும் விழுமியங்கள் எனக்கு மிகப் பெரிய அளவுக்கு உதவி செய்தன. தகாத பாலியல் உறவுகளால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிறிய சதவீதத்தினர், அதைத் தொடர்ந்து அவர்களே தகாத உறவுகளில் ஈடுபடுகிறவர்களாக மாறிவிடுகிற நிலையில், அவர்களில் ஒருவனாக சேர்ந்துவிடாமல், என்னைக் காப்பாற்றியதும் அந்த இசை விழுமியங்கள்தான். அந்தக் கால கட்டத்தில் நான் இயற்றிய சில பாடல்கள், அப்போதிருந்த என் மனநிலையை சித்தரிக்கும் ஒரே ஆவணமாக விளங்குகிறது .

” அந்தக் கால கட்டத்தில் நான் இயற்றிய சில பாடல்கள், அப்போதிருந்த என் மனநிலையை சித்தரிக்கும் ஒரே ஆவணமாக விளங்குகிறது “

எனினும், தகாத பாலியல் உறவைக் கண்டு அதற்கு நெடுநாட்களுக்கு முன்பே நான்  வெறுப்புட்ருக்கிறேன். பயந்துபோயிருக்கிறேன். எங்களது பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம், எங்கள் வீட்டு தோட்டக்காரர் முறைதவறி நடந்து கொண்டதை நான்  பார்த்துவிட்டேன். அப்போது எனக்கு 8 அல்லது 9 வயதிருக்கும். அவளுக்கு என்னிலும் பாதி வயதுதான் இருக்கும். அது என்ன என்பதை அப்போது  நான் அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்தக் காட்சி என்னுள் ஏற்படுத்திய பயங்கரமான உணர்ச்சியை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஆனால், நானோ அவளோ அது பற்றி ஒருவருக்கொருவர் ஒருபோதும் பேசிக் கொண்டதில்லை. நல்ல வேளையாக அதை பின்னுக்குத் தள்ளிவிட்டு இப்போது ஒரு இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறது என ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவள் என்னிடம் சொன்னாள்.

எதையும் திணிப்பது முற்றிலும் தவறு

உடல் ரீதியான, உணர்ச்சி தொடர்பான அல்லது அறிவுலக ரீதியான கருத்துக்கள் உள்பட எதையும், எவர் மீதும் திணிப்பது முற்றிலும் தவறு என்ற என்னுடைய உள்ளுணர்வு தத்துவம் உருவெடுப்பதற்கு இந்த இரண்டு சம்பவங்களும்தான் (தகாத பாலியல் உறவைக் காட்டிலும் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட வேறு இரு நிகழ்வுகளும்)-காரணம். எளிய வார்த்தைகளில் சொன்னால், இரண்டு தனிமனிதர்களுக்கு இடையில், பரஸ்பரமாகவும், இயல்பாகவும் இருக்கக் கூடியவை எல்லாமே மெய்யானவை, நியாயமானவை. ஆனால், ஒருவழிப் பாதையாக இருக்கக் கூடியவை எல்லாமே முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இங்கேதான் துன்புறுத்தல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களின் மையப்பொருள் அடங்கியிருக்கிறது. இதற்குள் பல்வேறு நுட்பமான கண்ணோட்டங்களும், சூழ்நிலைகளும் அடங்கியுள்ளன என்பதும் உண்மையே. இவை குறித்து பல்வேறு நாடுகளில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக இசை உலகில் நிலைமை

வேறு எந்தத் துறையையும் போலவே கர்நாடக  இசைத் துறையிலும் மக்களைக் கவரும் பிற பிரபல துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் மிகுந்திருக்கிறது. கர்நாடக இசை என்பது பலருக்கும் தெய்வீகமானதாக இருக்கலாம், ஆனால், அந்த இசைக் கலைஞர்கள் வேறு எந்தத் தொழில்முறை பணியாளர்களையும் போலவே மனிதர்கள்தான். நேர்மையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

வழக்கம் போல குழுக்கள்

இந்தத் துறையை தூய்மைப்படுத்துவதற்கான அமைப்புகளை ஏற்படுத்துவதற்காக ஒரு வல்லுநர் குழுவை சில கலைஞர்கள் கடந்த இரண்டு மூன்று நாட்களில் அமைத்திருக்கிறார்கள். இந்த முன்முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால், இந்தக்  குழுவின் நம்பகத் தன்மையானது நிபுணர் குழு உறுப்பினர்களின் கடந்தகாலச் செயல்பாடுகளுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டதாகும். இந்தக் குழுவுக்கு நற்சான்றிதழ் வழங்கும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது? கண்ணாடி மாளிகைக்குள் இருந்து கல் எறிகிறவர்களைக் கொண்ட குழு சமூகத்தை ஏமாற்றுவதாகத்தான் இருக்கும்.

எவ்வளவுதான் சிறந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவாக இருந்தாலும், அவர்கள் இந்த நாட்டில் இருக்கின்ற, இனி உருவாகப் போகின்ற சட்டங்களுக்கு மேலானவர்கள் அல்ல. முற்றிலும் காதில் கேட்டதை அடிப்படையாகக் கொண்டு, புலன் விசாரணை இல்லாமல் எவருடைய நலன்களுக்கு எதிராகவும் அவர்கள் செயல்பட முடியாது.

கடந்த சில நாட்களாக நடந்து வருகிற பல்வேறு நிகழ்வுகள், மீ டூ இயக்கத்தின் மெய்யான உணர்வுக்கு முரணாக இருக்கிறது என்பது தெளிவு. புகழ்பெற்ற மனிதர்களை அவதூறு செய்வதற்காக, நியாயமான நடைமுறைகளைப் பற்றி கவலைப்படாமல், சுயநலத்துடன் ஆன்லைனில் பிரச்சாரங்களும், நேரலைக் கூட்டங்களும் தூண்டிவிடப்படுகின்றன. கேட்கப்பட வேண்டிய கேள்வி இதுதான். கீழே குறிப்பிட்டுள்ளவர்கள் தொடர்பாக எல்லோரும் நியாயமாக நடந்து கொள்கிறார்களா?

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள்:

பெரும்பாலோர் (நான் உள்பட) தங்களது  அனுபவங்களை, பல ஆண்டுகளாக வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், தங்களின் கதைகளை வெளியில் சொல்வதற்கான  துணிச்சலையும், நம்பிக்கையையும் பலரும் சமீப காலமாக பெற்றிருக்கிறார்கள். பழிக்கப்பட வேண்டியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று சமுதாயம் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருவதுதான் இதற்குக் காரணம். தெருக்களில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும்போதோ அல்லது வேறு இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போதோ, அதுபற்றி பெற்றோர்களிடம் சொல்லுங்கள் என்று என்னைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் பலரையும் நான் எப்போதும் ஊக்கப்படுத்தி வந்திருக்கிறேன். எனினும், மற்றவகையில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியது இதற்கு இணையான முக்கியத்துவம் உடையது.

பாலியல் `குற்றச்சாட்டால்’ பாதிக்கப்பட்டவர்கள்:  

சட்டப்படி செல்லத்தக்க ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டுகள் பெரிய அளவுக்கு இருக்கின்ற அதே வேளையில், சட்டப்படி செல்லுபடியாகாத, ஆதாரமற்ற குற்றசாட்டுகளும் அதிகரித்து வருகின்ன. எதிர்பார்த்தபடி, அப்பாவிகளுக்கு நியாயமற்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சமூக – அரசியல் செயல்பாடு என்ற போர்வையில், பெயர் சொல்ல விரும்பாதவர் என்ற பாதுகாப்பில் மீ டூ என்ற பெயரில் அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்களால் பொறுப்பற்ற வகையில் பெயர் குறிப்பிடப்பட்டு,  சிலர் அவமானப்படுத்தப்படுகின்றனர், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் நிலைக்கு ஆளாகின்றனர்.

பாலியல் மயக்குதலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள்:

பாலியல் ரீதியாக வேட்டையாடுபவர்கள் அல்லது தகாத உறவில் ஈடுபடுவர்கள் இருப்பது எந்த அளவுக்கு எதார்த்தமோ அதே அளவுக்கு பாலியல் ரீதியாக மயக்குபவர்களும் சந்தர்ப்பவாதிகளும் இருப்பதும் எதார்த்தம். தன்னுடைய சுய மேம்பாடு என்ற நோக்கத்துக்காக இன்னொருத்தரை அவரது விருப்பத்துக்கு எதிராக மயக்கி சிக்க வைக்க முயல்பவரை (தகாத பாலியல் உறவில் ஈடுபடுவர் என்றில்லாவிட்டாலும்) பாலியல் துன்புறுத்தல் செய்பவர் என்ற வகையிலேயே  நடத்த வேண்டும். சமத்துவம் என்பது உலகில் லட்சியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், கலாபூர்வமாக மயக்கி சிக்க வைக்கப்படுகிற ஒருவர் ஏன் பலவீனமானவர் என்று கேலி செய்யப்படுகிறார்? பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிற ஒருவரிடம் காட்டும் அதே உணர்வு ஏன் இவருக்கு மறுக்கப்படுகிறது? பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும், பாலியல் ரீதியாக மயக்குதலுக்கும் என்ன வேறுபாடு? முன்னதில், பாதிக்கப்பட்டவர் தெளிவாகப் பாதிப்பை உணர்கிறார். இரண்டாவதில், மயக்குதல் கலாபூர்வமாக நடப்பதால் பெரும்பாலோர் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதையே அறிந்திருக்கவில்லை. எனவே, சுருங்கச் சொன்னால், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டையும், பாலியல்ரீதியாக மயக்கி சிக்க வைப்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால், நிலைமையைத் தூய்மைப்படுத்தும் எந்த முயற்சியும் சரியானதாக இருக்காது.

ஹேஷ்டாக் மூலம் விரட்டி, விரட்டி தாக்குதல்

என் மீதோ, எனக்கு நெருக்கமான குடும்பத்தின்மீதோ, நண்பரின்மீதோ தீய நோக்கத்துடன் குற்றம்சாட்டப்பட்டால் எப்படி இருக்கும்? என்ற ஒரு கேள்வியை உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு, `மீ டூ மிஸ்யூஸ்’ மூலம் குற்றம்சாட்ட விரும்புகிற ஒருவர், யாரோ ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு சில வரிகளை, இதற்கென்றே ஏற்பாடுகள் செய்துதர இருப்பவர்களுக்கு அல்லது சமூக – செயற்பாட்டாளர்கள் என்று காட்டிக் கொள்பவர்களுக்கு  அனுப்பி, `டைம் ஈஸ் அப்’ மற்றும் `டிரிக்கர் வார்னிங்ஸ்’ போன்ற ஹேஷ்டாக்குகளை தூண்டிவிட்டால் போதும்.

” தவறான பாலியல் குற்றச்சாட்டு கூறுவதற்கு உதவி செய்கிற ஒவ்வொருவரும், பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருப்பவரைக் காட்டிலும் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல “

தவறான பாலியல் குற்றச்சாட்டு கூறுவதற்கு உதவி செய்கிற ஒவ்வொருவரும், பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருப்பவரைக் காட்டிலும் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. கடந்த சில நாட்களாக சமூக ஊடகத்தில் நடத்தப்படுகிற பொது விசாரணை என்பது, `மீ டூ மிஸ்யூஸ்’ நடவடிக்கையானது, சமுதாயத்தை சிதைத்து எந்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு முன்னோட்டம்தான். நியாயமான உரிய நடைமுறை என்பது இல்லை என்றால், யாருக்கு  எதிராகக் காழ்ப்புணர்ச்சி இருக்கிறதோ அவர்களை அழிப்பதற்கு ஒரு சிறிய ஆதாரத்தைக் கூட கொண்டுவரத் தேவையில்லை என்று நிலவும் சூழலில், நூற்றுக்கணக்கானவர்கள் நூற்றுக் கணக்கான மற்றவர்களால் குற்றம் சாட்டப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

ஆதாரம் இல்லாமல் யாரையும் ஆன்லைன் மூலம் அடித்துக் கொல்லுதல் என்பது நிஜத்தில் கும்பல்களால் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுவதைக் காட்டிலும் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுமானால், தாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை என்பதை எவரேனும் நிரூபிக்க முடியுமா? கடைசியில் ஒருவர் இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டாலும்கூட, அவருக்கோ அவரின் குடும்பத்தினருக்கோ ஏற்பட்ட பாதிப்பை கற்பனை செய்ய முடியுமா? அவர்களுக்கு ஏற்படுகிற வேதனைக்காக யார் அவர்களிடம் மன்னிப்பு கேட்பார்கள்?

சமூக ஊடக விசாரணைகள்

உண்மையாகவே பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்  நான் நிற்கிறேன். அதே அளவுக்கு தவறாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் நான் நிற்கிறேன்.  இந்தத் துறையில் உலகம் முழுவதுமே சட்டங்கள் என்பவை இப்போதுதான் கருக்கொண்டு உருப்பெறும் நிலையில் இருக்கின்றன. நிஜமான முறைகேடுகள், துன்புறுத்தல்கள் தனிப்பட்ட இடங்களில்தான்  நடக்கின்றன. மீ டூ ஆதரவாளர்கள் சிலரால் முன்மொழியப்படுகிற இப்போதைய நிலவரம், எப்படிப் பார்த்தாலும் இரு தரப்புக்கும் நியாயம் அளிக்கும் உணர்வுக்கு எதிராகவே இருக்கிறது. தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படும் வரையில்  எவரும் குற்றம் இழைத்தவர்தான் என்று தானே கருதிக் கொள்ளும் சட்டங்கள் எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? ஆமாம், 2 முதல் 10 சதவீதம் வரை அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் ‘’ என்று யாரேனும் சொன்னால், அப்பாவிகள் எல்லாம் வெறும் புள்ளிவிவரங்கள்தான் என்பது அதற்கு அர்த்தமாகிறது. இசை மற்றும் திரைப்பட  தொழில் போன்ற முறைப்படுத்தப்படாத இடங்களில், முழு அளவிலான நியாயமான நடைமுறைகளில்தான் தீர்வுகள் அடங்கி இருக்கின்றன.

சேர்க்கப்பட வேண்டிய நியாயமான நடைமுறை

காலக் கெடு:

தகாத பாலியல் உறவினாலும் பாலியல் துன்புறுத்தலினாலும் பாதிக்கப்பட்டவர்கள், சம்பவம் நடந்த எவ்வளவு காலத்துக்குள் குற்றச்சாட்டுகளைக் கூற வேண்டும் என்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். (பல பணி இடங்களில் இது 6 மாதம் என்பதாக இருக்கிறது.) காலம் கடந்துவிட்டால், குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அதிக கடினமாகிவிடும் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஒரளவு ஆதாரமும் முழு ஆதாரமும்:

போதுமான ஆதாரம் இல்லாத அல்லது ஆதாரமே இல்லாமல் இருந்தாலும் மீ டூவை தவறாகப் பயன்படுத்தி எவர் மீதும் குற்றம் சாட்டி சைபர் குற்றவாளி ஆக்கி விடலாம். இதனால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களின் நம்பகத் தன்மையும் கேள்விக்குறியாகிறது. எனவே, ஓரளவு ஆதாரத்துடன் வருபவர்கள், ஒருவர் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்னதாக முழுமையான விவரங்களைச் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

நம்பகத் தன்மைக்கு விசாரணை தேவை:  

பாதிக்கப்பட்டவரின் மீது பரிவு காட்டுதல் என்ற பெயரில் குற்றம்சாட்டுபவர் சொல்வதை அப்படியே ஏன் எடுத்துக் கொள்ளப்படுகிறது? குற்றம்சாட்டப்பட்டவர் மட்டும் ஏன் விசாரிக்கப்பட வேண்டும் ? இந்த வகையில் எந்தப் பிரச்சினையையும் எப்படி நியாயமாக மதிப்பிட முடியும்? என்றல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ராமாயணத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ராவணனைக் குற்றம் சாட்டும் சீதைக்கும், ராமனையும் லட்சுமணனையும் நோக்கி விரல்களை நீட்டும் சூர்ப்பனகைக்கும் இடையே கணிசமான வேறுபாடு இருக்கிறது. யாரையும் யாரும் பழிவாங்கிவிட்டு, வீரனாக, வீராங்கனையாக தப்பி வந்து விடலாம் என்ற நிலை ஏற்பட்டால் அது முழுமையான குழப்பத்துக்கே வழிவகுக்கும். நம்பகமான மனிதர்களை சொற்பமான ஆதாரத்துடன் அல்லது ஆதாரமே இல்லாமல் தூக்கி வீசிட முடியுமென்றால் அது உண்மையை தலைகீழாக புரட்டிப் போட்டதாகிவிடும். அதே போல, ஒருவருக்கு எதிரான தப்பெண்ணங்களுடன் ஆன்லைனில் மறைமுக யுத்தம் நடத்துகிறவர்களின் நம்பகத் தன்மை குறித்தும் கவனமாக முழுமையாக விசாரிக்க வேண்டும். சமுகச் செயல்பாடு என்பதாலேயே எவருக்கும் விசாரணையில் இருந்து விதிவிலக்கு கிடைத்துவிடாது. எவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற உரிமையையும் அது தந்துவிடாது.

நியாயமான குறைகளும் அற்பத்தனமான கட்டுக்கதைகளும்

உண்மைக்கும் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அடிப்பை அறிவாற்றல் உள்ள எந்த மனிதராலும் கண்டறிய முடியும். புற உண்மைகள் மறைக்கப்பட்டால், பல அப்பாவிகள் தினந்தோறும் குற்றம்சாட்டப்பட்டு பாதிக்கப்படுவார்கள்.

நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல்:

” ஒருவரைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களின் கருத்துக்கள், அவரைப் பற்றி நேரடியாக நெருக்கமாக அறிந்தவர்கள் சொல்லும் கருத்துக்களை பின்தள்ளிவிட்டு எப்படி மேலாதிக்கம் செலுத்த முடியும்? “

சில பதிவிடல்கள் நியாயமாக இருந்தாலும், பெரும்பகுதி பேஸ்புக் பதிவுகளும், டுவீட்டுகளும், குற்றம்சாட்டுபவர்களையோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களையோ நெருக்கமாக தெரிந்திருக்காவிட்டாலும் கொஞ்சம்கூட தாமதிக்காமல் அவர்கள் தாவிக் குதித்து முடிவுகளுக்கு வந்துவிடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துகிறார்கள் அல்லது துன்புறுத்தியவர்களை தூற்றுகிறார்கள். தவறான குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை ஆதரிப்பவர்களும் மிரட்டப்படுகிறார்கள். உதவியாக செயல்பட்டவர்கள், கிரிமினல்களின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். ஒருவரைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களின் கருத்துக்கள், அவரைப் பற்றி நேரடியாக நெருக்கமாக அறிந்தவர்கள் சொல்லும் கருத்துக்களை பின்தள்ளிவிட்டு எப்படி மேலாதிக்கம் செலுத்த முடியும்?

பிளாக்மெயில் அமைப்புகள்

கலைத்துறையின் பாதுகாவலர்கள் என்றும் பல பத்து ஆண்டுகளாக உலகின்  பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கான திறமையாளர்கள் வெளிக் கொண்டு வந்து சேவை செய்ததாகக் காட்டிக் கொள்ளும் சில பிரபலமான அமைப்பாளர்கள், கடந்த இரண்டு மூன்று நாட்களில் பகைமை உணர்வுடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டிருப்பது மோசமான வீழ்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

நமது கலாச்சாரத்துக்கு முழுவதும் மாறாக, மோசமான தொனியில் சொல்லப்படும் வதந்திகளையும் கிசுகிசுக்களையும் அடிப்படையாகக் கொண்டு பிரபலங்களை புறக்கணிக்க வேண்டும் என்று  ஆரவாரமான குரல்கள் கேட்கின்றன. பிளாக்மெயிலுக்கும் மிரட்டல்களுக்கும் அடிபணிந்துவிடக்கூடாது என்பதில் மதிப்புமிக்க அமைப்புகள் விவாதித்து முடிவுக்கு வேண்டும். அல்லது சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும். எந்த முடிவுவும் எடுப்பதற்கு முன்னதாக, புகார்கள் குறித்த ஆதாரங்களையும் மறுதரப்பு வாதங்களையும் அமைப்புகள் கேட்டுப் பெற வேண்டும். சட்டவிரோத மிரட்டல்களுக்கு ஆதரவான முன்உதாரணங்களை ஏற்படுத்தக்கூடாது. இது சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும்.

தொகுத்துச் சொன்னால், பாலியல் துன்புறுத்தல் என்பது மிகவும் சிக்கலான பிரச்சினை. அதற்கு பல பக்கங்கள் இருக்கின்றன. இரு தரப்புகள் தொடர்பாகவும் ஒரு நியாயமான விசாரணை இல்லாமல் இருப்பது , மையப் பிரச்சினை எந்த அளவுக்கு மோசமானதோ அந்த அளவுக்கு மோசமானது. இது சமுதாய விழுமியங்களையும், கட்டமைப்புகளையும் சீர்குலைத்துவிடும். இந்தப் பிரச்சினையின் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு அரசுகள் முறையான சட்டத்தை உருவாக்க வேண்டியது இன்றியமையாத தேவை. மீ டூ போன்ற ஹேஷ்டாக்குகளை அதன் அடிப்படை உணர்வுக்கு எதிராக எந்தக் காரணத்துக்காகவும் தவறாகப் பயன்படுத்துகிறவர்களும், அவர்களுக்கு வழியேற்படுத்திக் கொடுப்பவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளும், தவறாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

—-

கட்டுரையாளரின் குறிப்பு: சமூக ஊடகங்களில் நடைபெற்று வரும் மீ டூ இயக்கத்தில் எந்த உறுதிப்பாடும் இல்லாமல் நான் வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், நான் பாலியல்ரீதியாக யாரையும் துன்புறுத்தியதில்லை. அம்மாதிரியான செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Share the Article

Read in : English

Exit mobile version