Site icon இன்மதி

அன்புள்ள விவசாயிகளே! மும்பை டப்பாவாலாக்களின் தொழில்நுட்பத்தை விவசாயிகளும் பின்பற்றலாமே?

மும்பை டப்பாவாலா (கோப்புப் படம்)

Read in : English

அன்புள்ள விவசாயிகளே! எனது பத்தியைப் பார்த்து கடந்த வாரம் விவசாயிகள் பலர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்கள். நான் அடிப்படையில் ஒரு விவசாயியாக இருப்பதை சுட்டிக்காட்டினீர்கள். நானும் அதை உணர்ந்தே இருக்கிறேன். நானும் இதை பல கூட்டங்களிலும்  பத்தியிலும் குறிப்பிட்டுள்ளேன். இன்றைய சூழலில் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துவதை மேம்படுத்த என்ன வழி?

நீங்கள் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் டெல்டா விவசாயிகள் குறித்த செய்திகளை பார்த்திருப்பீர்கள். அதிக அதிக மழையினாலோ அல்லது வறட்சியினாலோ பயிர் நாசமடைந்து, அதனால் நஷ்டம் உண்டாகியிருக்கும். அதனால் அவர்கள் எப்போதும் அரசு வழங்கும் மானியத்தையும் கடன் ரத்தையும் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.

ஆனால் அரசின் சக்கரம் வேகமாக சுற்றாது அல்லவா? அதுவும் விவசாயம் குறித்த விஷயங்களில் அந்தச் சக்கரம் மெதுவாக சுழலும் அல்லது சுழலவே சுழலாது. இங்கு உண்மையான சிக்கல் என்பது, சந்தைபடுத்தல், விநியோகம், தேவையறிந்து வழங்குதல் என அனைத்தும் ஒரு தொடர் சங்கிலி நடவடிக்கை. ஏன்? விவசாயம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் விஷயம் என்பதாலா? அப்படியானால் இதற்கு தகுந்த தீர்வு என்ன? இந்த விவசாயத் துறையை தனியார்மயமாக்கினால், சந்தைப்படுத்துவதில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? விவசாயத்தை யார் இயக்குகிறார்கள் என நீங்கள் யோசித்ததுண்டா?

விலை நிர்ணயம் செய்வதிலிருந்து தானியங்களை கொள்முதல் செய்வதுவரை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.

அதாவது, இங்கு விலை நிர்ணயம் செய்வதிலிருந்து தானியங்களை கொள்முதல் செய்வதுவரை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. தற்போது நிலவும் பிரச்சினை என்னவென்றால், நிபுணத்துவம் வாய்ந்த மேலாண்மை இல்லாமை, முறையான திட்டமிடல், மோசமான சந்தைப்படுத்தல் ஆகியவை தான். இவை அனைத்தும் தொழில் முறையாளர்களால் கையாளப்பட வேண்டும். ஆனால், நம் நாட்டில் விவசாய நிபுணர்களும் விஞ்ஞானிகளும் இதற்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இந்தத்துறை தடுமாறுவதற்கு காரணம், சந்தைப்படுத்துதலில் நிபுணர்கள், அனுபவமுள்ளவர்கள் கையாள வேண்டிய விஷயங்களை, அது பற்றி அறியாத வேளாண் விஞ்ஞானிகள் பேசிக்கொண்டிருப்பதுதான். இதில் தொழில்முறையாளர்களை கொண்டு வாருங்கள் என்பது என பணிவான வேண்டுகோள்.

அதேபோல், விவசாய விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் முரண்பாடுகள் எழுவதை பார்த்திருப்பீர்கள். வேளாண்மை மாநில அரசின் பட்டியலின் கீழ் உள்ளது; ஆனால் மத்திய அரசு கட்டுப்படுத்தி வருகிறது. இதில் துயரம் என்னவென்றால், இதுகுறித்து முடிவு எடுக்கக்கூடியவர்களில் சிலர், கிராம மக்களிடம் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். உதாரணத்துக்கு ஒரு விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்யும் கூட்டத்தில், அந்தத் துறை அமைச்சர், அவரது செயலர், சில அரசு அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். அன்று மாலை விலை நிர்ணயம் பற்றி அறிவிப்பு வரும். அக்கூட்டத்தில் எந்த ஒரு விவசாயியோ அல்லது விவசாய சங்கங்களோ பங்கெடுத்திருக்க மாட்டார்கள். இதுதொடர்பாக யாரிடமும் எந்த ஆலோசனையும் நடத்தப்பட்டிருக்காது. அல்லது யோசனைகளை சொல்வதற்கும் இடம் இருக்காது.

என்னைப் பொருத்தவரையில், தனியார் தொழில்முனைவோருக்கு  நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அரசு அலுவலர்களைவிட அவர்கள் இந்த வேலையை சிறப்பாகச் செய்வார்கள். விவசாயிகளின் தேவைகளை விஞ்ஞானிகள் உணரவும் கிரிஷி விஞ்ஞான் கேந்திராவிலிருந்து கிடைத்த அனுபவங்களை மற்ற இடங்களிலுள்ள விவசாயிகளிடத்தில் விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்வதுமே கிருஷி விஞ்ஞான் கேந்திராக்களின் நோக்கம். ஆனால் இன்று அந்தச் சூழல் மாறிவிட்டது. இன்றையத் தேவை ஒரு வியாபார முன்னுதாரணம். நமது விவசாயிகளுக்கு பயிர்களை எப்படி விளைவிக்க வேண்டும் அதற்கு என்ன யுக்திகளை பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும். இப்போதைய தேவை அவர்களது உற்பத்திப் பொருட்களை சிறப்பாகச் சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள்தான். இதுதான் இன்றைய முக்கியத் தேவை

இதற்காக நாம் வெகுதூரம் போக வேண்டாம். மும்பை டப்பாவாலாக்களிடமிருந்து தொழில்நுட்பங்களை ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது?  படிக்காத நடுத்தர வயதுள்ள டப்பாவலாக்கள் அத்தொழிலை சிறப்பாக நிர்வகிக்கிறார்கள். வைத்திருந்தால் கெட்டுப்போகும் உணவைக்கொண்டுதானே தொழில் நடத்துகிறார்கள். அவர்களுடைய வழிமுறைகள் சிறப்பானவை; உலகுக்கு நிரூபித்துக் காட்டப்பட்டவை.

நினைவு கொள்ளுங்கள் நண்பர்களே!  60 ஆண்டுகளாக சிக்கலில் உழலும் இந்த வேளாண்மை தொழிலை சரிசெய்ய உடனடித் தீர்வுகள் இல்லை. பல்வேறுபட்ட  அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து திட்டமிடும் அணுகுமுறை தேவை. இதை கவனிக்கிறீர்களா? அடுத்த வாரமும் பேசுவோம். நன்றி.

Share the Article

Read in : English

Exit mobile version