Site icon இன்மதி

அறியாத முகங்கள்: ஈழ மண்ணிலிருந்து ஒலிக்கும் நாகஸ்வர இசை

பாலமுருகன்

Read in : English

கர்நாடக இசையைப் பொருத்தமட்டில் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவில் இருந்து இந்தக் கலைஞர் நம் நாட்டுக்கு வந்து கச்சேரி செய்யமாட்டாரா என்று ஏங்குவதுதான் வழக்கம். அதற்கு நேர்மாறாக, வெளிநாட்டு கலைஞர் நம் ஊரில் வந்து கர்நாடகயிசை இசைக்க மாட்டாரா என்று நினைப்பது அரிதினும் அரிது.

1960-கள்/70-களில் தவில் மேதை யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்திக்கு இது நிகழ்ந்தது. அதன்பின் அதே மண்ணில் இருந்து உருவாகியிருக்கும் நாகஸ்வர கலைஞர் யாழ்ப்பாணம் பாலமுருகனின் மேல் அத்தகைய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற முறை ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான இணையவெளிகளில் பாலமுருகனின் இசைப்பதிவுகள் பலரால் பகிரப்பட்டுள்ளன. அவர் வாசித்த பல திரையிசைப் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கர்நாடக சங்கீத ரசிகர்களை அவர் நாகஸ்வரத்தின் இனிமையும், சுஸ்வரமான ராக வாசிப்பில் தென்படும் கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் , “யார் இந்தப் புதுக் காற்று?”, என்று திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவிலின் ஆஸ்தான நாகஸ்வர வித்வானாய் இருக்கும் பாலமுருகன் தன் இசைப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில்,

“எங்கள் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில். தாத்தா தவில் வித்வானாக இருந்தவர். அவர் காலத்தில் இலங்கைக்கு குடிபெயர்ந்தோம். அப்பா சுப்புசாமி பிள்ளை நாகஸ்வர வித்வான். அதைத் தவிர, தவில், வாய்ப்பாட்டு, மிருதங்கம், கடம், கஞ்சிரா ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர். என் எட்டாவது வயதில் அவரிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.”, என்கிறார்.

தெரிந்தவர்கள் எல்லாம் போரில் மாண்டு விழுந்த போதும், அடுத்த நாள் பிழைத்திருப்போமா என்று அறியாத போதும் தொடர்ந்து சங்கீத சாதகம் செய்வதை என் தந்தையார் வலியுறுத்தி வந்தார்.

தன் இளமைக் காலங்களை இலங்கையில் நடந்த போருக்கிடையிலேயே கழித்த பாலமுருகன், தன் இருபதாவது வயது வரையில் வாழ்க்கையை பத்து கிலோமீட்டருக்குள்ளேயே கழித்ததாகக் கூறுகிறார்.

“தெரிந்தவர்கள் எல்லாம் போரில் மாண்டு விழுந்த போதும், அடுத்த நாள் பிழைத்திருப்போமா என்று அறியாத போதும் தொடர்ந்து சங்கீத சாதகம் செய்வதை என் தந்தையார் வலியுறுத்தி வந்தார். என் வீட்டில் திருவாவடுதுரை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் கேசட்டுகளைத் தவிர வேறொரு நாகஸ்வர கேஸட்டுக்கு இடமில்லை. “அதைத் திரும்பித் திரும்பிக் கேளு. அதில் இருப்பவற்றை முழுவதும் வாசிக்க முடியாவிட்டாலும், அதிலிருந்து ஏதாவது சில விஷயங்கள் உனக்கும் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொண்டாலே பெரிய விஷயம்தான்.”, என்று அப்பா சொல்வார். அந்த நெருக்கடி நிலையிலும் விடாது செய்த சாதகம்தான் என்னை இன்று ஒரே நாளில் மூன்று இடங்களில் வாசிக்க வேண்டும் என்றாலும் சமாளிக்க உதவுகின்றன.”, என்கிறார் 38 வயது பாலமுருகன்.

அளவெட்டி பத்மநாபனிடம் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார். வித்வான் பத்மநாபனுடனும் அதன்பின் இலங்கையில் பிரபலமாயிருந்த வித்வான் கானமூர்த்தியுடனும் துணை நாகஸ்வரமாக சில ஆண்டுகள் வாசித்த பின் , தனது 23-வது வயதில் இருந்து தனி ”செட்” அமைத்துக் கொண்டு வாசித்து வருகிறார். சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக முதன் முதலாய் வெளிநாட்டுப் பயணம் சென்ற பாலமுருகனின் வாசிப்பு இன்று லண்டன், ஆஸ்திரேலியா, கனடா முதலான நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தென்னிந்தியாவிலும், குறிப்பாக கர்நாடகத்திலும் கேரளத்திலும் எண்ணற்ற அழைப்புகளை ஏற்று நிறைய கோயில் கச்சேரிகள் செய்து வருகிறார்.

 

இவர் வாசிப்பைக் கேட்டு, ஹரித்வாரமங்கலம் பழனிவேல், டி.ஏ.கலியமூர்த்தி, தஞ்சாவூர் கோவிந்தராஜன், மன்னார்குடி வாசுதேவன் போன்ற பெரிய தவில் வித்வான்கள் மனமுவந்து இவருடன் வாசித்திருக்கின்றனர்.

“2006-ல் யாழ்பாணத்துக்கு ஒரு கச்சேரிக்காக சென்றிருந்த போது அங்கு பாலமுருகன் இரண்டாவது நாயனம் வாசித்தார். அவர் வாத்யத்தின் நாதமே இனிமையாகவும் தனித்துவமாகவும் இருந்தது. எது வாசித்தாலும் அதிலிருந்த குளிமை மனத்தை ஈர்த்தது. 2009-ல் ஒரு வாய்ப்பு கிடைத்த போது அவரி இந்தியாவுக்கு அழைத்து வாசிக்க வைக்க சிபாரிசு செய்தேன். அதன்பின் நிறைய கச்சேரிகளில் சேர்ந்து வாசித்துள்ளோம். அன்று நான் அவரை அழைத்தது போக இன்று அவர் என்னை இலங்கைக்கு அழைத்து பல கச்சேரிகளில் வாசிக்க வழியும் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளார். முன்னணி கலைஞர்கள் மன்னார்குடி வாசுதேவன், திருப்புங்கூர் முத்துகுமாரிசாமி போன்றோரும் அவர் அழைப்பின் பேரில் சென்று இலங்கையில் அடிக்கடி வாசித்து வருகின்றனர்.” என்கிறார் தவில் வித்வான் கோவிலூர் கே.ஜி. கல்யாணசுந்தரம்.

தன் இளமைக் காலங்களை இலங்கையில் நடந்த போருக்கிடையிலேயே கழித்த பாலமுருகன், தன் இருபதாவது வயது வரையில் வாழ்க்கையை பத்து கிலோமீட்டருக்குள்ளேயே கழித்ததாகக் கூறுகிறார்.

இந்தியாவில் வாசிப்பதைப் பற்றி பாலமுருகன், ”2013-ல் எங்கள் வாசிப்பைக் கேட்டுவிட்டு திரு. ஏ.கே.பழனிவேல் எங்களை பொங்கல் தினத்தன்று சன் டிவி-யில் வாசிக்க ஏற்பாடு செய்தார். இந்த வருடம் திருவையாறு தியாகராஜ உற்சவத்திலும் முதன் முறையாக வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.”. என்கிறார்.

கர்நாடக இசையோடு திரையிசையையும் வாசிப்பதைப் பற்றி பேசும் போது, “இன்றைய சூழலில், குறிப்பாக இலங்கையில் வாசிக்கும் போது, இளைஞர்கள் கவனத்தை தக்க வைக்க திரையிசைப் பாடல்களையும் வாசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கச்சேரிக்கு அழைத்தவர்கள் விரும்பிக் கேட்கும் போது தட்ட முடிவதில்லை. ரசிகர்களுக்காக திரையிசையை வாசித்தாலும் என் மனது எப்போதும் கர்நாடக ராகங்களையும் கீர்ததனைகளையும்தான் பெரிதும் விரும்புகின்றது.”

தன்னை அதிகம் பாதித்த இசையைக் குறிப்பிடும் போது, “ஜி.என்.பி, மதுரை சோமு, சேஷகோபாலன் ஆகியோரின் ராக ஆலாபனைகள் என்னை பெரிதும் பாதித்துள்ளன. கீர்த்தனைகள் பாடுவதில் மகாராஜபுரம் சந்தானத்தின் வழியை பெரிதும் விரும்புவேன். அதே வழியில் வாசிக்கவும் முயன்று வருகிறேன்.”, என்கிறார்.

 

கோயில் கச்சேரிகளில் ஓய்வின்றி வாசித்துவரும் பாலமுருகன் விரைவில் இந்தியாவிலும், அமெரிக்கா முதலான நாடுகளிலும் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தும் சபைகளிலும் வாசிப்பார் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

அதன் தொடக்கமாக வரும் நவம்பர் 3-ம் தேதி சென்னையில், மயிலாப்பூர் ராக ஸுதா அரங்கில் இவர் கச்சேரி நடைபெறுகிறது.

Share the Article

Read in : English

Exit mobile version