Site icon இன்மதி

தினகரனை சந்தித்தது உண்மைதான்: முதல்வராகும் எண்ணத்தில் என்னிடம் பேசியதால் அவரிடம் உடன்படவில்லை என ஓபிஎஸ்

கோப்பு படம்

Read in : English

தினகரனை சந்தித்தது உண்மைதான். அப்போது முதல்வராகும் எண்ணத்தில் என்னிடம் பேசியதால் அவரிடம் தான் உடன்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், ‘அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும்’ கூறினார்.

நான் தர்மயுத்தம் நடத்தி கொண்டிருக்கிறேன். எதற்காக… அந்த குடும்பத்திற்குள் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடகூடாது என்பதற்காக

இதற்கு பதிலளிக்கும் விதமாக நிருபர்களை  சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு, தம்மை முதல்வராக ஆக்குவதற்கு ஓ.பன்னீர்செல்வம் கூறியதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவிப்பதற்காக நேற்று மாலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்றில் இருந்து தினகரன் ஒரு புது பிரச்சினையை தாமாகவே சிந்தித்து, அதை தங்க தமிழ்செல்வன் மூலம் பேட்டி அளிக்க சொல்லி, இன்று அவரே அந்த பேட்டியை தொடர்ந்து இருக்கிறார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்க உள்ளதால் கட்சியில் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடத்தப்பட்டது.  அந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் அனைவரும் இருக்கிறார்கள் என்பதை நேற்றைய கூட்டத்தில் கண்டதை பார்த்து ஒரு குழப்பமான மனநிலைக்கு  தினகரன் வந்து இருக்கிறார்.

ஒரு வாரத்துக்கு முன்பு தினகரன் ஒரு பொய்யான செய்தியை பேசி இருக்கிறார். கதிர்காமு எம்.எல்.ஏ.வை நான் ரூ.50 கோடி தருகிறேன் எங்கள் பக்கம் வந்துவிடு என்று நான் சொன்னதாகவும் ஒரு அப்பட்டமான பொய்யை சொல்லி இருக்கிறார்.

எனக்கு உண்மையில் ஆசை இருந்தால், அம்மா மறைவுக்கு பின் முதல்வராக இருந்தேன். அந்த நேரத்தில் பொதுச்செயலாளராக சசிகலா வந்துவிட்டார். அப்போது நான் தர்மயுத்தத்தை ஆரம்பித்துவிட்டேன்.  சசிகலா முதல்வராக நினைக்கிறார் என்று என்னிடம் பல அமைச்சர்கள் சொன்னார்கள். அப்போது அதுமாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அவர்களுக்கு நான் அறிவுரை கூறினேன்.

என்மீது இவ்வளவு பெரிய களங்கத்தை சுமத்தி இருக்கிறார் என்று சொல்லி நான் நினைத்தால் அன்றைய தினமே நான் முதல்வராக ஆகி இருக்க முடியும். அந்த மாதிரியான  துரோகத்தை பன்னீர்செல்வம் என்றைக்கும் செய்யமாட்டான் என்று சொன்னதுக்கு திருப்பரங்குன்ற ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கைதட்டி மகிழ்சியை வெளிப்படுத்தினார்கள்.

அதுமட்டுமல்ல மிகப்பெரிய உச்சகட்டத்துக்கு வந்து, தான் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற மிகப்பெரிய மனச்சுமையோடு அலைந்து திரிந்துகொண்டு இருக்கிறார்  தினகரன் என்று எல்லாம் அந்த கூட்டத்தில்  நான் பேசி இருக்கிறேன்.

திரும்பவும் 4 நாட்களுக்கு முன்பு, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து,  தமிழக அரசை கவிழ்க்க முயற்சித்ததாக தினகரன் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது அவர் ஒரு குழப்பமான மனநிலையில் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஆர்.கே நகரில் பொய் பிரச்சாரம் செய்து, அனைத்து தில்லு முல்லுகளையும் செய்து,  மக்களை ஏமாற்றி, 20 ரூபாய் நோட்டை கொடுத்து, அவர் எப்படி வெற்றிபெற்றார். அந்த நிலை திருப்பரங்குன்றத்திற்கு வரவிடமாட்டோம். தொண்டர்களாகிய நீங்கள் தடுத்து நிறுத்தி விடுவீர்கள் என்றெல்லாம் அங்கு பேசப்பட்டதை கண்ட தினகரன் உச்சகட்டத்துக்கே சென்ற தினகரன் நேற்று ஒரு பொய்யான, உண்மைக்கு மாறான கேள்வியை என்மீது தொடுத்து இருக்கிறார்.

நான் தர்மயுத்தம் நடத்தி கொண்டிருக்கிறேன். எதற்காக… அந்த குடும்பத்திற்குள் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடகூடாது என்பதற்காக. அதை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறேன். ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும், தினகரனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது. தினகரன் இல்லத்தில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு, இனிமேல் இந்த குடும்பத்துடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அமைச்சர்கள் முடிவு எடுத்து  வெளியேறி வந்துவிடுகிறார்கள்.

அதற்கு பின்னால் தினகரன், இந்த ஆட்சி 2 நாளில் கவிழ்ந்துவிடும், 10 நாளில் கவிழுந்துவிடும் என்று விரக்தியின் உச்சகட்டத்துக்கே சென்று அம்மாவால்  உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை கவிழுக்க முற்பட்டார். அதேபோன்று எம்.எல்.ஏக்களை தனது வீட்டுக்கு அழைத்து தனக்குதான் கட்சியில் பலம் இருக்கிறது என்பதை காண்பிக்கிறார். அதன்மூலம் ஆட்சியை கலைத்துவிடுவேன் என்றார். இதை பார்த்த எனது மனது அம்மா உருவாக்கிய கட்சியும், ஆட்சியும் இப்படி போகவேண்டுமா என்ற மனக்கவலையில் இருந்தேன்.

அப்போது நிருபர்கள் என்னிடம்கேட்டபோது, இந்த ஆட்சி என்னால் ஒருபோதும் கவிழாது என்று அன்றைய தினமே நான் சொல்லி இருக்கிறேன்.  உடனடியாக  அமைச்சர்கள் என்னை பார்க்க வந்தார்கள். அவர்களிடம் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் அதற்காக நான் நிபந்தனையற்ற ஆதரவை உங்களுக்கு தருகிறேன். தினகரன் குடும்பத்தால் ஆட்சி கவிழக் கூடாது என்றேன்.

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதுபோல், கட்சியில் தினகரனின் பொய் பிரச்சாரம் பலிக்காது.  ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் தினகரன் முயற்சிக்கிறார்.  தினகரன் மிக தரக்குறைவான அரசியலை செய்துவருகிறார். இனி அவருக்கு வெற்றி இல்லை வருகிற இடைத்தேர்தல்களில் அதிமுகவே வெல்லும்.

தினகரனை சந்தித்தது உண்மைதான். கடந்த ஆண்டு தர்ம யுத்தத்தின்போது, தினகரன் எங்களது பொது நண்பர் மூலம் சந்தித்து பேச பலமுறை தூது அனுப்பினார். அதன் அடிப்படையில்,  அவரை  கடந்தாண்டு ஜூலை 12-ந் தேதி சந்ததித்தேன். அந்த சந்திப்பின்போது, முதல்வராகும் எண்ணத்திலேயே அவர்  என்னிடம் பேசினார்.  அதனால் அவருடன் உடன்படவில்லை.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Share the Article

Read in : English

Exit mobile version