Site icon இன்மதி

அன்புள்ள விவசாயிகளே!மலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே?

அழகேசன் இயற்கை உரம் தயாரிக்கும் முறை

Read in : English

அன்புள்ள விவசாயிகளே! வணக்கம். கடந்த மாதம் நமது பிரதமர் ஒடிஸாவில் ஒரு உரத் தொழிற்சாலையை தொடங்கி வைத்தார். இந்த செய்தி வழக்கம் போல் ஊடகங்களில் சொல்லப்பட்டது. இது மற்றவர்களுக்கு வெறும் செய்தி. ஆனால் விவசாயிகளான நமக்கு சில கேள்விகளை இது எழுப்புகிறது.

ஓர்  உரத் தொழிற்சாலையில் பல கோடிகளை முதலீடு செய்வதற்கான தேவை என்ன? ஏற்கனவே விவசாயம் பல்வேறு பிரச்சனைகளில் மூழ்கியுள்ளது. இதுவரை எந்த அரசும் விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சரியாக கண்டறிந்து அதன் தீர்வுக்கு எதையும் செய்தது இல்லை.

அடுத்து, மிக முக்கியமான கேள்வி நமது மனது எழுகிறது. வளர்ந்த நாடுகள் இயற்கை விவசாயத்தை பின்பற்றும்வேளையில், இந்த உரத் தொழிற்சாலை உண்மையில் நமக்குத் தேவைப்படுகிறதா? இயற்கை உரங்களை சந்தைப்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உருவாகியுள்ளது. அதேவேளையில் வேதி உரங்களால் வளரும் விளைபொருட்களுக்கும் சரியான விலை கிடைக்கிறதா?

விவசாயம் அரசின் கைக்குள் இருப்பதால், விவசாயிகள் இவ்விஷயத்தில் அதிகமாக எதையும் செய்யமுடிவதில்லை. ஆனால் விவசாயிகளின் கட்டுக்குள் இருக்கும் விஷயத்தில் அவர்களால் இயன்றதைச் செய்கிறார்கள். உதாரணமாக மண் வளத்தைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலையும் நுகர்வோரையும் பாதிக்காத வகையில் பாதுகாப்பான விவசாய யுக்திகளை நடைமுறைப்படுத்துதல் போன்ற சில விஷயங்களை விவசாயிகள் செய்து வருகிறார்கள்.

ஏற்கெனவே எனது பத்திகளில்  கூறியதுபோல, விவசாயம் அரசால் கட்டுப்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழில். பொதுவாக இதில் வெளிப்படைத்தன்மை இல்லை.  உள்ளூர் வேளாண் துறையிலும் நாட்டிலுள்ள மற்ற எந்த இடத்திலும் உள்ள வேளாண் துறை வெறும் பெயர் பலகைகள் தாங்கிய இடம். அதில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் நடப்பதில்லை. இந்நிலையில் நாம் என்ன செய்ய முடியும்?

நமது அன்றாடத் தேவைகளுக்காக அரசின் வேளாண்துறையை நாம் சார்ந்துள்ளோமா? அல்லது விவசாய இடுபொருட்களை விற்கும் சில்லரைக் கடைகளை சார்ந்துள்ளோமா? நிச்சயமாக எதுவும் விலையில்லாமல், இலவசமாக  கொடுக்கப்படுவதில்லை. கடைகளில் பணம் கொடுத்து வாங்குகிறோம். அரசு வழங்கும் விதை மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் பெறப் போராடும்  நிலையில் தான் உள்ளோம். ஆனால், முதுநிலைப் பட்டம் பெற்ற சேலம் சங்ககிரியைச் சேர்ந்த விவசாயி அழகேசகனுக்கு  இப்படி எந்த விஷயங்களும் ஒரு பொருட்டேயில்லை.

அவர் தன்னை ‘ஆல் இன் ஆல் அழகேசன்’ என்றே கூறுகிறார்.  அவர் பசு சாணம் மற்றும் கோமியத்திலிருந்து நீர்ம இயற்கை உரத்தை உருவாக்கியுள்ளார். இதனை இயற்கை உர தொழிற்சாலை என்றே கூறுகிறார். இத்தொழிற்சாலை சேலத்தை சுற்றியுள்ள ஊர்களில் பிரபலமடைந்து வருகிறது.

இந்த உரத்தொழிற்சாலை தொடங்க பெரிய முதலீடு எதுவும் தேவைப்படவில்லை. குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் போதுமானது. அப்பணத்தில் இரண்டு பிளாஸ்டிக் பேரல்களும் கேட் வால்வுகளும் வாங்கினால் உரத் தொழிற்சாலை தயார். மற்ற இடுபொருட்களை உள்ளூரிலேயே வாங்கிக்கொள்ளலாம்.

பிளாஸ்டிக் கேட் வால்வுகளை பேரலின் மேல் ஒன்று, கீழே ஒன்று என பொருத்த வேண்டும். பேரலில் நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தை சேர்த்து நீர்விட்டுக் கலந்து நொதிப்பதற்காக அப்படியே ஒருநாள் விட்டுவிட வேண்டும். இதனுடன் வெல்லம், காய்கறி கழிவுகள், அழுகிய பழங்கள் என சேர்க்கலாம். பேரலின் வாயை துணிகொண்டு இறுகச் சுற்றிவிட வேண்டும்.  ஒருவாரம் கழித்து, பாசன நீருடன் கலந்து ஓடும் வகையில் பேரலின் கீழுள்ள குழாயை திறந்துவிட வேண்டும். வாரத்துக்கொருமுறை பேரலில் உள்ள கரைசலை அதிகரிக்க நீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் ஆங்காங்கே நான்கு, ஐந்து  பேரல்களை நிறுவ வேண்டும்.

இந்த உரத்தொழிற்சாலை தொடங்க பெரிய முதலீடு எதுவும் தேவைப்படவில்லை. குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் போதுமானது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நான் இந்த முறையைப் பயன்படுத்தி வருவதால் எனது காய்கறி தோட்டத்துக்கு செலவிடும் இயற்கை உரம் மற்றும் கூலி செலவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. மேலும், இந்த முறையால் மண்ணின் நீர்பிடிப்பு சக்தி அதிகரித்துள்ளதையும் மண்ணிலுள்ள நல்லது செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் கண்கூடாக உணர்ந்துள்ளேன்.

பட்டதாரி விவசாயியான அழகேசன், இம்முறையை உருவாக்கி அதன் பலன்களை அனுபவித்து வருகிறார். இதனை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்; எனது தோட்டத்திலும் பயன்படுத்தி வருகிறேன். இந்த எளிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதை என் நண்பர்களும் வியப்புடன் பார்க்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள விவசாயிகள் .அழகேசனின் தோட்டத்துக்கு நேரில் சென்று வருகின்றனர்.

சரி. நாம் மட்டும் ஏன் மௌனமாக அமர்ந்திருக்க வேண்டும்? இதனை பயன்படுத்தி விட்டவர்கள் மீண்டும் தொடங்கலாம். அதனை மற்ற விவசாயிகளுக்கும் தெரிந்துகொள்ளச் செய்யலாம்.   இயற்கை முறையில் குறைந்த விலையில் கிடைக்கும் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் தான் இப்போதைய தேவை. அதனை அழகேசன் செய்துகாட்டியுள்ளார்.

கோபிச்செட்டிபாளையத்திலுள்ள மைரடா கிருஷி விஞ்ஞான் கேந்திரத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே. அழகேசன், இந்த ஆல் இன் ஆல் அழகேசனை எனக்கு  அறிமுகப்படுத்தினார். இவ்வாறு பல ஆய்வுகளையும் ஆய்வாளர்களைப் பற்றியும்  ஆவணப்படுத்தியுள்ளார் முனைவர் கே.அழகேசன். இந்த கிருஷி விஞ்ஞான் கேந்திரா தமிழகத்திலுள்ள கேந்திரங்களில் சிறந்த ஒன்று.

அழகேசனை போல் இன்னொருவரை பற்றிய தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திப்போம். நன்றி!

பி.அழகேசனை தொடர்புகொள்ள:   alagesanponnusamy@gmail.com, மொபைல்: 9944635117

Share the Article

Read in : English

Exit mobile version