Site icon இன்மதி

சபரிமலைக்கு பெண்களை அழைத்துச் செல்ல ஆர்வம் காட்டாத தமிழக குருசாமிகள்:சர்வேயில் தகவல்

சபரிமலைக்கு வயது வித்தியாசமின்றி  அனைத்து பெண்களையும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, கேரளாவைப் போலவே தமிழகத்திலும் அதற்கு ஆதரவு இருப்பினும், பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பும் இருந்து வருகிறது. 1940 களுக்கு முன்னரே ஐயப்ப வழிபாடு தமிழகத்தில் மெல்ல மெல்ல பிரபலமடைந்த நிலையில், சபரிமலைக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் தமிழக குருசாமிகளில் பலரும் தாங்கள் ஐதீகத்தை தொடர்ந்து கண்டிப்புடன் கடைப்பிடிக்கப் போவதாகவே கூறுகின்றனர். இன்மதி டாட் காம் நடத்தப்பட்ட சர்வேயில் பத்துக்கு ஒன்பது பெயர்கள் பெண்களை தங்களுடன் அழைத்து செல்ல மாட்டோம் என்று கூறினார். இதனிடையே, பெண்ணியவாதிகளைத் தவிர உண்மையான பெண் பக்தர்கள் சபரிமலைக்கு வரமாட்டார்கள் என திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் எ.பத்மகுமார் கூறியுள்ள நிலையில், கேரள  தேவசம்போர்டு அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரன், தீர்ப்பை எதிர்த்து, தேவசம்போர்டு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தால், அரசு அதற்கு தடையாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

18 ஆண்டுகளாக தொடர்ந்து, மாலையிட்டு விரதம் இருந்து மலைக்கு செல்பவர்களையே குருசாமி எனக் கருதப்படுகின்றனர். திருமணம் ஆகாத பிரம்மச்சாரியான ஐயப்பனை தொழுவதற்கு மாதவிடாய் இல்லாத அல்லது நின்று போன பெண்களும், ஆண்களும் செல்வதே சபரிமலைக் கோயிலின் வழிபாட்டு நடைமுறையாக இதுவரை இருந்து வந்தது. இத்தகைய சூழலில், உச்ச நீதிமன்ற உத்தரவு, ஐதீகத்துக்கு மாறாக உள்ளது என தமிழகத்தைச் சேர்ந்த பல குருசாமிகளும் கூறுகின்றனர்.

“ இதனால் புனிதம் கெட்டுவிடும், ஐதீகத்தை கெடுக்காதீர்கள்” – குருசாமி சுப்பிரமணி 

திருப்பூரைச் சேர்ந்த குருசாமியான செல்வராஜ் “பெண்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்று விருப்பப்பட்டால் தனியாக செல்லட்டும். நாங்கள் ஐதீகத்தை விட்டு தர முடியாது. புனிதத்தன்மையையும் கெடுக்க விரும்பவில்லை. காட்டிற்குள் செல்லும்போது காட்டிற்குள் புலிகள் வரும், விலங்குகள் வரும் அந்த வகையிலும் சாத்தியமில்லை” என்று கூறுகிறார். 38 ஆண்களாக தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வருபவர் அவர்.

22 முறைக்கு சபரிமலைக்கு சென்று வந்த சங்கர் இந்த தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் கூறுகிறார். இந்த தீர்ப்பே நியாயமற்றது எனக் கூறும் சண்முகம் “ பெண்களை அழைத்து செல்வது எல்லாம் சரி தான். ஆனால், முஸ்லீம்கள் தங்கள் பள்ளிவாசல்களில் பெண்களை அனுமதிக்க சொல்வார்களா ?” எனக் கேட்கிறார். அதே நேரம் பெண்கள் அவர்களாகவே சபரிமலைக்கு வர விரும்பமாட்டார்கள் எனக் கணிக்கும் 71 வயதான மூத்த குருசாமியான சுப்பிரமணி “ இதனால் புனிதம் கெட்டுவிடும், ஐதீகத்தை கெடுக்காதீர்கள்” எனக் கூறுகிறார்.

பெண்களே இந்த மாதிரியான மாற்றத்திற்கு ஒத்துழைக்கப் போவதில்லை. அப்படியிருக்க, ஏன் இது போன்று உத்தரவிடுகிறார்கள் என லால்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்ற குருசாமி கேள்வி எழுப்புகிறார். திருச்சியை சேர்ந்த சுரேந்தர் என்ற குருசுவாமியோ “ஐயப்பன் ஸ்வாமியே புனிதத்துக்கு பேர் போனவர். அவரைப் பற்றி தெரிந்து தான் இவ்வளவுபக்தர்களின் கூட்டம் வருகிறது. பிறகு எப்படி அந்த புனிதத் தன்மை கெடுமாறு பெண்களோ ஆண்களோ செயல்படுவர். மாட்டார்கள்.” என உறுதிபடக் கூறுகிறார்.

இப்படியிருக்க, திருப்பூரைச் சேர்ந்த ஐயப்ப பக்தரும், வியாபாரியுமான வேல்முருகன் இந்த தீர்ப்பை வரவேற்கிறார். அவர் கூறுகையில் “நான் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். எனது மனைவியோ, மகளோ வழிபடுவதற்காக சபரிமலைக்கு செல்ல விரும்பினால் நிச்சயம் அழைத்துச் செல்வேன்” என உறுதிபடக் கூறுகிறார் அவர்.

“நான் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். எனது மனைவியோ, மகளோ வழிபடுவதற்காக சபரிமலைக்கு செல்ல விரும்பினால் நிச்சயம் அழைத்துச் செல்வேன்” – வியாபாரியான  வேல்முருகன்

சபரிமலைக்கு மாலையிட்டு, விரதம் இருந்து, இருமுடிக் கட்டி செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் எண்ணிக்கையில் தமிழக பக்தர்களின் எண்ணிக்கையே அதிகம். இந்த பக்தர்களில் சாதாரணக் கூலித் தொழிலாளிகள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை அடங்குவர். இவர்கள்  ஒரு குருசாமியின் தலைமையில் விரதம் இருந்து, குறிப்பிட்ட நாளில் இருமுடிக்கட்டி மலைக்கு செல்வது வழக்கம். சபரிமலையைப் பொறுத்தவரை, பக்தர்களை மலைக்கு ஐயப்பனை வழிபட அழைத்துச் செல்வதில் குருசாமிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ள நிலையில், 10 வயதிற்கு மேலும், 50 வயதிற்குட்பட்ட பெண்கள் மாலையிட்டு  விரதமிருந்து செல்ல வேண்டுமானால், பிற பக்தர்களைப் போலவே குருசாமியின் வழிகாட்டுதல்படியே செல்ல வேண்டும்.

தமிழகத்தில் ஐயப்ப பக்தர்கள் பரவியவிதம்

தமிழகத்தைப் பொறுத்தவரை, சபரிமலைக்கு செல்லும் வழக்கம் 1940களுக்கு முன்னரே இருந்ததாகக் கூறுகிறார் நெல்லை மாவட்டம் தாழையூத்தைச் சேர்ந்த 82 வயது முதியவரான ரா.மாரிச்சாமி. “எங்கள் ஊருக்கு கேரளாவின் பத்தனம் திட்டையிலிருந்து ஒரு டெய்லர் வந்தார்.  நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது  அவருடன் மலைக்கு மாலையிட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம்” என தனது சிறு வயதில் சபரிமலைக்கு சென்ற அனுபவங்களைக் கூறும் அவர், கேரளாவைச் சேர்ந்த அந்த டெயிலர் தான் தங்களுக்கு குருசாமியாக இருந்ததாகக் கூறுகிறார். “சுமார் 10 பேர் வரை அந்தக் குழுவில் இருப்போம். அன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து வசதிகள் ஒன்றும் இல்லாத நிலையில் செங்கோட்டை வரை ரயிலில் சென்று, பின்னர் அங்கிருந்து சபரிமலைக்கு நடந்தே சென்று வருவோம்” எனத் தனது நினைவுகளை அசைப் போடுகிறார் அவர்.

1940களிலேயே அதிகளவில் தமிழ் பக்தர்கள் சபரிமலைக்கு பல இடங்களிலுமிருந்தும் வந்து கொண்டிருந்தனர்.

அக்காலத்திலேயே அதிகளவில் தமிழ் பக்தர்கள் சபரிமலைக்கு பல இடங்களிலுமிருந்தும் வந்து கொண்டிருந்தனர். தற்காலத்தில் இருப்பதைப் போல் நெரிசல்கள் இல்லையெனினும், அந்த அடர்ந்த காட்டில் பயணிப்பது அன்று அவ்வளவாக தங்களுக்கு சுலபமாக இருக்கவில்லை எனக் கூறும் மாரிச்சாமி , “ நான் இதுவரை 48 முறை சென்றுள்ளேன். 11 வருடத்திற்கு முன் நான் மலையேறிய போது, அது எனது 7 வயதில் முதன் முதலாக மலையேறிய போது இருந்த வசதிகளை விட நிறைய வசதிகள் ஏற்படுத்தியிருந்தனர்” எனக் கூறுகிறார். ஒரு மூத்த குருசாமியாக மாரிச்சாமி உச்சநீதிமன்ற உத்தரவு ஏற்கத்தகுந்ததாக இல்லை எனக் கூறுகிறார்.

சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சபரிமலை ஐயப்பன் பிரபலமடைந்தது 1950 களில் தான். சபரிமலையில் மூலவர் சிலை புனரமைப்பு 1952 களில் செய்யப்பட்ட போது, அந்த மூலவர் சிலை நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டுச் செல்லப்பட்டது. அந்த வகையில் சென்னை ஜார்ஜ் டவுணில் இருக்கும் கச்சாலீஸ்வரர் திருக்கோயிலுக்கும் கொண்டுவரப்பட்டதாகக் கூறுகிறார் சென்னை ஐயப்ப சேவா சங்கத்தின் தலைவரான என்.பாலகிருஷ்ணன். “அங்கிருந்த ஐயப்ப சாமியை தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வந்தனர். தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன” எனக் கூறும் அவர், மூலவர் சிலை அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட பின், அக்கோயிலில் மூலவர் சிலை வைக்கப்பட்ட அதே இடத்தில் புதிய சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டதாகக் கூறுகிறார். தொடர்ந்துள்ள முயற்சியாக, சென்னை ஐயப்ப சேவா சங்கம் துவக்கப்பட்டு 1957 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சங்கமானது, ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது.

தொடர்ந்து, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகியோருடன் வில்லன் நடிகராக நடித்து வந்த எம்.என். நம்பியார் தீவிர ஐயப்ப பக்தராக இருக்கவே, அவர் மூலம் ஐயப்ப வழிபாடும், சபரிமலைக்கு செல்வதும் தமிழகத்தில் இன்னும் தீவிரமானது.

Share the Article
Exit mobile version