Read in : English
விளிம்பு நிலைக் குடும்பத்தில் பிறந்து பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து படிக்க முடியாமல் தையல் வேலை செய்து கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த ப்ரியா , தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளியில் சேர்ந்து படித்து தற்போது வழக்கறிஞராகியுள்ளார்.

ப்ரியா
தர்மபுரியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த ப்ரியாவின் அப்பா மின்னர், பாத்திரங்களுக்கு பாலீஷ் போடும் வேலை செய்து வந்தார். அவரது அம்மா வசந்தி டெய்லரிங் வேலை. ஒற்றை பல்புடன் கூடிய சிறிய வீடு. சிரமான வாழ்க்கைச் சூழ்நிலை. ஆனாலும் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் அவரது தாய் ஆர்வத்துடன் இருந்தார். அதனால், ப்ரியாவை வள்ளலார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்த்தார். அந்தப் பள்ளியில் அவர் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தார். அதன் பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக ஆறாம் வகுப்பும், ஏழாம் வகுப்பும் அரசுப் பள்ளியில் படித்தார். இதற்கிடையில் அவரது அப்பா, குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அதனால் அவரது குடும்பம் அவரது பாட்டியின் சொந்த ஊரான அரூருக்குக் குடிபெயர்ந்தது.
“அம்மாவுடன் சேர்ந்து துணிகளுக்கு பட்டன் தைத்துக் கொடுக்கும் வேலை செய்து வந்தேன். இதனால், ஓராண்டு காலத்துக்கு பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. இதையடுத்து, குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளியில் கொண்டுபோய் என்னைச் சேர்த்தார்கள்.” – ப்ரியா.
“எங்களது குடும்பம் கஷ்டத்தில் தவித்தது. அம்மா டெய்லரிங் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடந்தது. அதனால் நான் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியவில்லை. அம்மாவுடன் சேர்ந்து துணிகளுக்கு பட்டன் தைத்துக் கொடுக்கும் வேலை செய்து வந்தேன். இதனால், ஓராண்டு காலத்துக்கு பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. இதையடுத்து, குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளியில் கொண்டுபோய் என்னைச் சேர்த்தார்கள். அரூர் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் படித்தேன். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 455 மதிப்பெண்கள் பெற்றேன். குழந்தைத் தொழிலாளராக இருந்து படித்தவர்களில் தர்மபுரி மாவட்டத்திலேயே நான் முதல் இடம் பெற்றேன்” என்று கூறிய ப்ரியா தொடர்ந்து பேசினார்.
“இதையடுத்து, தர்மபுரி மாவட்ட குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் சரவணன் சார் முயற்சியில் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்தேன். உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த நான் பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 960 மதிப்பெண்கள் பெற்றேன். எனக்கு வழக்கறிஞராக வேண்டும் என்பது ஆசை. குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் படிக்க சரவணன் சார் மூலம் கல்வி உதவித் தொகை கிடைத்தது. அதனால், நான் கோவையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பி.ஏ.,பி.எல். படிப்பில் சேர்ந்து படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். தற்போது பார் கவுன்சலிலில் உறுப்பினராக பதிவு செய்துவதற்காக விண்ணப்பித்திருக்கிறேன். படித்து முடித்த பிறகு கடந்த இரண்டு மாத காலமாக அரூரில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் சென்று பயிற்சி பெற்று வருகிறேன். மற்ற நேரங்களில் அம்மாவுடன் டெய்லரிங் வேலையில் உதவி வருகிறேன். அம்மா தையல் தைப்பதுடன், டெய்லரிங் பயிற்சி அளித்து வருகிறார்” என்கிறார் அவர்.
ப்ரியாவைப் போல குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் படித்த அவரது தங்கை ரஷ்யா, கோவை சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.
“நான் எம்எல் படித்து விட்டு, சட்டக் கல்லூரியில் ஆசிரியராக வேண்டும் என்று எனது அம்மா விரும்புகிறார். ஆனால், எனக்கு வழக்கறிஞராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. வழக்கறிஞர்களிடம் கொஞ்ச காலம் பயிற்சி பெற்ற பிறகு தனியே பிராக்டிஸ் செய்ய வேண்டும். இதுவரை கஷ்டப்பட்டு வந்த எங்களது குடும்பத்தை தலைநிமிர வைக்க வேண்டும். அதற்காக சம்பாதிக்க வேண்டும். என்னால் சாதிக்க முடியும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் 24 வயதாகும் ப்ரியா.
ப்ரியாவைப் போல குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் படித்த அவரது தங்கை ரஷ்யா, கோவை சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். அந்த வீட்டில் இரண்டாவது வழக்கறிஞர் உருவாகிறார். அவரது தம்பி பள்ளியில் படித்து வருகிறான். தடைகளைத் தாண்டி படித்து அதன் மூலம் நல்ல வாழ்க்கையை எட்டிப் பிடிக்க முயற்சிக்கிறது இந்த விளிம்பு நிலைக் குடும்பம். கனவு மெய்ப்படும்.
Read in : English