Site icon இன்மதி

18 எம்.எல்.ஏக்கள் வழக்கிற்கு பின்னர் குதிரை பேரங்கள் அரங்கேறலாம்!

Read in : English

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், அவர்கள் அனைவரும் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதை இன்மதி.காம்-ல் ஏற்கனவே சில சாத்தியக்கூறுகளை அலசியிருந்தோம். தொடர்ந்து வேறு சில சாத்தியக்கூறுகளை இங்கு விவாதிப்போம். (ஏற்கனவே வெளியான கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்)

அமுமுக தலைவர் டிடிவி தினகரனுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை, அவருக்கு ஆதரவாக இருக்கும் 18 எம்.எல்.ஏக்களுக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சந்தை விலைதான். எடப்பாடி அரசு, அவர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கு அனைத்துவிதமான செயல்களிலும் ஈடுபடும். இதற்கு தினகரனின் தாய்மாமா திவாகரன் எல்லா வேலைகளையும் முன்னின்று செய்யலாம்.  முதலாவதாக, அதிமுக குறைந்தபட்சம் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டால், எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறலாம். இருந்தபோதும் தினகரன் தமிழகத்தில் மாவட்ட அளவில் தொணடர்களை ஒருங்கிணைத்து நடத்திவரும் கூட்டம் அவர்களுக்கிடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.  அமுமுக நடத்தும் பேரணிகள் அக்கட்சியினரை ஒருங்கிணைக்க உதவுவதுடன், அதிமுகவுக்கு எதிரான போராகவும் தோற்றமளிப்பதால் அமுமுக மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

வழக்கில் வெற்றி பெற்றுவிட்டால் 18 எம்.எல்.ஏக்களாலும்  அமுமுக நடத்தும் எந்த அதிகாரப்பூர்வ கூட்டங்களிலும் பங்குகொள்ள முடியாது.

அதேவேளையில் தினகரன் தனது அணியினரை ஒன்றாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் செய்தாக வேண்டும். அடுத்த சில வாரங்களில் அவரது அணியினர் உள்ளத்தில் எழும் அத்தனை உந்துதல்களையும் அழுத்தங்களையும் மத்திய அரசின் பக்கபலத்துடன்  அதிமுக தரப்பிலிருந்து வரும் தந்திரங்களையும் சமாளிக்கும் சர்வ வல்லமையுள்ளவராக தினகரன் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் அதிமுக எம்.எல்.ஏக்களாக சட்டசபையின் உள்ளும் வெளியேயும் செயல்பட வேண்டும்.

அடுத்துள்ள கிடுக்குப்பிடி என்னவென்றால், வழக்கில் வெற்றி பெற்றுவிட்டால் அவர்களால் அமுமுக நடத்தும் எந்த அதிகாரப்பூர்வ கூட்டங்களிலும் பங்குகொள்ள முடியாது. குறிப்பாக, அமுமுகவின் பொதுக்குழு கூட்டம் அல்லது  சட்டசபை கட்சி  கூட்டம், செயற்குழு கூட்டம், போன்ற கூட்டங்களில் பங்குகொள்ள முடியாது. ஏனெனில், அவ்வாறு பங்குகொண்டால் அடுத்தொரு தகுதிநீக்க வழக்கை அவர்கள் மீது தொடுக்க வாய்ப்பு உண்டாகும்.   அதேபோல் அமுமுகவில் வழங்கப்படும் எந்த பதவியையும் ஏற்க முடியாது. அனைத்து நடைமுறைகளிலும் அவர்கள் ஆளும் அதிமுக எம்.எல்.ஏக்களாகத்தான் தொடர முடியும். இதையும் தினகரன் புத்திசாலித்தனமாக வெல்லலாம். பிறந்தநாள் விழாக்கள், திருமணம், இறுதிச்சடங்குகளில் பங்குபெற்றால் அவர்கள் மீது தகுதிநீக்க வழக்குத் தொடர முடியாது. அதுமட்டுமில்லாமல் சட்டசபையில் அவர்கள் எடப்பாடி தலைமையிலான அதிமுக உறுப்பினர்களாகவே இருப்பர். தினகரனை மறைமுகமாக புகழ்ந்துகொள்ள இயலுமே தவிர அவரைத் தலைவராக அழைக்க முடியாது.

அதற்காக அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டது என்று கருத முடியாது. சபாநாயகர் அனுமதி தரும்பட்சத்தில், சட்டசபையில்  அவர்கள் ஆளும் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அதிமுக அரசின் முடிவுகளை விமர்சிக்கலாம். ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூட கூறலாம். அதிமுக சட்டமன்ற கொறடாவின் உத்தரவை மீறி ஆளும் கட்சி கொண்டு வரும் தீர்மானங்களில் எதிர்த்து வாக்களிக்காமல் இருக்கும் வரை, இந்த 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களைக் காரணம் காட்டி அவர்களை தகுதி இழக்கச் செய்து விட முடியாது. மொத்தத்தில், கட்சிக்கு உள்ளே இருந்தபடியே ஆளும் கட்சிக்கும், அரசுக்கும் குடைச்சலை ஏற்படுத்த முடியும்.

ஒருவேளை, இந்த 18 எம்.எல்.ஏக்கள் மீதும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அதிமுக தலைமை வெளியேற்றினால் அவர்கள் எம்.எல்.ஏ பதவி தகுதி இழக்கமாட்டார்கள்.சட்டசபையை பொறுத்த வரை அவர்கள் சுயேட்சைகளாக கருதப்படுவார்கள். சட்டமன்ற உறுப்பினர்களாக அவர்களால் தொடர்ந்து சுதந்திரமாக உலா வர முடியும். இந்த சுயேச்சை உறுப்பினர்கள், அமுமுக மற்றும் அல்ல, எந்த கட்சியிலும் சேர முடியாது. அப்படி சேர்ந்தால்  , அவர்கள் துகுதி நீக்கம் செய்யப்படலாம்.  ஆனால் வெளியிலிருந்து  அமுமுக கட்சியை ஆதரிக்கலாம். மேலும்,அதிமுக கொறடா கட்டுப்பாட்டிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்.  சட்டசபையில் அதிமுக அரசின் திட்டங்களுக்கு எதிராகவாக்களிக்கலாம், நம்பிக்கை தீரமானத்தில், அரசிற்கு எதிராக வாக்களிக்கலாம். அதிமுக முதல்வர் எடப்பாடி, சட்டசபையில் பெரும்பான்மை இழந்து பதவி விலக நேரிடலாம். எனவே முதல்வரின் ஆலோசகர்கள்  நிச்சயமாக இந்த 18 எம்.எல்.ஏக்களை அதிமுக கட்சியிலிருந்து வெளியேற்றாமல், கட்சி குள்ளேயே அவர்களை வைத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்ற ஆலோசனையை வழங்குவார்கள். இது ஒரு கசப்பான மருந்தாக முதல்வர் ஏற்றுக்கொண்டால்தான் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளமுடியும். உணவை மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், ஒரு நிலையை அதிமுக அனுபவிக்க நேரிடும். நாள் அடைவில், இந்த 18 எம்.எல்.ஏக்களை எதிர் நிலையிலிருந்து ஆதரவு நிலைக்கு கொண்டு வர முழற்சிகள் எடுக்கலாம். இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு காலம் தான் தீர்வை காண முடியும்.

அதுவரை இந்த எம்.எல்.ஏக்களை சகித்துக்கொள்வது தவிர, அதிமுக விற்கு வேறு வழியில்லை.  கட்சிக்கு உள்ளே இருந்தபடியே ஆளும்கட்சிக்கும், அரசுக்கும் குடைச்சலை,  ஏற்படுத்தினாலும், அதை அதிமுகவினர் தாங்கி கொண்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

கட்சிக்கு உள்ளே இருந்தபடியே ஆளும் கட்சிக்கும், அரசுக்கும் குடைச்சலை ஏற்படுத்த முடியும்.

18 எம்.எல்.ஏக்களை பொறுத்த வரை,  அதிமுக  கட்சித்  தலைமை  அவர்களை  வெளியேற்றாத பட்சத்தில், அதிமுக உறுப்பினர்களாக தொடரும் நாடகத்தை அடுத்த  சட்டசபை தேர்தல் வரும் வரை நிகழ்த்த வேண்டும் அல்லது எடப்பாடி அணியிலிருந்து  தினகரன் அணிக்கு மேலும் பல எம்.எல்.ஏக்கள்  மாறுவார்கள்  என்ற  நம்பிக்கையுடன்  செயல்பட்டால்,  தினகரன்  அணியில்  30  அல்லது  40 எம்.எல்.ஏக்கள் சேர்ந்துவிட்டால்,  எடப்பாடி  பழனிச்சாமியை  முதல்வர்  பதவியிலிருந்து  விலகக்கோரி  அதிமுகவுக்கு  அழுத்தம் தரலாம். தாங்கள் விரும்பும் ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்  என்று வற்புறுத்தலாம்.

எடப்பாடி அணிதினகரனுடன் சமரசத்தில்  ஈடுபடுமா?

அரசு கவிழும் என்கிற ஆபத்து வரும்போது அதிமுகவினரின் மோதல் போக்கு மாறி சமரசத்துக்கு விழையலாம். இந்த சமரச நகர்த்தல்களை சிலர் விமர்சித்தாலும் கட்சியில், பலர், ஒ.பன்னீர்செல்வம் அணியினரால் தான் இந்த தடை ஏற்பட்டது  என கூறலாம். ஒபிஎஸ் 10-12   எம்.எல்.ஏக்களின்  ஆதரவுடன் இருக்கும் நிலையில், கட்சியில்  உள்ள  சில தலைவர்கள் தினகரன் அணியுடன்  ஏற்படும் சமரசத்தை  ஒத்துக்கொள்ள  வேண்டும்  என  அழுத்தம்  கொடுக்கலாம்.   இந்த  அழுத்தம் தொடர்ந்தால், பெரும்பாலான  எம்.எல்.ஏக்கள்   தங்கள்         எம்.எல்.ஏ பதவியை காப்பாற்றிக் கொள்ள சமரசத்தையே விரும்புவார்கள். காரணம் தற்போது அமைச்சர்கள் மேல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகி வரும் நிலையில்   அவர்கள் மக்களை எதிர்நோக்கும்  நிலையில் இல்லை.  எப்படியாயினும், வரும் அக்டோபரில் அதிமுகவில்  மிகப் பெரிய அளவில் குதிரைபேரம் நடக்கும் என்பது மட்டும் உறுதி.

Share the Article

Read in : English

Exit mobile version