Site icon இன்மதி

பூச்சிக் கொல்லிகளை விவசாயிகளே தயாரித்தால் கடன் நெருங்காது!

Read in : English

பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவதான் விவசாயத்திலுள்ள முக்கிய பிரச்சனை. விவசாயிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று, கடைகளில் இருந்து பூச்சி கொல்லி மருந்துகளை வாங்கித் தெளிப்பது. இரண்டு, தானாக மருந்துகளைத் தயாரித்துப் பயன்படுத்துவது. முதல் வாய்ப்பு மிகவும் எளிமையானது, ஆனால் விவசாயிகளுக்கு அதிகம் செலவு வைக்கக் கூடியது. இரண்டாவது கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதற்கு அதிக உழைப்பும் பொறுமையும் அவசியம்.

விவசாயிகள் தாங்களே பூச்சிக் கொல்லி மருந்துகளையும் இடுபொருட்களையும் உற்பத்தி செய்யும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கடைகளில் இருந்து பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதற்கு பதில் தாங்களே தயாரித்து பயன்படுத்தினால் பணத்தை சேமிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

விவசாயிகள் இடுபொருட்களை, குறிப்பாக உயிரி இடுபொருட்களை, தாங்களே தயாரித்து பயன்படுத்தினால், 70 சதவீத செலவுகள் குறையும்.

இயற்கை இடுபொருட்களைத் தயாரிப்பது உள்ளூர் விவசாயிகளுக்கு மிகவும் தெரிந்த விஷயம்தான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழிக்கோட்டுப்பொத்தை என்ற சிறு கிராமத்தில் வாழும் விவசாயிகள் பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த பாரம்பரிய நோய்க்கொல்லிகளை தாங்களே தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர்.

‘’இந்த இடுபொருட்கள் பயிரைத் தாக்கும் நோய்களைக்  தற்காலிகமாகக் கட்டுப்படுத்தும். அத்துடன், விவசாயிகள் வேதி பூச்சிக் கொல்லி மருந்துகளை சார்ந்திருப்பதிலிருந்து வெளியே வர உதவும். அதன் மூலம் விவசாயிகள் கடனில் மூழ்குவதிலிருந்து தப்பிக்கலாம்’’ என்கிறார் கன்னியாகுமரியிலுள்ள  விவேகானந்தா கேந்திரா- இயற்கை வள மேம்பாட்டுத் திட்டத்தின் செயலாளர் வாசுதேவ்.

இயற்கை இடுபொருட்களைத் தயாரிப்பது உள்ளூர் விவசாயிகளுக்கு மிகவும் தெரிந்த விஷயம்தான். காரணம் அதனை தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருட்கள் அனைத்தும் உள்ளூரிலிலேயே கிடைக்கும். இதை செய்வதற்கு மிக அதிகமான பொருட்செலவும் ஏற்படாது. அத்துடன், பயன்மிக்கதாக அவை இருக்கும்.

எடுத்துக்காட்டாக, நோய்களைக் கட்டுப்படுத்தும் கரைசல் பப்பாளி இலையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஒன்றிரண்டு கிலோ பப்பாளி இலைகளை தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவிட வேண்டும். பின்பு அதனை மையாக அரைக்க வேண்டும். அரைத்த விழுதை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துச் செடிகளுக்குத் தெளிக்க வேண்டும்.

அடுத்தது, புங்கக் கரைசல். இதனை இரண்டு வழிமுறைகளில் தயாரிக்கலாம். முதலாவது வழிமுறை. ஒன்று அல்லது இரண்டு கிலோ புங்க இலைகளை ஒரு நாள் முழுவதும் நீரில் ஊறவைத்து, அதனை மையாக அரைத்து 6 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டாவது வழிமுறை, 50 கிராம் புங்க விதைகளை பொடியாக்கி அதனை ஓர் இரவு முழுதும் நீரில் ஊறவைக்கவும். பிறகு அதனை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துத் தெளிக்கலாம்.

துளசி மற்றும் வேம்பு இலைகளும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலிருந்து பயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது. சுமார் 100 கிராம் துளசி அல்லது வேம்பு இலைகளை ஒரு நாள் முழுவது நீரில் ஊறவைக்க வேண்டும். அடுத்த நாள் அதனை அரைத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

கிராமங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமாகத் தெரிந்த முறை, மூன்று இலை கரைசல். எருக்கு, வேம்பு மற்றும் நொச்சி இலைகளை மூன்றிலிருந்து நான்கு கிலோ அளவுக்கு எடுத்து, 5 லிட்டர் நாட்டு மாட்டின் கோமியத்தில் 3 லிட்டர் தண்ணீர் கலந்து  அதில் இலைகளைப் போட்டும் ஓரிரவு ஊறவைக்க வேண்டும். அடுத்த நாள் அக்கரைசலை வடிகட்டி, 60 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பொதுவாக இந்தக் கரைசல்களை சுத்தமான பருத்தி துணியில் வடிகட்டி, ஒரு லிட்டருக்கு 2 கிராம் என்றளவில் காதி சோப்பு  கரைசலை சேர்த்து கலக்கி பின்பு தெளிக்க வேண்டும். காதி சோப்பு கிடைக்கவில்லை என்றால் வேப்பெண்ணையைப் பயன்படுத்தலாம்.

விவசாயிகள் ஒரு விஷயத்தை நினைவில்கொள்ள வேண்டும். மேலே கூறப்பட்டுள்ள இலை கரைசல்கள் அனைத்தும் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு அவை நல்ல பலன்களைக் கொடுத்துள்ளது. இவை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை அல்ல. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையினருக்கு இந்த பாரம்பரிய அறிவு வாய்மொழியாக சொல்லப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை நன்கு பயனளிக்கக் கூடியவை என்பதை அவற்றை பயன்படுத்துபவர்கள் தங்களது அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். மிழ்நாட்டில் விளையும் அனைத்து பயிர்களையும் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த இவை உதவும்.

கூடுதல் விவரங்களுக்கு: .வாசுதேவ், செயலாளர், விவேகானந்தா கேந்திரா, இயற்கை வள மேம்பாட்டுத் திட்டம், விவேகானந்தபுரம், கன்னியாகுமரி 629 702, தமிழ்நாடு, இந்தியா.

இமெயில்: vknardep@gmail.com, தொலைபேசி: 04652 246296 ,  04652 -247126.

Share the Article

Read in : English

Exit mobile version