Site icon இன்மதி

திமுக அரசின் செயல்பாட்டால் மனம் வருந்திய ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகள்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக

Read in : English

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 2011ஆம் ஆண்டு தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனையிலிருந்து கருணை அளிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றிய அப்போதைய திமுக அரசு மீதான தங்கள் ஏமாற்றத்தை இம்மூவரும் வெளிப்படுத்தினர்.

2011ஆம் ஆண்டில் அவர்களுடனான நேர்காணலில் நளினிக்கு திமுக அரசு அளித்த கருணை குறித்து நினைவு கூர்ந்தனர். அப்போது, ராஜிவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தி அனுப்பிய கடிதம் குறித்து சுட்டிக்காட்டிய அம்மூவரும், அந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே நளினிக்கு மட்டும் கருணை அடிப்படையில் தண்டனை குறைத்த திமுக, மற்ற மூவரையும் அலட்சியம் செய்துவிட்டது என்று கூறினர்.

இதுகுறித்து 2011-ல் பேரறிவாளன் கூறுகையில், ‘’சோனியா காந்தி எங்கள் நால்வருக்கும் அதாவது சாந்தன், முருகன், நளினி மற்றும் எனக்குமாகத்தான் கருணை காட்ட பரிந்துரை செய்தார். ஆனால் அப்போதைய திமுக அரசு நளினிக்கு மட்டும் தண்டனையைக் குறைத்து எங்கள் மூவரையும் கண்டுகொள்ளாமல் விட்டது” என்றார் சோகமாக.

இதே கருத்தைக் கூறிய சாந்தன், ’’நளினிக்கு தண்டனையைக் குறைத்தது குறித்து நாங்கள் தவறான விமர்சனங்களைக் கூறவில்லை. அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை. மனதார வரவேற்கிறோம். இருந்தபோதும் அதே கருணை எங்களுக்கு ஏன் நிராகரிக்கப்பட்டது எனத் தான் யோசிக்கிறோம்.

எல்லாருக்கும் தெரியும் நங்கள் குற்றமற்றவர்கள் என்று. இந்த வழக்கில் நளினிக்கு எதிராக பலமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, அவரை ஏ1 குற்றவாளி என்று சொன்னார்கள். ஆனால், எங்களுக்கு எதிராக தூக்குத் தண்டனை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அப்போதைய திமுக அரசு எங்களுக்கும் கருணை வழங்யிருக்க வேண்டுமல்லவா? எங்களை அவ்வரசு நிராகரித்தது குறித்து நாங்கள் பெரும் கவலையடைந்தோம்” என்றார் வேதனையோடு.

அவ்விருவரின் சோகத்தையும் வேதனையையும் தன் வேதனையாக வெளிப்படுத்திய முருகன், இதுகுறித்து கூறும்போது,’’ நளினிக்கு கருணை வழங்கிய அவர்கள் எங்களையும் சமமாக பாவித்து அதே கருணை அடிப்படையில் தண்டனையை குறைத்திருக்க வேண்டும். நளினி என்னுடைய மனைவி. அவருக்கு தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், சோனியா காந்தி எங்கள் நால்வருக்கும் அக்கடிதத்தை எழுதினார். திமுக அரசு எங்களுக்கும் தண்டனையைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏன் அவ்வாறு செய்யத் தவறினார்கள் என்பதை தான் எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை’’ என்றார் முருகன்.

சோனியா காந்தியின் கடிதம் குறித்தும் அக்கடிதம் குறித்து பலவிதமான சந்தேகங்களை தமிழக தலைவர்கள் எழுப்பியது குறித்தும் முருகனிடம் கேட்டதற்கு,’’ அந்தக் கடிதத்தின் நோக்கம் குறித்து நாங்கள் விவாதிக்க விரும்பவில்லை. உண்மை என்னவெனில், எங்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என சோனியா காந்தி அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி, நளினியை சிறையில் சந்தித்தார். அதுமட்டுமில்லாமல் எங்கள் மீது கருணை காட்டக் கூறி சோனியாவும் கடிதம் எழுதியிருந்தார். எங்கள் கேள்வி மிகவும் எளிமையானதுதான். அக்கடிதத்தை சுட்டிக்காட்டி திமுக அரசு எங்கள் மீதான தண்டனையை குறைத்திருக்கலாம். ஆனால் திமுக அரசு அவ்வாறு செய்யாதது எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் வலியையும் தந்தது’’ என்றார் முருகன்.

‘’இன்று, அவர்கள் எங்கள் மீது கருணை காட்டப்பட வேண்டும் என அறிக்கை வெளியிடுகிறார்கள். அதேவேளையில் சோனியா காந்தியின் கடிதத்தால் எங்கள் தண்டனையை குறைக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வந்தபோது அதை செய்யத் தவறினார்கள்’’ என்று 2011-ல் பேரறிவாளன் கூறினார்.

2014ஆம் ஆண்டில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது, உச்சநீதிமன்றம் அம்மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

இக்கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Share the Article

Read in : English

Exit mobile version