Site icon இன்மதி

அன்புள்ள விவசாயிகளே! விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி?

Read in : English

அன்புள்ள விவசாயிகளே! ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது முதலும் முற்றிலுமாக விவசாயிகளின் நலன் சார்ந்ததாகவே அமையும். விவசாயம் செழித்தால் தான் மற்ற தொழில்துறைகள் மலரும். விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு, தேசம் வளர்ச்சியடைய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நோக்கம், விவசாயிகளுக்கு வலுவூட்டுவதாக இருக்க வேண்டும். ஏனெனில், விவசாயம் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

50 ஆண்டுகளுக்கு முந்தைய வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது,   அறிவியல் முன்னேற்றம், மேம்பட்ட  உற்பத்தி, உற்பத்தியில் தன்னிறைவு என சந்தேகமின்றி முன்னேற்றமடைந்துள்ளோம். அதேவேளையில், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியுள்ளன. விவசாய விளைபொருட்களை  வந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை, உழவர்களின் தற்கொலை போன்றவைகளும் தலைப்புச் செய்திகளாக உருவெடுத்துள்ளன. இந்த கள யதார்த்தத்தை அரசு கருத்தில் கொண்டு அதனை எதிர் கொள்ள வேண்டும்; பொருட்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது.

‘விவசாயிகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்’ என ஒரு நகரவாசியிடம், கேட்டால், `நமது நாட்டில் வாழும் விவசாயிகள் துரதிஷ்டசாலிகள்; அவர்களின் எதிர்காலம் சூன்யமாக உள்ளது’ என்றுதான் அவர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்.

விவசாயிகளின் இந்த நிலையை மாற்ற உங்களிடம் எதாவது யோசனைகளோ திட்டங்களோ இருக்கிறதா?’ என்று அவர்களிடம் கேட்டால், அவர்களில் பெரும்பாலானோர் ‘இல்லை’ என்ற பதிலைத்தான் வைத்திருப்பார்கள். குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டில் அரிசி, பருப்பு அல்லது காய்கறி விலை பத்து ருபாய் கூட அதிகரித்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களுடைய கவலை. அவர்களது உணவுக்காகத்தான் விவசாயிகள் கஷ்டப்பட்டு  பயிர் செய்கிறார்கள் என்பதை அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாது.

நீங்கள் இந்தப்  பத்தியை வாசித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில்தான், நோயுற்று அழிந்துகொண்டிருக்கும் விவசாயத்தை மீட்டிருவாக்கம் செய்ய அரசாங்கம் செய்ய வேண்டியவை குறித்து நான் அறிக்கை ஒன்றினை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நாடு முழுவதும் இயற்கை வேளாண்மைக்கு அரசு அதிக முக்கியத்துவத்தை அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; இதனால் விவசாயி மற்றும் நுகர்வோர் என இரு தரப்புக்கும் நன்மை விளையும் என்று அந்த அறிக்கையில் யோசனை தெரிவித்துள்ளேன். இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளும் எந்த ஒரு விவசாயியும் கடனில் மூழ்கியதில்லை என்பதை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன். உங்களுக்குத் தெரிந்தவர்களின் மூலம் இது உண்மையா,  இல்லையா என கேட்டுப் பாருங்கள்.  இது எப்படி சாத்தியமாயிற்று?

இதற்குக் காரணம் மிக எளிமையானதுதான். அதிகமான வேதி உரங்கள் பயன்பாடு, கட்டுப்பாடற்ற பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு ஆகியவை மண்ணின் வளத்தை மட்டுமில்லாது மனிதர்களின் வளத்தையும் சேர்த்துப் பறித்துக்கொண்டது. இதனை எந்தவொரு மருத்துவரும் ஒத்துக்கொள்வார்கள். நீங்கள் வேண்டுமானால் உற்றுக் கவனியுங்கள். வேதி உரங்களை உற்பத்தி செய்பவர் நன்றாக வாழ்கிறார். கலப்பின விதைகளை விற்பவர்கள் அமோகமாக வாழ்கிறார்கள். விவசாய கருவிகளை விற்பனை செய்பவர்களின் வாழ்வு வளமாகத்தான் இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் விவசாயின் அவலமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியலாம்.

இது முரணாக இருக்கிறதல்லவா? விவசாயிகள் கடன் மற்றும் வேதி உரங்களை சார்ந்திருக்கும் இந்த நச்சு வளையத்திலிருந்து  வெளியேறுவது எப்படி? இதற்கான பதில் எளிது. நமது பயிர்களுக்குத் தேவைப்படும் உரத்தை நாமே தயாரித்துக்கொள்ள ஆரம்பிப்போம். இப்படி செய்வதன் மூலம் 70 சதவீத செலவைக் குறைக்க முடியும். அதோடு நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய முடியும்.

நாம் பயன்படுத்தும் விவசாய இடுபொருட்களை நாமே தயாரித்து அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நண்பர்களே! நான் முன்பே பலமுறை கூறியது போல நான் உங்களிடம் ஒரு விவசாயியாகத்தான் பேசுகிறேன்; பத்திரிகையாளராக அல்ல.  பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் குடும்பத்திலிருந்து வந்தவன் என்கிற முறையில், நாம் கடனாளியாவதற்கு முழுமுதல் காரணம், சில்லறை கடைகளில் உரங்களை வாங்குவதுதான் என்பதை  உணர்ந்துள்ளேன். இப்படி மற்றவர்களைச் சார்ந்திருக்கும் போக்கை நாம் கட்டுக்குள் வைத்திருந்தாலே நம்மை அதள பாதளத்துக்கு இழுத்துச் செல்லும் கடன் சுமையைக் குறைக்க முடியும். அத்துடன், அந்த மன அழுத்தத்திலிருந்தும் மீண்டு வர முடியும்.

ஒருவனுக்கு மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்கும் வழிமுறையை கற்பித்தால் அவனது வாழ்வை அவனே அமைத்துக்கொள்வான் என்றொரு  பழமொழிக்கு உண்டு. அதேபோல், நாம் பயன்படுத்தும் விவசாய இடுபொருட்களை நாமே தயாரித்து அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தயவுசெய்து நமக்காக இதை இன்னொரு நபர் வந்து சொல்வார் என்றோ இடுபொருட்களை செய்து தருவார்கள் என்றோ எதிர்பார்க்காதீர்கள். நீங்களே  செய்ய வேண்டும். அதற்கான விஷயங்களையும் தகவல்களையும் நீங்களே தான் தேடிக் கண்டடைய வேண்டும்.

இணையதளங்களில் தேடுங்கள். தனிப்படட் சந்திப்புகள், கிருஷி விஞ்ஞான் கேந்திராவைச் சேர்ந்தவர்களையோ விவசாயத்துறையினரையோ சந்தித்துப் பேசுங்கள். இயற்கை விவசாயிகளை சந்தித்து, உங்களது சந்தேகங்களைக் கேட்டு தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இதற்காகக் காத்திருக்க வேண்டாம். ஏற்கெனவே கடந்த 50 ஆண்டுகளில் நாம் நிறைய இழந்துவிட்டோம். இனியும் காலத்தை வீணடிக்க வேண்டாம்.

மீண்டும் சந்திக்கும் வரை நன்றி. இந்த நாட்டுக்காக உழைக்கும் விவசாயிகள் என்பதில் பெருமை கொள்வோம்.

Share the Article

Read in : English

Exit mobile version