Site icon இன்மதி

தமிழக ஆளுநர் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் கையில் ஏழுபேர் விடுதலை!

பரோலில் நளினி

Read in : English

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜிவ்காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட 7 பேரை  விடுதலை  செய்யக் கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வாரா, மாட்டாரா? என்கிற இந்த கேள்வி தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. உச்சநீதிமன்றம் செப்டம்பர் 6, (இன்று) ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின்  அரிய இவ்வார்த்தைகள், எழுவரின் விடுதலைக்கு வழிவகுப்பதாக இருந்தாலும் சிறைக் கதவுகள் அத்தனை எளிதில் திறப்பதாக தெரியவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு 2014ல் எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு தமிழக அரசு துணை நிற்பதாகத் தோன்றினாலும்,  மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து எழுவர் விடுதலையை எதிர்த்து வருகிறது.

பேரறிவாளன், ராஜிவ் காந்தி

இது தொடர்பாக, இன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின்படி, தமிழக அமைச்சரவை கருணை மனுவை ஏற்றுக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை இயற்றி அதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பலாம்.

மத்திய உள்துறை அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் தங்கள் நிலைப்பாட்டில் தொடர்ந்து நிற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.காரணம் கடந்த ஆகஸ்டு 10ஆம்தேதி, உச்சநீதிமன்றத்தில்  ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது  என்பது ‘’ஆபத்தான முன்னுதாரணம் ஆகிவிடும்’’ என்றும் ‘’சர்வதேச தீவிரவாதத்தை கிளைத்தெழவைக்கும்’’ எனவும் வாதிட்டனர். மேலும், இவ்வழக்கு என்பது முன்னாள் பிரதமரை சர்வதேச தீவிரவாத அமைப்பு திட்டமிட்டு கொடூரமாக கொலை செய்த விவகாரம் என்றும் அவ்விரு அமைச்சகங்களும் தெரிவித்து எழுவரின் விடுதலையையும் எதிர்த்தது.

இப்போதும் இவ்விவகாரத்தில் உள்துறை மற்றும் சட்ட அமைச்சகம் அதே நிலைப்பாட்டை தொடர்ந்தால், தமிழக கவர்னர் மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து விரைவில் தீர்வு கிடைக்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

இப்போது அதிக சிக்கல் கவர்னருக்குத்தான் உண்டாக்கியுள்ளது. கவர்னர் மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களிடம் கருத்து கேட்பாரா? அல்லது, தமிழக அமைச்சரவை எடுக்கவுள்ள தீர்மானத்துக்கு செவிசாய்ப்பாரா? ஒரு மாநில கவர்னராக அவர் அமைச்சரவை எடுக்கும் தீர்மானத்துக்கு பொதுவாக ஒப்புதல் வழங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமில்லாது மதிமுக, தேமுதிக, விசிக,  பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் ஆகியோரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.  எழுவரையும் உடனடியாக  விடுவிக்க, செயலில் இறங்க மாநில அரசுக்கு பல்வேறு கட்சிகளும் பல்முனை அழுத்தத்தைக் கொடுக்கும் என்பது திண்ணம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் இயற்றி அதனை கவர்னருக்கு அனுப்பி உடனடியாக ஏழுபேரையும் விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என கோரியுள்ளார். மதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இவ்விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

உச்சநீதிமன்றம், தமிழக அரசு கருணை மனு மீது முடிவு செய்யலாம் என தீர்ப்பளித்த பிறகும், அடுத்தகட்ட  நடவடிக்கைகள் குறித்து தமிழக அமைச்சர்கள் மிக கவனமாக பேசி வருகிறார்கள்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில் சட்டப் பிரச்சனைகள் குறித்து ஆராய வேண்டும் எனக் கூறியுள்ளது, பாஜக அரசு ஏழுபேரையும் விடுதலை செய்வதை விரும்பவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியோ, சட்டம் அதன் முடிவுகளை தீர்மானித்துக்கொள்ளலாம் என்றும், அக்கட்சியின் தேசிய தலைவர்,’காங்கிரஸ் குற்றவாளிகளை தண்டிக்க விரும்பவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் திருநாவுக்கரசர் சட்ட நிபுணர்கள் சரியான முடிவை எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் இருப்பதாகவும், தமிழக காங்கிரஸ் ஏழுபேரையும் தண்டிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தமிழக அரசு மத்திய அரசுக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்குமிடையில் சிக்கிக் கொண்டுள்ளது. காரணம் மத்திய அரசு தீவிரவாதத்துக்கு சிறு சலுகையும் காட்ட தயாராக இல்லை. இன்னொரு பக்கம், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அதிமுக அரசுக்கு ஏழுபேரையும் உடனடியாக  விடுதலை செய்ய  வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றன.

மேலும், இவ்விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது. உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் பேரறிவாளனின் கருணை மனு மீது மட்டும் முடிவெடுக்கலாம் எனக் கூறியுள்ளதா அல்லது ஏழு பேருக்குமே இத்தீர்ப்பு பொருந்துமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. தேசிய செய்தி நிறுவனம் ஒன்று , ‘உச்சநீதிமன்றம் பேரறிவாளனனின் கருணை மனு மீது முடிவெடுக்க தமிழக அரசைக்  கேட்டுக்கொண்டுள்ளது’ என தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெளிவைப் பெற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் கிடைக்கும் வரை போதிய கால அவகாசத்தை  தமிழக அரசு கோரி அதன் பின்னர் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம்.

Share the Article

Read in : English

Exit mobile version