Site icon இன்மதி

திமுகவை இழக்கிறார் அழகிரி, தெற்கின் பீமனை இழக்கிறது திமுக!

செப்.5 இல் கலைஞர் நினைவிடத்தில் தனது மகன் தயாநிதி மற்றும் மகள் கயல்விழியுடன் முக.அழகிரி

Read in : English

மு.கருணாநிதியின் மூத்த மகனும் திமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டவருமான மு.க.அழகிரி சென்னையில் செப்டம்பர் 5ஆம் தேதி(இன்று)நடத்திய அமைதிப் பேரணி கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்தது.காரணம் இந்த பேரணியில் குறிப்பிடத்தக்க எந்த தலைவரும் கலந்துகொள்ளவில்லை. இது, மு.க.ஸ்டாலினின் பின்னே அணிவகுத்து நிற்கும் கட்சியினரின் ஒற்றுமையைக் காட்டுகிறது என்றே அமர்சியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேவேளையில் மு.க.அழகிரியின் இந்த இருட்டடிப்பு, தென்மாவட்டங்களில் ஒரு வலிமைமிக்க தலைவரை இழந்து நிற்கும் அசாதாரண நிலையையும் உருவாக்கியுள்ளது.

மதுரையிலிருந்து  தொடங்கி, தமிழகத்தின் தெற்கு பகுதியிலுள்ள  10 மாவட்டங்களை அடக்கியாண்ட, திமுகவின் தென் மாவட்ட அமைப்பாளர் என  அதிகாரத்திலிருந்த அழகிரியின் இந்த வீழ்ச்சியை கண்டு திமுக மகிழ்வுற்றாலும் இனி அப்பகுதியில் திமுகவுக்கு நட்சத்திர அந்துஸ்துள்ள ஒரு தலைவர் இல்லை என்பது குறையே. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓட்டு வங்கியை பாதிக்கும் என்பது கண்கூடு. இத்தனைக்கும்  ஒரு எம்.எல்.ஏவோ அல்லது மாவட்ட செயலாளரோ அழகிரியை ஆதரிக்காத நிலையிலும் தென்மாவட்டங்களில் அழகிரியின் கை ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. கருணாநிதிக்கு டெல்டா மவட்டங்களில் மிகுந்த செல்வாக்கு இருந்தது.காரணம் அவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அம்மண்ணின் மைந்தர் என்ற பலம் இருந்தது. தஞ்சை பகுதிக்கென்று இருக்கும் கலாச்சார சிறப்புகளான இசை, இலக்கியம், நடனம் என அனைத்தையும் உள்வாங்கிய கருணாநிதிக்கு   சோழமன்னர், கலைகளின் நேசர் என்ற பிம்பம் உருவானது. கலைகளில் சிறந்து விளங்கிய கருணாநிதியைப் போல அழகிரி இல்லை என்னும்போதும் அவர் தன்னை மதுரை மண்ணின் மகன் என்ற பிம்பத்தை முன்னிறுத்தினார். அழகிரியின் தொண்டர்களில் சிலர் அவரை  ‘மதுரை வீரன்’ என்றும் அழைப்பதும் உண்டு.

ஒரு காலகட்டத்தில் ஸ்டாலினை விட, அழகிரியைப் பிடித்தால் காரியங்கள் நிறைவேறும் என்ற சூழ்நிலையும் இருந்தது.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்த போது அழகிரி, மத்திய அமைச்சரக பதவி வகித்தாலும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியை கையாளத் தெரியாத காரணத்தால் நாடாளுமன்றத்தில் சிறந்த மந்திரி என அவரால் தன்னை நிரூபிக்க முடியாமல் தடுமாறினார். அதேவேளையில் திமுக ஆட்சி காலத்தில் தென் மாவட்ட அமைப்பாளராக இருந்த போது, அவர் கேள்விகேட்க முடியாத தலைவராகவே வலம் வந்தார்.  மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்த காலகட்டங்களில் மதுரைக்கு சென்றபோது  அழகிரியின் ஆதரவாளர்கள் ஸ்டாலினை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினர். அந்த அளவுக்கு அழகிரியின் பிடிமானம் கட்சியின் மீது இருந்தது.

ஒரு காலகட்டத்தில் ஸ்டாலினை விட, அழகிரியைப் பிடித்தால் காரியங்கள் நிறைவேறும் என்ற சூழ்நிலையும் இருந்தது. இதனால் மதுரை மற்றொரு அதிகாரவட்டமாக மாறி, மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் அழகிரிக்கு வணங்கி நடந்ததோடு எந்த கேள்வியுமின்றி அவர் சொல்வதைச் செய்தனர்.  உடனடியாக முடிவெடுக்கும் திறன்(அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொலைபேசியில் பேசிய காரியங்களை முடிப்பார்) செய்யும் வேலைகளுக்கு உடனே பரிசு என அனைத்தும் அழகிரியின் அதிகாரத்தைக் காட்டியது. இது கட்சியில் அவர் குறித்தான பிம்பம் உயர்வதற்கும் காரணமாக இருந்தது.  அழகிரியின் இந்த போக்கை கருணாநிதியும் ஆதரித்தார். காரணம் தென் மாவட்டங்கள் எம்ஜிஆரின் கோட்டையாக இருந்ததும், அங்கு பலமாக உள்ள அதிமுகவை சந்திக்க அழகிரியால் முடியும் என நம்பியதுமே! திருமங்கலம் இடைதேர்தலில் அழகிரியின் ஃபார்முலா(நாடு முழுக்க இந்த ஃபார்முலா கடுமையாக விமர்சிக்கப்பட்டது)  திமுகவுக்கு வெற்றியைத் தேடித் தந்ததால் அவரை தொண்டர்கள் ‘அஞ்சா நெஞ்சர்’ என்றே அன்புடன அழைத்தனர்.

இருந்தபோதும் திமுக 2011 சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்தது; 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மிக மோசமான தோல்வியைத் தழுவியது. ஒரேநேரத்தில் திடீரென  திமுக, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியையும் அதிகாரத்தையும் இழந்தது. இந்த நேரத்தில் தான் ஸ்டாலின் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும் போராளியாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அழகிரி தன்னுடைய  அரசியல் பயணத்தில் பின்தங்கினார். ஸ்டாலினின் தேர்தல் நேர யுக்தியான ‘நமக்கு நாமே’ திட்டம், அவரை தன் கட்சியை  தாண்டி பலதரப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தது. அப்போது தென் மாவட்டங்களுக்கு அவர் தொடர்ந்து மேற்கொண்ட பயணங்கள் அழகிரியின் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் தன் பக்கம் சாய்க்க உதவியது.

செப்.5 இல் கலைஞர் நினைவிடம் செல்லும் பேரணியில் வாகனத்தின் மேலிருக்கும் அழகிரி

அழகிரி தொடர்ந்து ஸ்டாலினுடன் மோதல் போக்கை கையாண்டதும் குடும்பத்திலும் கட்சியிலும் தனி அணியை, குழுவை உண்டாக்கியதும் கருணாநிதிக்கு கவலையையும் அழகிரியின் மீது வெறுப்பை உண்டாக்கியது. அதேவேளையில் தன் உடல்நிலை பாதிப்படைவதை உணர்ந்த கருணாநிதி கட்சியில் ஸ்டாலினை உயர்த்த முடிவெடுத்தார்.  கட்சியை தன் கட்டுக்குள் கொண்டுவர, ஸ்டாலின் தன் ஆதரவாளார்களை கட்சியின் பொறுப்புகளில் நியமித்தார். அழகிரியின் ஆதரவாளர்களையும் கூட தன் உள்வட்டத்தில் சேர்த்துக்கொண்டார். தான் ஓரங்கட்டுப்படுவதை உணர்ந்த அழகிரியின் கோபம் எல்லைமீறியது. (ஸ்டாலின் இன்னும் சில காலம் தான் உயிரோடு இருப்பார் என கருணாநிதியிடம் கூறியது) இது அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் இருந்த தூரத்தை இன்னும் அதிகரித்தது.

அழகிரி 2014லில் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதையடுத்து, கருணாநிதிக்கு அடுத்த நிலையில் ஸ்டாலின் செயல் தலைவராக 2017-ல் நியமிக்கப்பட்டது கட்சியில் எந்த ஆராவரமுமின்றி அரங்கேறியது. ஸ்டாலின் செயல் தலைவரான பிறகு தமிழகத்தின் எந்த மூலையில் இயற்கை  பேரிடரோ விபத்தோ நடந்தால் தாமதமின்றி அங்கு சென்றார். அதுமட்டுமில்லாமல் கட்சியில் தகவல் தொழில்நுட்பத்துக்கென்று தனி துறையை உண்டாக்கி, அரசியல் நிகழ்வுகள் மீது உடனடியாக தன் கருத்துக்களை தெரிவிக்க டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்தி வருகிறார்.  இப்படியாக ஸ்டாலின் கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தலைவராகவும் ஸ்டாலின் தன்னை உருவாக்கிக்கொண்டார்.

இன்று அழகிரி திருவல்லிக்கேணியில் இருந்து கருணாநிதியின் சமாதி வரை நடத்திய அமைதி பேரணி எந்த சலசலப்பும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. கருப்பு சட்டை அணிந்து, கருணாநிதியின் 30ஆவது நினைவுநாளில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.அவ்வளவுதான். இன்றைய நாட்களில் கூட்டத்தைக் கூட்டுவதும் கூட்டத்துக்கு ஆட்களை வாங்குவதும் ஒன்றும் பெரிய விஷயமில்லை. இந்த பேரணி வேறெந்த பெரிய செய்தியையும் சொல்லவில்லை என்பதே உண்மை.

பேரணியில் கருப்பு சட்டை … ஒரு பலமிக்க தலைவரின் சரிவைத்தான் சுட்டிக் காட்டுகிறதோ?!

Share the Article

Read in : English

Exit mobile version