Read in : English
இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் முடிவில் 97,860 இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சலிங் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 11,754 பேர் குறைவு.
இந்த ஆண்டில் கவுன்சலிங் முடிவில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை மட்டுமே 95,700. அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களே பூர்த்தியாகாத நிலையில், சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களும் முழுமையாக பூர்த்தியடைந்திருக்க சாத்தியமில்லை. அண்ணா பல்கலைக்கழக நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பிரபலமான சுயநிதிக் கல்லூரிகளில் மட்டுமே இடங்கள் பெருமளவு பூர்த்தியாகியுள்ளன.
ஏற்கெனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர்கள் சேர்ந்துள்ள கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் குறைக்கப்படும் என்று அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மாணவர் சேர்க்கைக் குறைவாக உள்ள 150க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கல்வியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால், அந்தக் கல்லூரிகளில் தரம் வாய்ந்த போதிய ஆசிரியர்களை நிர்வாகங்கள் நியமிக்குமா என்பதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியுமா என்பதும் சந்தேகமே.
அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கான முதல் செமஸ்டர் தேர்வில் 43 பொறியியல் கல்லூரிகளிலிருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை என்ற செய்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 141 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம் இருந்தது என்பதைப் பார்க்கும்போது அந்தக் கல்லூரிகளின் தரம் புரிந்து விடும். மாணவர் சேர்க்கைக் குறைவான கல்லூரிகளில் இந்த நிலை இனியும் தொடரலாம் என்று சில கல்வியாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
பொறியியல் கல்லூரிகளில் குறைந்தபட்ச மாணவர்கள் கூட சேராத நிலையில், அந்தக் கல்லூரிகள் மூடும் நிலை உருவானால், அந்தக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் கதி என்ன ஆகும்? மூடாமல் இருந்தாலும் அந்த மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்குமா? குறைந்த எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடந்துள்ள கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம்தான் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வியின் இந்த அவல நிலைமை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்கிறார் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன்.
Read in : English