Read in : English
தூத்துக்குடியில் கடந்த மேய் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது,போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர் கோயில் பிச்சை மகன் கிளாஸ்டனும் பலியானார்.
இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசனைக் கொண்ட ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்தது. இந்த தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்புடைய பலரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் துப்பாக்கி சூடு குறித்த சாட்சிகள் எவர் வேண்டுமானாலும் ஆணையம் முன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, துப்பாக்கி சூட்டில் பலியான கிளாட்சனின் வீட்டிற்கு ஆணையம் தரப்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதைப் பிரித்துப் பார்த்த கிளாட்ஸனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், கிளாட்சனை ஆணையம் முன்பு நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. மேலும், அதில் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிப் பகுதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 22-05-2018 அன்று நடந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் அதன் விளைவாக நிகழ்ந்த இறப்புகள் மற்றும் காயங்கள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் அது தொடர்பான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விசாரிக்க வரும் 29 ஆம் தேதி காலை 10 மணியளவில் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் இருக்கும் அரசு சுற்றுலா மாளிகையில் செயல்படும் விசாரணை கமிஷன் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் கீழே கோர்ட் ஆபீஸர் என ஒருவரின் கையெழுத்தும் கிளாட்ஸனின் முழு முகவரியுடன் 13-08-2018 தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞரும், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில செயலாளருமான வழக்கறிஞர் ஷாஜி செல்லன் ” இந்த விசாரணை கமிஷன் ஆரம்பம் முதலே சட்டத்திற்கு மாறாகவே அமைக்கப்பட்டது. அதை அமைக்கும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் நடந்த துப்பாக்கி சூடு என்ற ரீதியில் அரசாணை வெளியிட்டார்கள். அதாவது முன்கூட்டியே அரசாணையில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தான் துப்பாக்கி சூடு நடந்தது எனக் கூறிக் கொண்டார்கள். அதன் பின்னர், நீதிபதி அருணா ஜெகதீசன் முதலில், நேரில் கண்ட சாட்சிகள் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி சாட்சி சொல்லலாம் என அறிவிக்கை கொடுத்தார்கள். அதுவும் கூட விசாரணைக் கமிஷன் விதிகளுக்கு எதிரானதாக இருந்தது. அதன் மூலம் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் ஆணையம் முன் சாட்சியம் அளிக்க இயலாத நிலை ஏற்பட்டது. நாங்கள், இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து, அரசும், விசாரணை கமிஷனும் தத்தம் தவறுகளை திருத்திக் கொண்டன. அதனைத் தொடர்ந்தே அனைவரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த விபரங்களை சொல்லலாம் என்ற நிலை உருவானது. இந்நிலையில், இறந்தவருக்கு சம்மன் இந்த ஆணையத்தின் தரப்பில் அனுப்பியுள்ளனர். என்னைக் கேட்டால் இந்த விசாரணை ஆணையமே ஒரு கண் துடைப்புத் தான்.” என்றார் அவர். ஷாஜி செல்லன் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read in : English