Read in : English
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நான்காவது கட்ட கவுன்சலிங் முடிவில் மொத்தம் 1,15,390 இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், ஐந்தாம் கட்ட இறுதிக் கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டிய மாணவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரம் மட்டுமே.
எனவே, இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் முடிவில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொறியியல் மாணவர் சேர்க்கையில் ஐந்தாம் சுற்று மட்டுமே இருக்கும் சூழ்நிலையில், 36 பொறியியல் கல்லூரிகளில் இன்னமும் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 18 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 81 கல்லூரிகளில் ஐந்துக்கும் குறைவான மாணவர்களும் 120 கல்லூரிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்களும் சேர்ந்துள்ளனர். 299 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். 50 சதவீதத்துக்கும் அதிகமாக மாணவர்கள் சேர்ந்துள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை 81 மட்டுமே.
முதல் கட்ட கவுன்சலிங்கிலிருந்து ஒவ்வொரு கட்ட கவுன்சலிங்கிலும் இடங்கள் முழுமையாகப் பூர்த்தியாகாமல் காலி இடங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. நான்காவது கட்ட கவுன்சலிங்கிற்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 23,212. அதில் பணம் செலுத்திப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 18,406. அதில் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்த 17,238 பேரில் 15,864 பேருக்குத் தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடந்து முடிந்த நான்காவது கட்ட கவுன்சலிங்கின் முடிவில், இதுவரை 51,900 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 125 கட் ஆஃப் மதிப்பெண்களுக்குக் கீழ் உள்ள 26 ஆயிரம் மாணவர்கள் ஐந்தாவது சுற்று கவுன்சலிங்கில் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல, தொழிற் பயிற்சி மாணவர்களுக்கான கவுன்சலிங் முடிவிலும் பி.ஆர்க். மாணவர்களுக்கான கவுன்சலிங் முடிவிலும் கூட காலி இடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Read in : English