Read in : English

கர்நாடக இசை மற்றும் பக்திப் பாடகருமான ஓ.எஸ்.அருண், கர்நாடக ராகங்களில் அமைக்கப்பட்ட ‘ஏசுவின் சங்கமே சங்கீதம்’ என்ற தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். கிறிஸ்தவ பாடல்களுக்கு கர்நாடக இசையைப் பயன்படுத்துவதற்கு சில இந்து-வலதுசாரிகள் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததன் காரணமாக, பாடகர் அருண் இந்த நிகழ்ச்சியைத் தவிர்க்க முடிவு செய்திருந்தார். இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பிரபல திரை இசை அமைப்பாளர் ஷியாம் ஜோசப், தமிழ் மற்றும்  மலையாள மொழிகளில் பல்வேறு கிறிஸ்துவ ஆல்பங்களை உருவாக்கியவர். இந்த இசை நிகழ்ச்சியைக் குறித்தும் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் ஷியாம் இன்மதி.காமிற்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், நிகழ்ச்சி ரத்தானது தனக்கு மிகவும் வேதனையளிப்பதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இசை என்பது அனைவருக்குமானது; உலகமயமானது. மொழி மற்றும் மதத்தைத் தாண்டி புனிதமானது. இந்த நிகழ்ச்சிக் குறித்து உருவாக்கப்பட்ட சர்ச்சைகள் தேவையற்றது. எங்களுக்கு கர்நாடக இசையை இதன்மூலம் கீழ்மைப்படுத்தும் நோக்கம் துளி கூட இல்லை. இந்த ஆல்பத்தின் மூலம் ராகங்களையும்  கர்நாடக இசையையும்  மேன்மையான ஓரிடத்தில் வைக்கவே நாங்கள் கருதினோம்” என்றார் ஷியாம். 

“இசைப் பொதுவானது. இதில் இருக்கும் ஏழு ஸ்வரங்கள் தான் எல்லா இசை வடிவங்களுக்கும் அடிப்படையானது. இந்த ஏழு ஸ்வரங்களும் இறைவனால் வழங்கப்பட்டது. கர்நாடக இசை மற்றும் தேவாரப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்துவ பக்தி பாடல்களை பாடுவது புதிது அல்ல” என்கிறார் ஷியாம்.  

மேலும், சில உதாரணங்களை சுட்டிக்காட்டிய ஷியாம்,  ”தியாகராஜ பாகவதரின் சமகாலத்தில் வாழ்ந்த வேதநாயகம் சாஸ்திரியார் (1774-1864)சரபோஜி மன்னன் அரசவையில் கர்நாடக இசையின் அடிப்படையில் பல கிறிஸ்துவ பக்தி பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார். அவர் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பக்தி பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார். இந்த பாடல்கள், சரபோஜி மன்னனின் அரசவைக் கூடத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாது அதற்கு வெளியில்  நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் ஏராளமான மக்கள் கேட்டு ரசித்தனர். இது 200 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த சம்பவங்கள். தமிழகத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பாடல்களை, இக்காலத்து மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் மேன்மையான அப்பாடல்களை இப்போது வழங்க நினைத்தோம்” என்று உருக்கமாகத் தெரிவித்தார் ஷியாம். அதேபோல, ஜான் பால்மர், மரியன் உபதேசியார், ஹென்றி அல்பிரட் கிருஷ்ணா பிள்ளை, சாமுவேல் ஆகியோர் பல ஆண்டுகளுக்கு முன்பு இசையமைத்த  தமிழ் கிறிஸ்தவ பாடல்களையும் கொடுக்க நினைத்ததாக கூறும் அவர், இந்த பாடல்களும் கூட கர்நாடக இசை மற்றும் தேவாரப் பாடல் ராகங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டவை என்றார்.

“அதற்காக அனுபவம் வாய்ந்த கர்நாடக இசை பாடகர் ஓ.எஸ்.அருணை நாடினோம். ஏனென்றால் இப்பாடல்கள் எல்லாம் கர்நாடக இசையின் அடிப்படையில் பாடப்பட்டவை. கர்நாடக இசைப்பாடகர்களால் மட்டுமே இப்பாடல்களை சிறப்பாக வழங்க முடியும்; கர்நாடக இசைப் பாணியில் அமைக்கப்பட்ட அப்பாடல்களில் வரும் கமகங்களை (இசைவடிவங்கள்) அவர்களால் மட்டுமே  சிறப்பாகப் பாடமுடியும்” என்று தன் தரப்பை நியாயப்படுத்தினார் ஷியாம். 

இப்பாடல்கள்,  சங்கராபரணம், மோஹனம், தோடி, கல்யாணி, கம்பீரநாட்டை, பிலஹரி போன்ற ராகங்களில் அமைந்தவை. தில்லானாக்களின் தாக்கமும் உண்டு. இப்பாடல்கள் 150-200 வருடங்களுக்கு முன்னால் இயற்றப்பட்டதால் அதன் இசைக்குறிப்புகள் (Notations) பலவும் காணக் கிடைக்காமல் போய்விட்டன.  “இந்த இசைக்குறிப்புகளை மீட்டுருவாக்கம் செய்து அதன் மூலம் இன்றைய காலக்கட்டத்தின் இசை ரசிகர்களுக்கு அதன் மேன்மையைத் தெரியப்படுத்தும் வகையில்  அப்பாடல்களை வழங்க நினைத்தோம்” என்று கூறினார் ஷியாம்.  

ஓ.எஸ்.அருண் நிகழ்ச்சியை பொறுத்தவரை, இது வழக்கமான கர்நாடக இசை நிகழ்ச்சியாகவே, பாரம்பரிய இசைக்கருவிகளான வயலின், மிருதங்கம், கஞ்சிரா கொண்டு அமைந்த நிகழ்ச்சியாக  நடத்த திட்டமிடப்பட்டது. இதன் மூலம் கர் நாடக இசையை எந்த வகையிலும் கீழ்மைப்படுத்தவோ, தரம் குறைக்கவோ நாங்கள் எண்ணவில்லை.  மாறாக, இந்த நிகழ்ச்சியின் மூலம் பெருவாரியான இசை ரசிகர்களிடம் கர்நாடக இசையை கொண்டு போய் சேர்ப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. என்றார் ஷியாம்.

கடந்த காலங்களில், இந்துமத பக்தி பாடல்களை பல கிறிஸ்துவர்களும் கூட பாடியுள்ளனர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஆங்கிலேயேரான  ஜான் ஹிக்கின்ஸ்  பல கர் நாடக இசைக் கச்சேரிகளை தமிழ் நாட்டிலும் வெளி நாடுகளிலும் நட்த்தியுள்ளார். ‘’இந்து  மத்த்தை சார்ந்த இசையமைப்பாளர்கள், கிறிஸ்துவ பக்தி பாடல்களுக்கும், திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளனர். ஞானசௌந்தரி என்ற திரைப்படத்துக்கு எஸ்.வி வெங்கட் ராமன் இசையமைத்தார். அப்படம் வெற்றி பெற அப்பட்த்தின் பாடல்களும் ஒரு முக்கிய காரணம்” என்று நினைவுகூர்கிறார் ஷியாம்.   

ஞானசௌந்தரி திரைப்படம், நவாப் ராஜமாணிக்கம் வடிவமைத்த மேடை நாடகத்தில் இருந்து உருவான படம். அவரும் அந்த நாடகத்தை ஒரு கிறிஸ்துவ பழங்கதையிலிருந்துதான் உருவாக்கினார். இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதற்கு எஸ்.வி.வெங்கட் ராமன் இசையமைத்ததுதான் காரணம். இவர் இந்து புராணக் கதைகளைக்கொண்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பாடகி பி.ஏ.பெரிய நாயகி, எம்.வி.ராஜம்மாவுக்கு  பாடிய பாடல்கள் பிரபலமடைந்தன. ‘அருள் தரும் தேவ மாதாவே’ பாடலை பெரியநாயகியும் ஜிக்கியும் பாடினார்கள். அது இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. 

டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா, பிபி சீனிவாஸ் மற்றும் எஸ்.ஜானகி உள்ளிட்டோர் பல படங்களில் வரும், கிறிஸ்துவ பாடல்களையும் பாடியுள்ளது குறித்து கேட்டதற்கு, ‘’ஆம், அவர்கள் பல கிறிஸ்துவ இசை ஆல்பங்களுக்கு பாடியுள்ளனர். அவை அனைத்தும் புகழ்பெற்றவை. ஆனால் அவர்களுக்கு எதிராக யாரும் அன்று குரல் கொடுக்கவில்லை. இசை பொதுவானது; பக்தி நிறைந்தது என்று கருத வேண்டும். கடந்த காலங்களில் இசை, எந்த மொழி என்றோஅல்லது எந்த மதம் என்றோ யாரும் சிந்தித்த்து கிடையாது’’ என்றார் ஷியாம்.  பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மலை பிரசங்கர் என்னும்  கிறிஸ்தவ பக்தி ஆல்பத்தில் பாடியுள்ளார். அவருடன் இணைந்து  நானும் ஒரு பாடல் பாடியுள்ளேன். நாங்கள் அதை அனுபவித்து பாடினோம்’’ என்று பகிர்ந்தார்.  

இசை கலைஞர்கள்  ஹேண்டெல் மானுவெல்,  ஜோசப் கிருஷ்ணா ஆகியோர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பணியாற்றியது குறித்தும், விஜய் மானுவெல் இளையராஜாவுடனும், செபஸ்டியன் இந்தி திரையிசையில் ஷங்கர் ஜெய்கிஷனுடன் பணியாற்றியது  குறித்தும் , இந்த கிறிஸ்துவ இசை கலைஞர்கள் திரையிசையின் பின்னணி இசையில் இருந்த ஆர்கெஸ்ட்ரா ஏற்பாடுகளிலும், மேற்கத்திய இசைக்கருவிகளை அவர்கள் பயன்படுத்திய விதம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்து அவரிடம் கேட்டதற்கு ‘’அது உண்மைதான். இது ஒரு போதும் மதம் குறித்த கேள்வி அல்ல. அந்த கலைஞர்கள் இந்து, கிறிஸ்து, இஸ்லாம் பக்தி பாட்ல்களிலும் தங்கள் தொழில்முறையை நிரூபிக்கும்  வகையில் அர்ப்பணிப்போடு பங்களித்தனர். இந்தி திரையுலகில் பெரிய இசையமைப்பாளர்களிடம் பணியாற்றும் இசைக் கலைஞர்கள் கிறிஸ்துவ பின்னணியில் கோவாவில் இருந்து  வந்தவர்கள். இவர்கள் பல நேரங்களில் இசைக்குழுக்களின் முதுகெலும்பாகவே இருந்துள்ளனர் ’’  என பதிலளித்தார் ஷியாம். 

‘’இசை என்பது கொடுக்கல் வாங்கல் போன்றதாகும். இசைக்காக ஒருத்தர் சண்டையிடக் கூடாது. ஓ.எஸ்.அருணின் விஷயத்தில் நடந்தது துரதிஷ்டவசமானது. அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது. இசை ஒற்றுமைகாகவும் நல்லிணக்கத்துக்காகவும் உருவாக்கப்பட்ட து’’ என்றார் கவலையுடன். 

இந்த இசை நிகழ்ச்சி இன்னொரு நாள் நடத்தப்படுமா என்று கேட்டதற்கு, ‘’இந்த நிகழ்ச்சியை தடையின்றி வேறொரு நாள் நடத்த நினைக்கிறோம். வேறு ஒரு இசைக் கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படலாம்” என்றார்.  

பாடகர் யேசுதாஸ் கர்நாடக இசைக் கச்சேரிகளை நடத்துவது சரியா? முத்துசாமி தீட்சிதர் மேற்கத்திய இசையிலும், கிறிஸ்துவ பாடல்களில் இருக்கும் இசைக் கோர்வையை எடுத்து தமிழ் பாடல்களை இசையமைத்தது தவறா? நான் ஷியாம் வீட்டை விட்டு வெளியே வந்த போது எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய அம்மன் பாடல்கள் பல இந்து கோயில்களில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளின் மூலம் காதி விழுந்த்து. ‘மாரியம்மா’, ‘முத்து மாரியம்மா’, ‘செல்லாத்தா’, ‘கற்பூர நாயகியே’ போன்ற பாடல்கள் இந்து பக்தர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த ஆல்பங்களின் சிடிக்கள் பல ஆயிரக்கணக்கில் விற்றுக்கொண்டிருக்கின்றன. ஒன்று தெரியுமா? எல்.ஆர்.ஈஸ்வரியின் பெயர் லூர்து மேரி  ராஜேஸ்வரி. அவர் ஒரு கிறிஸ்துவர். ஆனால் அவரது பாடல்கள் ஒலிக்காத அம்மன், காளி கோயில்களை  நினைத்துக் கூட பார்க்க முடியாது .

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival