Site icon இன்மதி

பல்கலைக்கழகங்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்

துணைவேந்தர் பதவியிலிருந்து மற்ற உயர் அதிகாரி பணி நியமனங்கள் வரை நேர்மையானவர்களை நியமித்தால்தான் பல்கலைக்கழக முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

தகுதியில்லாவர்களைத் துணைவேந்தர்களாக நியமித்தால், அவர்கள் பணம் வசூலிக்கும் ஏஜெண்டுகளைப் போல செயல்படுவதையும் பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெறுவதையும் தடுக்க முடியாது என்கிறார்கள் அவர்கள்.

“என்னதான் கடுமையான சட்ட விதிமுறைகளைக் கொண்டு வந்தாலும், நேர்மையான துணைவேந்தரும் உயர் அதிகாரிகளும் இல்லாமல் முறைகேடுகளைத் தடுக்க முடியாது ” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கான்பூர் ஐஐடி ஆட்சி மன்றக் குழு முன்னாள் தலைவருமான மு. ஆனந்தகிருஷ்ணன்.

“ஆசிரியர் நியமனம் முதல் பல நிலைகளிலும் ஊழல் நிலவும் பல்கலைக்கழகங்களில் இந்த முறைகேடுகளைத் தடுக்க எளிமையான தீர்வு கிடையாது. ஊழலுக்கும், அரசியல்வாதிகளின் முறைகேடுகளுக்கும் துணைபோகாத நேர்மையான தைரியமான துணைவேந்தர்கள் இருந்தால்தான் பல்கலைக்கழக அளவில் முறைகேடுகளைத் தடுக்க முடியும். அவருக்குக் கீழ் பணிபுரியும் உயர் அதிகாரிகளும் தவறுகள் செய்யப் பயப்படுவார்கள்” என்கிறார் அவர்.

“அண்ணா பல்கலைக்கழகத்தில் 2011- 12 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தேர்வுத்துறையிலிருந்து 3 துணை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதுகுறித்த விசாரணை என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, தேர்வு முறைகேடுகளைத் தடுக்க எந்த அமைப்புகளை உருவாக்கினாலும் நேர்மையானவர்கள் இல்லாவிட்டால் முறைகேடுகள் எந்த வழிகளிலாவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனவே, பல்கலைக்கழகத்தில் நேர்மையான திறமையாளர்களை துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். தகுதியில்லாதவர்களை நியமித்தால் அவர்கள் பணம் சம்பாதிக்கும் ஏஜெண்டுகள் போல செயல்படுவார்கள் என்கிறார்.

விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடுகளில்  சுயநிதிக் கல்லூரி நிர்வாகங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளை எழுதியவர்களில் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்த 3,02,380 பேரில் 73,733 பேர் தேர்ச்சி பெற்றனர். 16,636 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, சில பேராசிரியர்கள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குத் தொடர்ந்துள்ளது. சான்றிதழ் அச்சிட்டுவதில் நடந்துள்ள ஊழலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார்.

“பல சுயநிதிக் கல்லூரிகள் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. எனவே, இந்த விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடுகளில்  சுயநிதிக் கல்லூரி நிர்வாகங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இந்த ஊழலுக்குத் துணையாக இடைத்தரகர்களாக யார் இருந்தார்கள் என்பது குறித்தும் இந்த முறைகேட்டில் அரசியல், அதிகாரிகள் தொடர்புகள் இருக்கிறதா என்பது குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்பதே பல கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்திலிருந்து, பேராசிரியர்கள் நியமனம் வரை பல்வேறு தளங்களில் நடைபெற்ற மற்ற ஊழல்கள் குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், இதைத் தடுக்கவும் இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் இல்லையே ஏன்  என்பது சில சமூக ஆர்வலர்களின் கேள்வி. ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது?

Share the Article
Exit mobile version