Site icon இன்மதி

ஏற்பாடுகள் குறித்து கருணாநிதியின் குடும்பத்தினர் முதல்வருடன் சந்திப்பு

Read in : English

திமுக தலைவர் மு. கருணாநிதியின் வாரிசுகளான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமியை சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று(ஆகஸ்டு 7, 2018) சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது திமுகவின் மூத்த தலைவர்கள் தி.ஆர்.பாலு, முரசொலி செல்வம், ஐ.பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

சென்னையில்  காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் கருணாந்தியின் உடல்நிலை ஆகஸ்டு 6ஆம் தேதியிலிருந்து மிகவும் மோசமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.அதனையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை முன்பு குழுமியிருக்கும் தொண்டர்களை அமைதிப்படுத்தும் முயற்சிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் சந்தித்துள்ளனர். தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் முதல்வரை சந்தித்துள்ளார்.

தமிழக காவல்துறை டிஜிபி மாநிலம் முழுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து டிஜிபி அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியில்,அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அவரவர் பகுதிகளில் இருக்க வேண்டும்; அந்தந்த மாவட்ட எஸ்.பி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பந்தோபஸ்து நடவடிக்கைகளுக்காக தகவல் கொடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

மு.கருணாநிதி கடந்த ஜூலை 26ஆம் தேதி இரவு இரத்த அழுத்தம் குறைந்த காரணாத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவரது உடல்நிலை சீரானது. சிறுநீரக வழி தொற்று உண்டானதால் காய்ச்சல் ஏற்பட்டது என மருத்துமனை அறிக்கையில் குறிப்பிட்டார்கள். அதனையடுத்து காய்ச்சலை குணப்படுத்தியதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்தார்கள். ஆனால் நேற்று(ஆகஸ்டு 6, 2018) மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது முக்கிய உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாக கூறப்பட்டிருந்தது. தற்போது வெளிவந்துள்ள அறிக்கையில் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

Share the Article

Read in : English

Exit mobile version