Site icon இன்மதி

என்றும் மறையாத உதய சூரியன்!

Read in : English

கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும் எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.

அவருக்கு வயது 94. சமீப காலமாக உடல் நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்த போதிலும்கூட, திடீர் உடல்நலக் குறைவு இந்த திராவிட இயக்கத் தூணை தமிழக மக்களிடமிருந்து பிரித்து விட்டது.

சாதாரண கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த இந்த காவிரியின் மைந்தர், தனது உழைப்பு காரணமாக அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வர் பதவியை எட்டிப் பிடித்ததுடன், ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்திருக்கிறார்.  ஐம்பது ஆண்டு காலம் திமுகவின் அசைக்க முடியாத தலைவர். போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி வகை சூடிய அவர், போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வென்ற ஒரே தலைவர் என்ற சாதனை படைத்தவர் கருணாநிதி..

பாரசக்தி போன்ற திரைப்படங்களில் தனது கூர்மையான வசனங்களாலும் மேடைப்பேச்சாலும் சாமானிய மக்களின் மனங்களில் இடம் பெற்றவர். பத்திரிகையையும் மேடைப் பேச்சையும் அரசியல் பிரச்சாரத்துக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திய அவர், கதை, கட்டுரை, கவிதை என்று எழுத்துலகின் பல தளங்களிலும் சிறகு விரித்த கலைஞர். அவரைப் போல தனது பத்திரிகை எழுத்துகளின் மூலம் கட்சித் தொண்டர்களிடம் உரையாடிய தலைவர்கள் அபூர்வம்.

அவசர நிலைக்கு எதிர்ப்பு, இலங்கைத் தமிழருக்கு ஆதரவு ஆகிய காரணங்களால் இரண்டு முறை ஆட்சியை இழந்தபோதிலும் தோல்வியைக் கண்டு துவண்டு போகாதவர். கட்சியின் தேர்தல் தோல்விகளோ, கட்சிப் பிளவுகளோ, அரசியல் அடக்கு முறைகளை  எந்த விதத்திலும் அவரை பாதித்ததில்லை. கட்சியின் உடன் பிறப்புகளை அரவணைத்து தனது அரசியல் நெடும் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்தவர். அகில இந்திய அரசியலும் தனது முத்திரையைப் பதித்தவர்.

.சட்டமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவற மாட்டார். கேள்வி நேரம் என்றால் அவர் நிச்சயம் இருப்பார். அதேபோல முக்கிய விவாதம் களைகட்டுகிறது என்றால் முதல்வர் அறையிலிருந்து சபைக்கு விரைந்து வந்து விடுவார். அனல் பறக்கும கருத்துகளுடன் அவரது பேச்சில் அவ்வப்போது வரும் நகைச்சுவையுணர்வையும் யாரும் மறக்க முடியாது. முதல்வராக இருக்கும் போது அவரது மேஜையில் கோப்புகள் தேங்காது. அவரது ஒரு நாள் நிகழ்ச்சி பார்ப்பவர்கள், அவரது கடும் உழைப்புக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. பத்திரிகையாளர்களின் எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயங்காதவர்.

அவரது கருத்துகளை ஏற்காதவர்கள்கூட, தமிழக வரலாற்றில் அவரைத் தவிர்த்து விட முடியாது. அவரது தனது பணிகளின் மூலம் தமிழக வரலாற்றில் தனது சுவடுகளைப் பதித்துச் சென்றிருக்கிறார். அவரது மறைவின் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாரும் எளிதாக நிரப்பிவிட முடியாது. என்றும் மறையாது உதய சூரியன்!

Share the Article

Read in : English

Exit mobile version