Site icon இன்மதி

அரசுப் பள்ளியிலிருந்து ஒரு மாணவருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்!

Read in : English

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் ஒரே ஒரு மாணவருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

கடலூர் மாவட்டம் மாப்புடையூர் அரசு மங்களூர் மாதிரிப் பள்ளி மாணவரான டி. அலெக்ஸ் பாண்டியன் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 306 மதிப்பெண்கள் பெற்றார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவருக்கு திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைத்தது.

அலெக்ஸ் பாண்டியன்

“ஏழாம் வகுப்பு வரை பக்கத்து ஊரில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்தேன். எங்க ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் இங்கிலீஷ் மீடியம் இருந்ததால் எட்டாம் வகுப்பில் அங்கு சேர்ந்தேன். எஸ்எஸ்எல்சி தேர்வில் 500க்கு 465 மார்க் எடுத்தேன். பிளஸ் ஒன் வகுப்பில் உயிரியல், கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப் பிரிவை எடுத்துப் படித்தேன்.  பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1111 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றேன்” என்கிறார் அலெக்ஸ்.

`உனக்கு விருப்பமானதைப் படி என்று அப்பா, அம்மா சொன்னார்கள். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்புறம், எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆசிரியர்கள் எனக்கு உற்சாகமூட்டி எனது படிப்புக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள். சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு நடத்திய நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து 25 நாட்கள் பயிற்சி பெற்றேன். நீட் தேர்வில் 306 மதிப்பெண்கள் பெற்ற எனக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது” என்கிறார் அவர்..

புதிய உற்சாகத்துடன் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு முதல் நாள் வந்த அவர், வீட்டை விட்டு வெளியில் வந்து விடுதியில் தங்கிப் படிப்பது இதுதான் முதல் முறை என்கிறார். எம்பிபிஎஸ் படித்து விட்டு எம்டி படிக்க வேண்டும் என்பது அவரது எதிர்கால லட்சியம்.

 

பிஏ படித்த அலெக்ஸின் அப்பா தங்கராஜன் சத்துணவுக்கூட பொறுப்பாளர். அவரது தாய் மாரிமுத்தாயா வீட்டை கவனித்துக் கொள்கிறார். அலெக்ஸ் பாண்டியனின் அண்ணன் வினோதகன் பி.டெக். (ஐ.டி.) படித்து விட்டு வேலை செய்கிறார். அக்காள் வினோதனி பிஎஸ்சி நர்சிங் படித்து விட்டு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்கிறார்.

நீட் தேர்வு இல்லாமல் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் அட்மிஷன் நடைபெற்ற 2016இல் 30 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த ஆண்டில் (2017) அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் இரண்டு பேருக்குத்தான் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது.  இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தது அலெக்ஸ் மட்டும்தான்.

இந்த ஆண்டு தமிழில் தேர்வு எழுதிய 24,700 பேரில் யாருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்ததாகத் தகவல் இல்லை. நீட் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட தவறுகளுக்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய கருணை மதிப்பெண்களை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

Share the Article

Read in : English

Exit mobile version