Read in : English
பழமை வாய்ந்த கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் சிவில் பட்டப் படிப்பில் சேர்ந்து படித்து, 92.3 சதவீத மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார் க.பா. அகிலா.
திண்டிவனம் ரோசனை தாய்த் தமிழ் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அகிலா, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்றார். பின்னர், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்து தமிழ் வழியில் படித்த அவர் பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1133 மதிப்பெண்கள் பெற்றார். அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள் 193.23.
கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ் வழி சிவில் பட்டப் படிப்பில் 2013ஆம் ஆண்டில் சேர்ந்து கடந்த ஆண்டில் படிப்பை முடித்தார். சமீபத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறந்த மாணவிக்கான தங்கப்பதக்கத்தை ஆளுநர் வழங்கினார். அத்துடன் அறக்கட்டளை கல்வி உதவித்தொகை பரிசும் பல்வேறு பதக்கங்களும் கிடைத்தன. வகுப்பில் முதலாண்டிலிருந்தே முதல் ரேங்க் மாணவி என்பதால் கல்லூரி ஆண்டு விழாவில், சிறந்த மாணவிக்கான விருது பெற்றவர் அகிலா. இதுதவிர, சிறந்த முன்னாள் மாணவருக்கான விருதும் கிடைத்தது.
“முதல் செமஸ்டருக்கு மட்டும் தமிழ் வழியில் பாடப்புத்தகம் கொடுத்தார்கள். பின்னர், அடுத்த செமஸ்டர்களுக்கு தமிழில் புத்தகம் இல்லை. அதற்கான சில புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்துப் படிக்க வேண்டும். சில பேராசிரியர்கள் தமிழில் பாடம் நடத்துவார்கள். சிலர் ஆங்கிலத்தில் நடத்துவார்கள். சிலர் தமிழும் ஆங்கிலமும் கலந்து பாடம் நடத்துவார்கள். தேர்வுகளில் சிலர் தமிழில் எழுதினார்கள். சிலர் ஆங்கிலத்தில் எழுதினார்கள். படித்து முடித்த பிறகு, வளாக நேர்காணல் மூலம் எனது சிவில் படிப்புக்கு ஏற்ற நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை. தகவல் தொழில்நுட்பத் துறை பணிகளில் சேருவதில் ஆர்வமில்லை. மேலும் படிக்க விரும்புகிறேன்” என்கிறார் அகிலா.
எம்இ படிப்பதற்காக டான்செட் நுழைவுத் தேர்வு எழுதி அதில் 40.8 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். எனவே, கிண்டி பொறியியல் கல்லூரியிலியே எம்.இ. படிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் .
தாய்மொழி வழிக் கல்விக்காக திண்டிவனம் ரோசனையில் தாய் தமிழ் பள்ளியை உருவாக்கி நடத்துவதில் முக்கியப பங்கு வகித்து வரும் பேராசிரியர் பிரபா கல்விமணியின் (கல்யாணி) பேத்தி அகிலா.
Read in : English